அன்புள்ள கிராமத்து திண்ணைக்கு

இங்கே நகரத்தில் நான் நலம் . அங்கே கிராமத்தில் நீ நலமா ? உன் கைகளாலாகிய தூண்கள் நலமா ? உன் குளிர்ச்சி நலமா ? நீ தந்த குளிர்ச்சியை என் மனமும் , உடலும் இன்னும் நினைவு வைத்திருக்கின்றன . நம் தெருக் கடைசியில் உள்ள பிள்ளையார் சிலை நலமா ? பிள்ளையார் சிலை பின்னால் உள்ள வயல் வெளிகள் நலமா ? மார்கழி மாதத்து பட்டங்கள் நலமா ? தட்டான் பூச்சிகள் நலமா ? தட்டான் பூச்சிகளைப் பார்த்தால் நான் கேட்டதாகச் சொல் . என் பெயரைக் கேட்டதும் அவைகள் மூஞ்சை திருப்பிக் கொண்டு பறந்து போகலாம் . அவற்றின் இறக்கைகளில் நூலில் கட்டி இழுத்து கொடுமை படுத்தியதற்காய் அவற்றிடம் மன்னிப்புக் கேட்டதாய் சொல் . எனக்காக இந்த உதவியை செய் .

நான் இவ்வளவு பேசிய பிறகு தான் ஒன்று ஞாபகம் வருகிறது . நான் யாரென்றே சொல்லவில்லையே . நான் தான் உன் அனு. உன் கை பிடித்து எழுந்து , உன் மடியில் படுத்து உறங்கிச் செல்லும் ஆயிரம் வழிப்போக்கருள் ஒருவராய் என்னையும் நினைத்து மறந்திருக்கிறமாட்டாய் என நம்புகிறேன் .
அகிலா அக்காவிற்கு திருமணம் நடந்து விட்டது உனக்கு தெரியுமல்லவா ? குமார் அண்ணன் கூட வெளிநாடு போய்விட்டதாய் கேள்விப்பட்டேன் . நான் கூட வளர்ந்துவிட்டேன். ' நம்பமாட்டேன் ' என்காதே . நான் இப்போது கல்லூரியில் பயில்கிறேன் .

என் பால்யத்தில் என்னை வளர்த்துவிட்டதில் உனக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு . உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? உன் மடியில் அமர வைத்து தான் என் அம்மா எனக்கு சோறூட்டுவாள் . உன் மேல் தான் நான் பானையை வைத்து குட்டிக் குடத்தில் தண்ணீர் எடுத்து ஊத்துவேன் . நீ எவ்வளவு அன்பானவன் . நான் உன் மேல் எவ்வளவு தண்ணீரை சிந்தினாலும் நீ கோபித்துக் கொண்டதே இல்லை .

உனக்கு நினைவிருக்கிறதா ? நான் உன்னை தாண்டி தாண்டி விளையாடுவேனே ! சில சமயம் கீழே கூட விழுந்திருக்கிறேன் . உனக்குள் உயிர் இருப்பது எனக்கு அப்போதே தெரிந்திருந்தால் கல்லா ? மண்ணா ? விளையாடும்போது உன்னை ஏறி மிதித்திருக்க மாட்டேன் . என்னை மன்னித்து விடு உன்னை மிதித்ததற்காய் !

உனக்கு தெரியுமல்லவா ? நான் என் வயதொத்த சிறுவர் சிறுமியரோடு விளையாடியதை விட உன்னோடு விளையாடியது தான் அதிகம் . நான் ஆச்சி வீட்டுக்கு வரும் விடுமுறை நாட்களை அர்த்தமுள்ளதாக்கியது நீ தான் .

உன் மேல் காலை தொங்கவிட்டப்படி உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருப்பது தனி சுகம் . உன் மடியில் அமர்ந்து ஆள் நடமாட்டமே இல்லாத அந்த தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம் . என் தனிமையை பூரணமாக்கியவள் நீ தான் .

உன்னோடு இருந்த போது நான் நானாக மட்டுமே இருந்திருக்கிறேன் . நான் உன்னோடு இருந்த போது சிறுமி . அப்போது எனக்கென எந்த அடையாளங்களும் இல்லை . ஆனால் நான் மிக மிக சந்தோசமாக இருந்தேன் . எனக்கு உன்னை ரொம்ப... ரொம்ப... தேடுகிறது . உனக்கு ?

உனக்கு ஒன்று தெரியுமா ? இங்கே நகரத்தில் பெரிய பெரிய மாளிகைகள் உண்டு . பெரிய பிளாசாக்களும் , விஸ்தாரமான பூங்காக்களும் கூட உண்டு . ஆனால் அவை எதுவுமே என் கண்களுக்கு உன்னைப் போல அழகாய் தெரிவதில்லை .

உன்னுடன் நான் எவ்வளவு சந்தோசமாக இருந்தேன் . என் மகிழ்வலைகளில் கல்லை போடுவதாய் வந்தது அந்த நாள் . ஆம் , ஆச்சியும் , மாமாவும் வேறு வீடு மாறிச் சென்றுவிட்டனர் . அந்த நாள் என்னை இவ்வளவு யோசிக்க வைக்கமென்று எனக்கு அப்போது தெரியாது . நான் உன்னைப் பார்த்து நான்கைந்து வருடங்கள் ஆகி விட்டது .

என் பால்யங்கள் எனக்கு தந்த நினைவு புத்தகத்தில் பெரும்பாலும் உன் பக்கங்கள் தான் . உன் ஸ்பரிசங்களுக்காக நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன் . ஒவ்வொரு முறை நான் ஊருக்கு வரும் போதும் உன்னை வந்து பார்க்க விரும்புகிறேன் . காலம் என் கால்களை கட்டி வைத்திருக்கிறது .

என்றோ ஒரு நாள் , உன்னை நான் பார்க்க வரக் கூடும் . அதுவரை 'புது வீடு' என்ற பெயரில் உன் மேல் கௌரவக் கொலைகள் ஏதும் நடக்காமலிருக்கும்

என்ற நம்பிக்கையுடன் ,

உன் அனு .

எழுதியவர் : அனுசுயா (15-Jan-17, 12:01 pm)
பார்வை : 360

மேலே