காதல் கவிதை

நிலையில்லா உலகினிலே நிலைத்திடுமா கனவுகளும்
மலைமலையாய் உன்நினைவு மறந்திடுமா என்னுள்ளம்
களையிழந்த மதிமுகத்தாள் கண்களிலே கண்ணீரே !
சிலையாகி நின்றுவிட்டேன் சித்திரமே பாராயோ !


பாராயோ நீஎன்னை பார்த்துவிடும் தூரத்தில்
வாராயோ தேனிசையே வந்தருகே நில்லாயோ
சேராயோ என்னோடு சேர்ந்துவிடும் நாளருகில்
சீரான செவ்விதழால் சிந்துகின்றாய் சிரிப்பொலியை .


சிரிப்பொலியை நான்கேட்டு சிந்தையும் மயங்கி
உரித்தாக்கும் மோனநிலை உணர்வாயோ எனதழகே !
விரிவாக்கும் தனைநோக்கி விரைந்திடுமே காதல்தீ
பரிதாபம் வேண்டாமே பாசத்தால் காண்பாயே !


கண்டேன் கனியமுதே கன்னல் சுவைதரும்
பெண்ணே எழிலுடைய பேசாத சித்திரமே
மண்ணே மதிமுகமே மாசற்றக் காதலால்
விண்ணே வியனே வியந்து .


காதல் மொழியே கன்னியவள் பேச்சன்றோ
மோதல் விடுத்தே மோகத்தால் காதலிப்போம் .
ஓதல் இதுவே ஒழுக்கமாய் வாழ்தலே
சாதலும் போக்கிடும் சான்று .


கண்களில் நாணுதல் கண்டேன் கனவிலும் .
உண்மையைச் சொல்லுமோ உன்றன் இதயமும்
கண்களா யென்னிதயம் காணா விடில்வாடிப்
புண்களாய்ப் போகும் பொழுது .


பொழுது விடிந்த பொழுது மனத்தால்
அழுது வடித்தேன் அகமுடைந் தாலும்
உழுது விதைத்தாயே உன்றன் முகத்தை
பழுது படாமல்நீ பார்.


பார்த்ததும் என்னுள் பனிபோல் குளிர்ச்சியால்.
ஈர்த்தது உன்விழி இன்பத்தால் என்னுயிரே
நான்வரும் தோற்றம் நலமுடன் தோன்றுதோ.
நோன்பிருக் கும்காதல் நோய் .


தெள்ளமுதே தேனே பாலே தெவிட்டாத மானே
உள்ளமுத வார்த்தையிலே உண்மையிலே சொக்கி
கள்ளமிலா நேசத்தோடு காசினில் வாழ்ந்திடவே
வெள்ளை மனத்தால் வேண்டுகின்றேன் காண்!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-17, 6:15 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 247

மேலே