நினைவெல்லாம் என் நிலா - இன்னிசை வெண்பாக்கள் - மரபு கவிதை

நினைவெல்லாம் என்நிலா - கடைவரிக் கவிதை - (12 - 01 -17 )


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்


துளிர்க்கின்ற காதல் துவளா நிலைக்குச்
சளிப்பின்றி மௌனத்தின் சாட்சியாய் வந்தே
களிப்புடன் நின்றிடும் காசினி இன்பம்
தெளிவுடன் கிட்டும் தெரிந்து .


கண்டேன் கனியமுதே கன்னல் சுவைதரும்
பெண்ணே எழிலுடைய பேசாத சித்திரமே
மண்ணே மதிமுகமே மாசற்றக் காதலால்
விண்ணே வியனே வியந்து .



காதல் மொழியே கன்னியவள் பேச்சன்றோ
மோதல் விடுத்தே மோகத்தால் காதலிப்போம் .
ஓதல் இதுவே ஒழுக்கமாய் வாழ்தலே
சாதலும் போக்கிடும் சான்று .


கண்களில் நாணுதல் கண்டேன் கனவிலும் .
உண்மையைச் சொல்லுமோ உன்றன் இதயமும்
கண்களா யென்னிதயம் காணா விடில்வாடிப்
புண்களாய்ப் போகும் பொழுது .



பொழுது விடிந்த பொழுது மனத்தால்
அழுது வடித்தேன் அகமுடைந் தாலும்
உழுது விதைத்தாயே உன்றன் முகத்தை
பழுது படாமல்நீ பார்.



பார்த்ததும் என்னுள் பனிபோல் குளிர்ச்சியால்.
ஈர்த்தது உன்விழி இன்பத்தால் என்னுயிரே
நான்வரும் தோற்றம் நலமுடன் தோன்றுதோ.
நோன்பிருக் கும்காதல் நோய் .


எனையிழுக்கும் கண்களிலே என்னுள்ளம் சொல்ல
உனைத்தழுவ ஆசைகொண்டே உண்மையானக் காதல்
சினையெனவே மிக்குதடி சித்திரமே வாராய் !
நினைவெல்லாம் என்நிலா நீ .!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Jan-17, 2:35 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 72

மேலே