செந்தமிழ்ப்பாடி செங்கோட்டைக்குச் செல்

அமிழ்தான தமிழதனை அந்நியரும் புகழ்ந்திடவே
அரியணையில் அழகோடு ஏற்றி வைக்க வேண்டாமா ?
அலங்கார சொல்லெடுத்து அதிகாரம் செய்கின்ற
ஆட்சியினைக் நாமெல்லாம் கண்டுகளிக்க வேண்டாமா ?

முன்பிறந்து மூத்தவளாய் மூச்சாக வீற்றிருக்கும்
அன்னையவள் நம்மையென்றும் நலியாமல் காத்திடுவாள்
பின்புவந்த மொழியெல்லாம் புகழ்பாடி வாழ்த்துகின்ற
நன்னிலையில் நம்தமிழும் நடமாட வேண்டாமா ?

இலக்கணமும் இலக்கியமும் எல்லாமும் தானுடைத்து
பழமையிலும் பழமையான பாட்டெல்லாம் கொண்டிருந்தும்
இளமையிலும் இளமையான இன்தமிழாய் இனித்திருக்கும்
வளமைகொண்ட நற்றமிழை வாழ்விக்க வேண்டாமா ?

மொழிக்கெல்லாம் தாய்மொழியாய் முன்னிற்கும் தமிழ்மொழியை
வழியாகக் கொண்டென்றும் வாழ்வுதனை நடத்திடவே
தெளிவான எண்ணமுடன் உழைக்கின்ற உணர்வோடு
பழிசொல்வார் பல்லுடைக்க பாய்ந்துவர வேண்டாமா ?

அயல்மொழியில் உள்ளதெல்லாம் அன்னைதமிழ் வந்திடவே
அயராமல் பணிசெய்து மொழிபெயர்க்க வேண்டாமா ?
பயிலுகின்ற தமிழ்மொழியில் பாடமெல்லாம் படித்திடவே
தயங்காமல் எந்நாளும் முன்நிற்க வேண்டாமா ?

முத்தமிழாய் களிப்பூட்டி முனிவரையும் மகிழ்விக்கும்
சத்தான தமிழ்தன்னில் சாதிக்க வேண்டாமா ?
எத்தனையோ நூல்கொண்டு எழிலோடு வீற்றிருக்கும்
முத்தான தமிழ்மொழியை முன்னேற்ற வேண்டாமா?

மக்களவை கூட்டமதில் தமிழ்மொழியில் பேசிடவே
தக்கவொரு வழிதனையை செய்துதந்த குமரியவர்
இக்காலம் நம்மோடு வாழ்வதுவும் பெருமையன்றோ?
முக்கியமாய் அவர்பணியை பாராட்ட வேண்டாமா ?

செங்கோட்டைச் சென்றிடலாம் செந்தமிழில் பேசிடலாம்
எங்கெங்கும் தடையகற்றி எழில்நடையும் போட்டிடலாம்
பங்கமெவர் செய்தாலும் பார்த்தினியும் நில்லாமல்
செந்தமிழின் செழுமையினை எடுத்தவர்க்கு உரைத்திடலாம்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-Jan-17, 8:14 pm)
பார்வை : 346

மேலே