அன்பு செய்யும் மாயங்கள்

சன்னல் தீண்டும் சந்தன தென்றலாய்
கன்னல் அமுதின் கனிந்த மொழியாய்
அன்றில் பறவையின் அழகான சிறகாய்
அன்பே விதையாகி அரும்பும் உறவாய்......


ஆண்மையின் நெஞ்சத்தில் ஆழம் புதைந்து
பெண்மையின் உள்ளத்தில் பளிங்காய் ஒளிர்ந்து
கண்களின் திரையில் கண்ணீராய் தவழ்ந்து
மண்ணின் உயிர்களில் மறைந்து விளைந்திருக்கும்......


வெஞ்சினம் கொண்டு வாழும் மனங்களின்
நஞ்சினை வேரறுத்து நன்மதி கொடுக்கும்
தஞ்சம் புகுந்திடும் தாயின் மனதில்
பஞ்சம் சொல்லாது பாரியாய் தானிருக்கும்......


மதுவில் குளித்து மஞ்சம் தேடுவோர்
மதுரம் தொலைத்து மரணம் நாடுவோர்
மதம் பிடித்து மனிதம் சிதைப்போர்
மதனப் பருந்தால் மடிவோர்க்கு மருந்தாகும்......


புல்லில் உறங்கும் பனியின் தூய்மையில்
கல்லையும் சொல்லால் கனியாய் மாற்றிடும்
முல்லை மலரிதழ் மொட்டு போலிருந்தும்
மெல்லிய நூலிழையால் மண்ணுலகைத் தாங்கிடும்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 12:53 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 527

மேலே