சீமாச்சு

அவரவர் வீட்டு முன் கோலமிடுவதும் தண்ணீர் தெளிப்பதுமாக காலை வேளை  சுறுசுறுப்பாக  ஆட்கொண்டது அனைவரிலும் .     சீமாச்சு  வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் வழக்கத்தை விட சற்று பளபளத்தது. மனம் பால்ராஜிடம் வாங்கிய கடனையும் இன்று கிடைத்த ஆர்டரையும் கணக்கு போட்டது.  ஒண்டிக்கட்டைதான் ஆனால் அவருக்கும்தான் தேவைகள் இருக்கிறதே.  சீமாச்சுவை அக்கம்பக்கத்தினர் கஞ்சன் என்றுதான் பேசிக்கொள்வர். இவருக்கும் அது தெரிந்துதான் இருந்தது அதற்காக காசை அள்ளி இறைத்தால் இறுதி காலங்களில் இவர்களா சோறு போடுவார்கள் என்று மனதிற்குள் சொவ்லிக் கொள்வார்.

வாசலில் தண்ணீர் தெளித்து கூட்டி விட்டார். இவரிடம் வேலை செய்யும் அலமு வந்து இரண்டு கம்பி கோலம் இழுத்து விட்டு எத்தனை மணிக்கு எல்லாரும் வர வேண்டும் என கேட்டுச் சென்றாள்.   அலமு தவிர மூன்று பேர் இவருக்கு உதவியாக  இருப்பார்கள். இவருக்கு பிடித்த  சமையல் வேலைதான் பார்த்து பார்த்து செய்வார்.  சண்முகம் அவ்வப்போது திருமணம் காதுகுத்து என்று ஆர்டர் பிடித்து வருவான்.   நீண்ட இடைவேளைக்குப் பின்   இந்த முறை  கொண்டு வந்த ஆர்டர் பெரியது 450 பேருக்கு சமையல்.  கட்சி கூட்டமாம் சைவம்தான் வேண்டும் சமைத்து முடித்து வையுங்கள் அவர்களே வந்து பக்கத்து டவுனுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள் என்றான்.  மனம் குதூகலித்தது அடிக்கடி பயமுறுத்தும்  பால்ராஜின் முகம் நினைவுக்கு வந்தது   வாங்கிய கடனை  அசலும் வட்டியுமாக பால்ராஜிடம் கொடுத்து விட வேண்டும்.  இனி எவ்வளவு பெரிய ஆர்டராக  இருந்தாலும் சரி கடன் வாங்க கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
வேண்டிய சமையல் பொருட்களை நேற்றே அண்ணாச்சி கடையில் வாங்கி வைத்து விட்டார்.
விறுவிறுவென்று கிளம்பி   ஊர் எல்லையில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார்.  இவர்கள் சமைக்கும் இடம் கோவில் அருகில்தான் உள்ளது.   அனைவரும்     வந்து  சேர்ந்தனர்     அம்மனை  தரிசித்து விட்டு அமர்க்களமாக வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.  சமையல்  அற்புதமாக வந்து  இருந்தது.  மகிழ்ச்சியாக இதனை சண்முகத்திடம் சொல்லவேண்டும் என போனை எடுத்தார் அதற்குள் சண்முகமே அழைத்து  இருந்தான்.  ஆர்வமாக பேச ஆரம்பித்தவரிடம் சண்முகம்  இடியை இறக்கினான். கட்சி கூட்டம் ரத்தாகி விட்டதாகக் கூறி வருந்தினான். இவர் நிலைமை தெரிந்தவன் ஆகையால் வேறு ஏதேனும் ஆர்டர் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன் என தன்னாலானதை செய்வதாக நம்பிக்கை இழந்த குரலில் கூறினான். இவருக்கு பால்ராஜின் குரல் காதுகளில் கொடூரமாய் அதிர்ந்து கொண்டிருந்தது. கண்கள் இருட்டியது காலடியில் பூமி நழுவியது.

சீமாச்சுவின் வருத்தமும் வலியும் புரியாது அம்மன் சிவப்புக்கல் மூக்குத்தி ஒளிர புன்னகைத்துக் கொண்டிருந்தாள் . கண்கள் நீரைக் கொட்டவில்லை வாய் புலம்பவும் இல்லை. கண்ணீரும் வாய்ச்சொல்லும் இறுகிப்போய் விட்டது போலும் .450 பேருக்கான உணவிருந்தும் பட்டினியாய் உட்கார்ந்திருந்தார் .கோவிலின் இட மூலையில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார் .பக்தர்கள் தங்கள் நெற்றியில் இட்டது போக எஞ்சிய குங்குமம் ,திருநீறு ,மஞ்சள் எல்லாம் அந்த தூணில் கொட்டியிருந்தனர் ,அவை சீமாச்சுவின் முதுகில் கோலம் போட்டிருந்தது .அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை அவர்.

யாரோ தொலைவில் வருவது தெரிந்தது .எவ்வித சலனம் இன்றி அமர்ந்திருந்தார் . அருகில் நெருங்கிய உருவத்தை திரும்பி கூட பார்க்க எண்ணமில்லாது அமர்ந்திருந்தார் . வந்தவர் ஒரு பெண்மணி உடைகள் நைந்து போயிருந்தது ,காலில் செருப்பில்லை ,உடலில் அணிகலன் எதுவும் இல்லை கழுத்தில் மட்டும் ஒரு வெள்ளை பாசிமணி இருந்தது உடல் 45 வயது மதிக்கக்கூறியது . அவராகவே பேசிக்கொண்டார் . இன்னைக்கு என்னமோ தேருனாங்களே சுற்றிலும் பார்த்துவிட்டு அம்மனை ஏறிட்டும் நோக்காது நகர்ந்து,
ஏமாற்ற   முகத்துடன் சீமாச்சுவை நெருங்கி இன்னைக்கு ஒண்ணும் விசேஷம் இல்லிங்களா சாமி இங்க என்றார் .
எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சீமாச்சு மெதுவாக இவளை நோக்கி இல்லை என்று விட்டு திரும்ப எங்கோ பார்க்க ஆரம்பித்தார் .

