பகுத்தறிவுப் பொங்கல்

கடந்து முடிந்த ஆண்டுக்கு
நன்றி கூறி...
வருகின்ற ஆண்டை
எதிர் பார்த்திடும்
ஒரு நாள் திருநாள்
அது பொங்கல் நாள்...
வாழ்வின் பயணத்தில்
புதுக் கணக்குப் போடும்
பொன்னான நாள்...
ஆயிரந் தாமரை மொட்டுக்கள்
நெஞ்சில் ஆனந்தக் கும்மிகள்
கொட்டுவதாய்த்
தோன்றும் இனிய நாள்...

ஆயிரம் ஐநூறு
செல்லாமல் போகலாம்
உழுதவனின் உழைப்பு
செல்லாமல் போகாது...
மாற்றுப் பணத்தாள்
வரலாம் போகலாம்
உணவிற்கு மாற்று
என்றும் வராது...
உழவனுக்கு நன்றி
சொல்லும் ஒப்பற்ற நாள்
பொங்கல் நாள்...

சூரியன் கர்வம்
கொண்டது பொங்கல்
திருநாளில்...
பூமியில் எண்ணற்றோர்
முற்றத்திற்கு வந்து
பொங்கல் வைத்து தன்னைப்
பூஜித்துக் கொண்டதில்...

பொங்கல் திருநாள்
உற்சாகத்தைப்
புதுப்பிக்கும் நாள்...
பூஜைக்கும் சமையலுக்கும்
வாங்கிய கிழங்குகள்
முற்றியதாய்
காய்கறி வகைகள்
முற்றாததாய்ப் பார்த்துக்
கொண்டதில் தரக்கட்டுப்பாடு
புரிந்தது...

புத்தாடை வாங்கியதிலிருந்து
புத்தரிசி பொங்கியது வரை
மனது திட்டமிடலில்
தன்னை மேம்படுத்திக்
கொண்டது...

பொருள்களைப் பூப்போல
பார்த்துக் கொள்ளச்
சொன்னார்கள் பெரியவர்கள்
பூக்களை பூக்களாய்ப் பார்த்து
பூஜைக்கு வாங்கியதிலும்
வாழை இலை கிழியாமல்
வீடு கொண்டு வந்ததிலும்
பாதுகாக்கும் திறன்
வளர்ந்தது...

திறன்மிகு விளையாட்டு...
தீரம்மிகு ஜல்லிக்கட்டு (?)
போன்றவற்றால் வீரம்
வளர்ந்தது...
விவேகம் பிறந்தது...

விடுமுறை எடுக்க
வாய்ப்பே இல்லை
எனச் சொல்லாமல்
எல்லோரும் வீடுவந்து
கூடிப் பேசியது
ஒன்றாய் உட்கார்ந்து
உண்டது சாத்தியமாயிற்று..
மனம் குளிர்ந்தது...
டைனிங் டேபிளின்
அனைத்து நாற்காலிகளும்
ஆக்கிரமிக்கப் பட்டன
நீண்ட நாட்களுக்குப் பிறகு..

பச்சரிசிப் பொங்கல்
சர்க்கரைப் பொங்கல்
காய்கறிச் சாம்பார்
சிறுகிழங்குப் பொரியல்
கருணைக்கிழங்குக் கூட்டு
பூசணிக்காய்ப் பச்சடி
அவியல் வெண்டைக்காய்ப்
பொரியல் தடியங்காய் போட்ட
தயிர்ப் பச்சடி என
தமிழ் நாட்டில்
அநேகம்பேர் சைவமாகிப்
போனார்கள் இன்று
என்றும் இப்படியே இருந்தால்
அது மிக நன்று...

வாழ்த்துக்கள் பரிமாறிக்
கொண்டதில்
இறைவனை நினைத்துக்
கொண்டதில்
புத்தாடை அணிந்து கண்ணாடி
பார்த்துக் கொண்டதில்...
மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை
கவலைகள் கொஞ்சமுமில்லை..

எல்லாரும் கொண்டாடுகிறார்கள்
நாமும் கொண்டாடுகிறோம்
என்றில்லாமல்
ஏன் கொண்டாடுகிறோம்
எனத் தெரிந்து கொண்டாடும்
பகுத்தறிவுத் திருநாள்
பொங்கல் நாள்...
தினமும் பார்த்த உலகம்
இன்று புதிதாய்த்
தோன்றுகிறது.. அதுவும்
இனிதாய்த் தோன்றுகிறது...
மனிதர்கள்... வீடுகள்...
கோலங்கள்... தெருக்கள்
ஊர்களின் புதிய தோற்றம்
வாழ்வில் கிடைக்கட்டும்
என்றும் ஏற்றம்...

கரும்பின் இனிப்பில்
பாலின் சுவைப்பில்
பொங்கலின் தித்திப்பில்
சந்தனம் சாம்பிராணி
அகர்பத்தி மலர்கள்
இவற்றின் வாசத்தில்
நட்பு உறவுகளின் நேசத்தில்
மனம் பாடும் புதிய
ராகத்தில் சக்தி கிடைக்கட்டும்
அது என்றும் நிலைக்கட்டும்
மற்றுமோர் பொங்கல்
தன் பொறுப்பை
ஏற்றுக் கொள்ளும் வரை...

அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள்
நல் வாழ்த்துக்கள்...

அன்புடன்
ஆர்.சுந்தரராஜன்
👍😀🙏🙋🏻‍♂🌹🌺🌷

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-Jan-17, 7:28 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : pongal vaalthukkal
பார்வை : 76

மேலே