என்னவள் அழகு

நீல வானில் உலாவரும் வெண்ணிலவே
இன்று நீ தன்னொளி இழந்து
மங்கிய நிலவாய் வலம் வருவதேனோ

ஓ புரிந்தது புரிந்தது! எனக்காக
காத்து நிற்கும் என் காதலி முகத்தின்
பொலிவிலே தன ஒளி இழந்து
மங்கிய நிலவானாயோ நிலவே

அன்னமே, அன்னமே , இது என்ன
உன் வண்ண வண்ண நடை மறந்து
வெட்கி தலைக் குனிந்து
ஒரு பக்கமாய் நிற்கிறாய்

புரிகிறது, புரிகிறது அன்னமே
என்னவள் ஒய்யார நடைக் கண்டு
அன்னமே நீ உன் நடையை மறந்தாயோ


சோலைக்கு குயிலே நீ ஏன்
இன்று கூவுவதை நிறுத்திக்கொண்டாய்
அறிந்து கொண்டேன் கருநீலக் குயிலே
என் காதலி இன்னிசைகேட்டு வாய் அடைத்து
போனாயோ

மானே மானே என்னவளை
நீ கண்டதுண்டோ கண்டிருந்தால்
அவள் விழிக்கு உன் விழி
ஒப்பிலை என்று ஓடி ஓளிந்திருப்பாய்

தாமரையே ! செந்தாமரையே !
உன் நிறத்தைக் கண்டு
நீ மதிமயங்கி நிற்காதே
அதோ வருகிறாள் என்னவள்
அவள் அழகிய பாதங்களை சற்றே நோக்கு
நீயே அதைக்கண்டு மயங்கிடுவாய் !

என்னவள் கருங்கூந்தல் கண்டு
கார்முகிலோ என்று நினைத்து
அந்த நிலவு ஒளிந்துகொள்ள
விரைந்து வந்ததுவோ !

என்னவளே உன் அழகில் நான்
மதி மயங்கி நிற்கின்றேன்
அந்த மதியே மயங்கி நிற்க
நான் என்ன நானே அறியேன்
நீயே சொல்வாய் என் காதலியே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jan-17, 9:04 pm)
Tanglish : ennaval alagu
பார்வை : 302

மேலே