தாய் தந்தாய் வரம்

**************************************
விதையோ மண்ணின் கொடையோ
தாய் தந்தாய் வரம் தாங்கும் நிலமாய் ..
****************************************

விதையோ மண்ணின் கொடையோ
தாய் தந்தாய் வரம் தாங்கும் நிலமாய் ..
எதையோ இழந்தல்ல இன்றோ
அனைத்தும் அகன்றிட்ட நிலையாய் ..

அன்பூட்டி பண்பூட்டி வளர்த்ததால்
தமிழன்னை மடியில் தவழ்கின்றேன் ...
அழகூட்டி அறிவூட்டிப் பார்த்ததால்
எட்டிடுமளவு எழுதுகிறேன் கவிதைகளை ..

நினைவலைகள் மோதிடும் நெஞ்சில்
கற்பனைகள் கூடியது அடுக்கடுக்காய் ..
எல்லைகள் தெரிந்திடா ஏக்கங்கள்
பெருகியது உள்ளத்தில் உலகளவு ..

கைம்மாறு செய்திட முடிவெடுத்து
கடலளவு வகுத்தேன் வழிமுறைகள் ..
எள்ளளவும் நிறைவேறா நிலையில்
என்னைப் பிரிந்தாய் நிலையாய் ..

நன்றிக்கடன் தீர்ப்பதும் கடமையென
நீயுரைத்தக் கொள்கையை ஏந்தியே
உலவுகிறேன் உதவுகிறேன் நானும்
உள்ளவரை தொடர்வேன் மறவாது ..

சுயநலம் அறியாத உள்ளமுடனே
சுழல்கிறேன் நாளும் உணர்வுடனே ..
இலக்கிலா மனதுடன் இவ்வுலகில்
இன்றுவரை வாழ்கிறேன் வையத்தில் ..

பகுத்தறிவுப் பாதையில் பயணிப்பேன்
வாழ்வின் விளிம்பினைத் தொட்டிடுவேன் ..!

​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Jan-17, 8:36 am)
பார்வை : 172

மேலே