அவள்

அவள்
=======

அவள்
கண்டுபோன
பலமுகங்களுடைய சாயல்களை
ஒன்றுசேர்த்து
உலகத்திலேயே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை
நேசிக்கிறவளாக இருக்கக்கூடும்
அவள்
ஸ்திரம் வாசிக்கும்
கதைப் புஸ்தகங்களூடே எழில் ஒழுகும்
நாயகன் யாரோவுடைய
ஆராதகியாக இருக்கலாம்
அவள்
காதல் சொல்லிகளிலிடத்தில் நின்று
வயது மறைத்திருக்கலாம்

அவள்
ஓராசை
ஒரு காதல்
ஒரு காமம்
ஒரு சோகம்
ஒரு பிரயாசை
ஒரு விரக்தி
ஒரு தனிமை
ஒரு மௌனம்
இவைகளுடைய
திரைச்சுமைகளாலான
புடைத்த
முலைகளை மறைக்கும்
தாவணி உடுத்தியவளாக இருக்கலாம்

அவள்
நிறங்களவி வார்ப்பிலிடும்
நிலைக்கண்ணாடியினிடையோ
சாளரத்தினிடையோ
புறக்கடையில்
பூக்களின் மணங்களிடையோ
பூரண சந்திர
இராத்திரியிடையோ
கிணற்றடியினிடையோ
அறையினின்று
வேடிக்கைக் காண்கிறபோது
சாலையின் வெறுமையினிடையோ
உதிர்ந்து வீழும்
சருகுகளினிடையோ
சுவரொட்டிச் சித்திரங்களிடையோ
மரக்கிளையில்
குலாவிக் கொண்டிருக்கும்
பட்சிகளிடையோ
யௌவ்வனம் அறுத்த
தென்றற்காற்றினிடையோ
இன்னபிற சொல்ல மறந்தவைகளிடையோ
வெட்கத்தை
விலைப்பேசிக் கொண்டிருக்கலாம்

அவள்
முகப்பருக்களைத் தாண்டிய
மெருகு
மெழுகுபோல் உருகிக் கொண்டிருக்கலாம்
பொதிந்த பார்வைகள்
மலர்ந்த உதடுகள்
அலர்ந்த பெண் வாசனை
பனித்துளிகள் படர்ந்துலரும்
பறிக்கப்படாத
ரோஜாவாகி
கள்ளப்பார்வை சிலவைகளால்
அவளுடைய கற்பு
விரசமாக்கி விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம்
அதுவுமில்லை என்றால்
அவள்
அதுகாறும்
சொல்லாமல் நேசிக்கின்ற
யாரோவுடைய
அழகான நோட்டுப் புத்தகத்தில்
கவிதையாக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம்

அவள்
வெளிப்பட நாணுகிற கண்ணீர்த் துளிகளையும்
உடைப்பட விரும்பாத
தொண்டை கர்வத்தையும்
சமூகத்தின் முன்னால்
காணிக்கையாக இருத்திவிட்டு
எத்தனையோ
பாதிரா கோயில் திண்ணைகளில்
அங்குமிங்குமாக
அலையும் ஓலங்களை
ஊழிக்காற்றின்
பேரிரைச்சலுடனும்
வௌவ்வால்களின் சாக்குரலுடனும்
தொலையவிட்டவளாக இருக்கலாம்

அவள்
கனவுகள் சுமந்த
கட்டிலிடமும் போர்வைகளிடமும்
இந்நாள் வரையான
இறுக்கங்களை
களையப்பட்டவளாக இருக்கலாம்

அவள்
அங்கத்திலிட்ட மருதாணி சிவப்பிற்கும்
கலங்கிய கூந்தலுக்கும்
கலைந்த சிந்தூரத்திற்கும்
கசங்கி விலகிய ஆடைகளுக்கும்
பொட்டித் தெறித்த
வளைவிகளுக்கும்
அந்தநேரம்
தாளமிடும் கொலுசுகளுக்குமாய்
காரணமானவர்கள் என்று
யாருமே இல்லாமல் கூட போயிருக்கலாம்
அவள்
யாரோவுடைய
முத்தச்சாரிகைகளை
காற்கடக்கைககளுடைய
மோகாந்த
நர்த்தனங்களை
முனங்கல்களின் எதிரொலியாக்கி
சலபங்களாய்ச் சுற்றவிட்ட
பக்கவாட்டு சுவர்களில்
ஏக்கங்களை விதைத்தவளாக இருக்கலாம்

உணர்க்கொல்லிகளின் மத்தியில்
அவள் இப்படி இப்படி
பல இடங்களில்
பலப்பல "அவள்களாக" அவதரிக்கப்பட்டிருக்கலாம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (17-Jan-17, 12:54 pm)
Tanglish : aval
பார்வை : 111

மேலே