அலை எழுதும் கடிதம் - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை

கடலலையும் எழுதுகின்றது
------- கடிதத்தைக் காதலிக்கே
விடலைபோல ஆர்ப்பரித்து
------ விலகாது கால்நனைத்து
சுடலைக்குப் போகுவரை
------- சுற்றிடுமே நம்காதல்
மடல்களுமே பலவந்தேன்
------- மாசற்றக் காதலினால் !!


அலையலையாய் நினைவலைகள்
------- அரங்கேற்றம் என்னிடையே
விலைகொடுக்க முடியாத
------- வியன்பொருளாய் எனதுள்ளம்
மலைமலையாய்ப் பெருகிடுமே
------- மரபான நம்காதல்
சிலைபோன்ற உனைக்கண்டு
------- சிலிர்த்திடுவேன் அலையெனவே !


எழுகின்ற கடிதத்தை
------- எப்படியோ சேர்த்துவிட்டேன்
விழுதாகி என்மீது
------- விழுன்தெழுந்தே ரசிக்கின்றாள்
பழுதுபடாக் கடல்காதல்
-------- பரவசமாய் வளர்ந்திடுமே !
அழுதழுது உனைத்தழுவ
------- ஆர்ப்பரிப்பாய் குழந்தைபோலே !கடிதத்தில் என்காதல்
------ காதலியைக் காட்டிவிட்டேன்
மடித்திடவும் இயலவில்லை
------- மதியன்றோ என்னவளே !
படித்திடவும் முடியாமல்
------ பாங்குடனே அணைத்திட்டாள்
வடித்திடவும் வார்த்தையில்லை
------- வாசமலர் அவளன்றோ ?


நிலவன்றோ என்னவளும்
------- நிசமாகிப் போவதுண்டோ
உலவுகின்றாள் வானமீதில்
------- உணர்வாளா என்காதல்
மலர்முகத்தாள் நான்கொஞ்ச
------- மனம்நெகிழ்ந்தாள் அற்றைநாள் .
பலர்கண்ணும் பட்டிடுமோ
------- பாசமுடன் பற்றினாலே !!!


என்றென்றும் இளமையுடன்
------- எவ்விடமும் இருக்கின்றாள்
நன்றாகும் நேசமுடன்
------- நற்காதல் வாழ்ந்திடுமே
ஒன்றாவோம் ஓர்நாளில்
------- ஒளிமயமாம் எதிர்காலம்
மன்றாடி வேண்டிடுவேன்
------- மதிமங்கை வருவாளே !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் .


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 11-Jan-17, 12:05 am
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 29
Close (X)

0 (0)
  

மேலே