வென்றெடுப்போம்

ஒரு உணர்ச்சி மயமான போராட்டகளத்தை ஜல்லிக்கட்டுத்தடை நீக்கக்கோரி தமிழகம் சந்திக்கிறது. இது நியாயமானதா? என்றால் முற்றிலும் நியாயமானதே. இதை, ஆதரிப்பதே ஒவ்வொரு தமிழரின் கடமை. தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரின் கடமை. பிற மாநிலங்களில், வாழும் அனைத்து இந்தியரின் கடமை. இதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.
ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக, மானமுள்ள மனிதனாக நான் இதை ஆதரிக்கிறேன். இதேவேளையில் நான், முக்கிய சில செய்திகளை, நடந்த உண்மைகளை, பதிவு செய்ய விழைகிறேன். பத்தாண்டு காலம் முழுமையாக இந்திய அரசை தன் கையில் வைத்திருந்த காங்கிரஸ் அரசு நடத்திய முட்டாள் தனமான, தான் தோன்றித்தனமான நடவடிக்கைகள் என்பதனை அரசாங்கச் செய்திகளை தொடர்ந்து ஆய்வோர் நன்கறிவர்.
காங்கிரஸ் அரசின்போது தமிழகத்தின் அரசியல்வாதிகளான தமிழர் நாயகனாக தன்னைக் கருதிக்கொள்ளும் திருமா, ஆட்சியில் பங்கேற்ற சுயநல திமுக மற்றும் அதன் ஊழலூற்றுக் கண்களாக விளங்கிய 2ஜி ராஜா, கனிமொழி, மற்றும் அதன் அனைத்து எம்பிக்களும், பா.ம.க, அப்போது காங்கிரஸில் இருந்த ஜி.கே.வாசன், இப்போதும் காங்கிரஸில் இருக்கும் திருநாவுக்கரசர், ஜெயந்தி நடராஜன், மணிசங்கர அய்யர், தமிழகத்தை ரட்சித்ததாக காட்டிக்கொண்ட “ஜெயலலிதா” , அவர்தம் கட்சியைச் சேர்ந்த அனைத்து கொலுபொம்மை எம்பிக்களும், மிகமுக்கியகாரணம்.
பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து 2016 ஆம் ஆண்டு நாட்டுவகையைச் சேர்ந்த காளையினத்தை பா.ஜ.க அரசு நீக்கி அரசாணை வெளியிட்டது. உடனே பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றது. அப்போதே இந்த பீட்டா அமைப்பைப்பற்றி எடுத்துக்கூறி அதை தடை விதிக்க, நான் கட்டுரை வெளியிட்டேன்.

அப்போது மேற்கூறிய அரசியல் (வியா) வாதிகள் எங்கே போயினர்?
திரைப்படத்துறையில் பீட்டாவின் ஆதிக்கம் குறித்து கடுமையாக அக்கட்டுரையில் விமர்சித்தேன். எனது திரைப்படத்துறை எங்கே போயிற்று?
தமிழினக் காப்பாளர்கள் எங்கே போயினர்?
உச்சநீதிமன்றத்தையும், பீட்டாவையும் அப்போதிலிருந்து எதிர்த்திருந்தாலே, இன்று இத்தகையப் போராட்டம் தேவைப் பட்டிருக்காது. பீட்டா அமைப்பை எதிர்த்து, அதனை தடை செய்ய கடந்த ஓராண்டில் இந்தியா முழுமையும் உணர்வுகளை ஒருங்கிணைத்திருந்தால், அரசமைப்பினை நெருக்கியிருந்திருந்தால், பாராளுமன்றத்தின் மூலம், ராஜ்யசபையின் மூலம் பீட்டாவை விரட்டியிருக்கலாம்.
இன்று நரேந்திரமோடி அரசை குறை காண்பவர்கள் தயவு செய்து இதனை நினைவில் கொள்ள வேண்டும். இனியாவது தேசத்தின் சுதேசித்தன்மையை, மாநில நலனை, மாநிலத்தின் மானத்தினை புறந்தள்ளும் போலி அரசியல்வாதிகள் இனம் காணப்பட வேண்டும். அவர்கள் அரசியல் களத்திலிருந்து விரட்டப்பட வேண்டும்.
இவர்களின் காலத்தில்தான் விவசாயமும் வேரறுக்கப்பட்டது. அதன் விளைவை இன்று கண்கூடாகக் காண்கிறோம். இதேபோல், பனை, தென்னை விவசாயிகளின் நிலைமையும் இதேபோல்தான். ரியல் எஸ்டேட் மாஃபியாக்களிடம் சிக்கித்திணறி ஒன்றுக்குப்பாதியாக தங்கள் தோட்டங்கள், தோப்புகளை பறி கொடுக்கின்றனர்.


