மனக்குமுறல்கள்

எரிமலையாய் வெடிக்கிறது இதயம்
எண்ணிப் பார்க்கையில் இவ்வுலகை !
சரிந்திட்டச் சமுதாயம் எழுந்திட்டால்
சமத்துவ சமூகம் நிலைத்திட்டால்
குமுறல்கள் மனதில் அடங்கிடுமே
குளிர்ந்த நெஞ்சாய் மாறிடுமே !

விஞ்ஞான உலகில் விந்தையாக
மெய்ஞ்ஞான நிலையில் மயங்கி
பகுத்தறிவு சிந்தனையைத் துறந்து
சமயத்தின் பெயரால் பிரிவுகளாய்
சாதியின் வேறுபாட்டால் கூறுகளாய்
துண்டாகி நிற்பதுவும் தேவைதானா !

நாகரீக மோகத்தில் சிக்கியதால்
சிதைந்தப் பண்பாட்டால் நம்மினம்
கூர்மழுங்கிய ஈட்டியாய் மாறியதே !
ஒற்றுமை உணர்வும் ஒளியிழந்து
நிலவிலா இரவாகி இருப்பதேன் !

சாதிக்கொரு சங்கமென உருவெடுத்து
வீதிகளில் உலாவருது விளையாட்டாய் !
உருவாகும் நீர்க்குமிழி கரைவதுபோல
உதிக்கின்றக் கட்சிகளும் மறைகிறது !
இடைப்பட்டக் காலத்தில் விளைகிறது
ஊன்றிய வித்துக்களாய் வன்முறைகள் !

வாழ்ந்திடப் பிறந்தவன் வரிசையில் இன்று
தாழ்ந்திட்ட நிலையில் வங்கிகளில் நின்று !
உழைத்தப் பணத்தைப் பார்க்கவும் இயலாது
களைத்துச் சாகிறான் கைகளில் கிடைக்காது !
பயிரால் வாழ்ந்தவன் உயிரை விடுகிறான்
வறட்சியைக் கண்டதும் தற்கொலை முடிவால் !

வேதனையால் வாடுது காணும் காட்சிகளால்
சாதனை என்கிறார் சாதிக்காமல் ஆள்பவர்கள் !
என்றுதான் விடியுமோ ஏழ்மையும் ஒழியுமோ
அன்றுதான் குமுறல்கள் அடங்கிடும் மனதினில் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Jan-17, 7:35 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 217

மேலே