அப்பெண் கோவிலை ஒருமுறைச் சுற்றிப் பார்த்துவிட்டு சீமாச்சுவின் அருகே உட்கார்ந்து , இவ்வளவு தூரம் வந்தது வீணாயிருச்சே , கட்சி கூட்டம்னாங்க அங்கயாச்சும் போயிருக்கலாம் என்று சன்னமான குரலில் பேசிக்கொண்டிருந்தாள்.

சீமாச்சு கவனம் பெற்று ,தன் கவலை மறந்தவராக என்னம்மா சொன்ன ? என்றார் . ஒண்ணும் இல்லை சாமி என்றார் .

எங்கிருந்தும்மா வர?

ஒரு நொடி சீமாச்சுவை பார்த்த அப்பெண் , ரெண்டு மைல் இருக்கும் அந்த பக்கட்டு ஒரு சமுதாயக்கூடம் இருக்குல அதுல இருக்கேன் .

நீ மட்டுமா?

இல்ல சாமி நாங்க ஒரு இருவது பேர் இருப்பம் .எனக்கு யாரும் இல்ல .நான் ஒண்டிதான் .ஆனா நா இதுக்கு முன்னாடி இருந்த கோயிலு மடத்துல இருந்த சனங்க என்கூட பழகிக்கிச்சுங்க. அதா நானும் அவுங்க கூடயே இங்க வந்துட்டேன் . சொல்ற வேலைய செய்யறது ,கிடைக்குறத சேர்ந்து சாப்பிட்டுக்குவோம் . எனக்கு இப்ப தம்பி ,தங்கச்சி,ஆய்,அப்பன் எல்லாம் வந்துருச்சி .

சீமாச்சு உள் ஒன்று ஏதோ அசைவதாய் உணர்ந்தார்.

என்கூட வாம்மா என விடுவிடுவென நடந்தார் .அப்பெண் தயக்கத்துடன் பின்னால் நடப்பதா வேண்டாமா என நின்று கொண்டிருந்தாள் . அதற்குள் சீமாச்சு ஒரு தூக்குவாளி எடுத்துக்கொண்டு வந்திருந்தார் . அப்பெண்ணிடம் ,நீ போம்மா போய் அங்க ஒரு அண்டால சாப்பாடு இருக்கும் எடுத்து இங்க கொண்டா
அவள் ஆர்வமாகி சென்று எடுத்து வந்தாள் .
நீ போய் உன்கூட தங்கியிருக்கவங்கள கூட்டிட்டு வா சாப்பிட்டு போகட்டும் என்றார் .

அவள் உற்சாகத்துடன் வேகமாய் நடந்தாள் . அரைமணி நேரத்துக்குள் இருபத்தைந்து நபர்கள் சிறியவர்களும் பெரியவர்களுமாக வந்து சேர்ந்தனர் .எல்லாம் மறந்து திருப்தியாய் சீமாச்சுவும் உதவியாளர்களும் அப்பெண்மணியும் இணைந்து சாப்பாடு பரிமாறினார்கள். கூட்டம் மகிழ்ச்சியாய் உண்டு களித்தது . 

அதற்குள் சண்முகம்  எங்கோ பிடித்து ஒரு சுற்றுலா பேருந்தையும் வேனையும் அனுப்பியிருந்தான் .அப்பெண்ணும் பரிமாறிய மற்றவர்களும் உணவருந்திவிட்டு கிணற்றடியில் தண்ணீர் இறைத்து கைகால் முகம் கழுவி துடைத்துக்கொண்டு உடைகளை திருத்திக்கொண்டு பளிச் என்று வந்தனர் .

சுற்றுலாக்குழுவினர் உணவருந்த தயாராக இவர்கள் பரிமாறி உதவினர். வேனும் பேருந்தும் சென்ற பின் அப்பெண்ணிடம் சீமாச்சு இருந்த உணவுகளை கொடுத்தனுப்பினார் . இரவு உணவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் . உங்கள் பக்கத்தில் உங்களைப்போன்று தங்கியிருப்பவர்களிடம் கொடுங்க, பாத்திரமெலாம் காலைல கொடுத்தா போறும் .

கூட்டம் ஆரவாரித்து நன்றி சொல்லி எடுத்துச்சென்றது. காலையில் பாத்திரங்கள் எல்லாம் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வரிசையாய் வந்து சேர்ந்தன சுத்தம் செய்யப்பட்டு பளிச் என . சீமாச்சுவின் மனமும் சுத்தமாயிருந்தது . கடன் கொடுத்த பால்ராஜின் கரகர குரல் மென்மையாக கேட்டது கொடுக்க வேண்டிய  கடனை.

அம்மன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் சிவப்புக்கல் மூக்குத்தி ஒளிர.


  • எழுதியவர் : அகராதி
  • நாள் : 12-Jan-17, 11:04 am
  • சேர்த்தது : aharathi
  • பார்வை : 99
Close (X)

0 (0)
  

மேலே