பொங்கல் கொண்டாட்டம் - கவியரங்கம்

தமிழ்வணக்கம்:-

காவியம் படைத்திடும் தமிழே -- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்


தாய்மொழி நன்றாம் பேசுதல் கேட்டல்
----- தமிழ்மொழி சுகந்தரும் காண்க !
வாய்ப்பது வந்த போதினில் தோழா
----- வகையுற மொழியினைப் பேசு !
நோய்விழும் நேரம் நோக்கினும் மருந்தாம்
------ நோய்பிடி அகலுமே நம்பு !
காய்ந்ததோர் நெஞ்சம் கருவறை என்றே
----- காவியம் படைத்திடும் தமிழே !


அவையடக்கம் :-


தமிழ்பட்டறை தந்திடுமாம்
----- தாய்தமிழை எந்நாளும் .
தரமான எழுத்துலகின்
----- தலைசிறந்த சின்னமாம் .
தமிழர்தம் திருநாளில்
------ தப்பாது நடத்துகின்றார்
தழைக்கட்டும் நற்குழுமம்
----- தலைவணங்கிச் செப்பிடுவேன் .



தலைமை வணக்கம் :-


அன்புக்கரசியாம் அற்புதப் பெட்டகமாம்
தன்னிகரில்லாத் தலைமை அவரென்பேன்
வண்ணமிகுத் தலைப்பினை வழங்கிட்டார்
எண்ணமெலாம் பொங்கல் கொண்டாட்டமே !!!


பொங்கல் கொண்டாட்டம் - பொங்கல்

தைமகளே வாராயோ தைதையெனத் தளிர்நடையில்
வையகமும் வாழ்த்திடவே வளந்தருமே பொங்கல்தான்
கைகளிலே கரும்பினையும் கடித்திடவே இன்பமன்றோ ?
பைநிறைய நெல்லன்றோ பைந்தமிழின் மரபன்றோ?


பொங்கல் பொங்குக !மங்களம் தங்குக !
அறுவடைத் திருநாள் ! அன்பினில் பெருநாள் !
தித்திக்கும் பொங்கல் ! எத்திக்கும் இன்பம் !
உழவரின் திருநாள் ! உழைப்பவர் நன்னாள் !


தமிழரின் திருநாள் ! தலை சிறந்த பொன்னாள்!
உவப்பிலா இன்பம் ! தந்திடும் பொங்கல் !
பொங்கலின் முன்னாள் ! போகி எனும் நன்னாள் !
பழையன போக்குவோம் !புதியன புகுத்துவோம் !


சிறப்புடைப் பொங்கல் !சீர்மிகும் தமிழகம் !
பாரோர் போற்றும் பண்புடைத் திருநாள் !
ஊரோர் மகிழும் ஒப்பிலாப் பொங்கல் !
கரும்பின் இனிப்பு ! கதிரவன் வணக்கம் !


மஞ்சள் கொத்துடன் மங்காத சிறப்பு !
மகிழ்ச்சியின் திருநாள் !மனதின் நிறைவு !
மலர்களின் தோரணம் ! மங்காத இன்பம் !
துன்பங்கள் தொலைந்திடும் !தூய்மையே தங்கும்!


நன்றியுரை:-

நன்றிகள் சொல்லிடு வேன் -- நாடு
நன்மைகள் பெற்றிட வேண்டிடு வேன்.
நன்னெறி சொல்லிடும் பட்டறை -- நாளும்
நல்கியும் பல்கியும் வேண்டிடும் உறவே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Jan-17, 1:25 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 120

மேலே