இவற்றைப் போக்க என்ன வழி ? ஒரே வழிதான் . இந்தியா தன் சுயத்தன்மையினை சர்வதேச நெருக்கடிக்களுக்கு பலியாக்காமல் இருப்பதுதான். இதற்கு இந்திய மக்கள் அனைவரும் இந்தியாவின் தொன்மையை போற்ற வேண்டும்.
அந்நிய ஊடுருவல்களான பிப்ரவரி 14, அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம், முட்டாள்கள் தினம், முதியோர் தினம் போன்ற அந்நிய கலாச்சாரத்தை புறந்தள்ள வேண்டும். நாட்டை விட்டே விரட்ட வேண்டும். தாழ்வு மனப்பான்மையைத்தூண்டி விட்டு தங்கள் வியாபாரத்தில் கொழிக்கும் க்ரீம், ஷாம்பு, சோப், உணவு வகைகளை ஒதுக்க வேண்டும். மத ரீதியாக மாச்சர்யங்களைக் களைய வேண்டும்.
இந்து என்ற எண்ணத்தை, கலாச்சார உணர்வை, பண்பாட்டு நெறியை பாதுகாக்க வேண்டும், அப்படி போற்றினால் மட்டுமே, இந்தியாவின் தொன்மை பாதுகாக்கப்படும். இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது. காரணம், ஜல்லிக்கட்டு என்பது வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிடுவது மட்டுமல்ல. அதன் அடிப்படை தமிழரின் சமய உணர்வு என்னும் பொங்கல் பண்டிகையுடன் பின்னிப் பிணைந்தது. இயற்கையினைப் போற்றும் தமிழரின் தொன்மை குறித்தது.
இன்று ஜல்லிக்கட்டுக்கு தையாக இருப்போர் நாளை பொங்கல் பண்டிகைக்கும் எதிராக இருப்பர். தீபாவளிப் பண்டிகைக்கு அமெரிக்காவில் காப்புரிமை வாங்கக்கூடும். தமிழ்ப்புத்தாண்டு உட்ப அனைத்து இந்திய புத்தாண்டுகளுக்கும் தடை வரலாம். பகவத்கீதை, திருக்குறள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை வரலாம். நான் கூறியபடி இந்த ஜல்லிக்கட்டினை இந்துமதம் சார்ந்த விஷயமாகவும் புரிந்துணர்வு கொண்டு, உச்ச நீதிமன்றத்திடம் போராடினல் இதற்கு மட்டுமல்ல …. தமிழகத்தில் “கள் இறக்குதல் மீதான தடை” உட்பட இன்னும் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
எப்படியோ திராவிடக் கட்சிகளின் சாயம் வெளுத்தது. இத்தாலி காங்கிரஸின் போலிவேடம் கலைந்தது. மாணவர்கள் மட்டுமல்ல … அனைத்து தரப்பு மக்களின் ஆர்ப்பரிப்பு ஏற்பட்டது. இதேபோல் அனைத்திலும் ஒன்றிணைய வேண்டும். மாநில, தேசிய நலன்களை வென்றெடுக்க வேண்டும்.
-

எழுதியவர் : M.பழனிவாசன் (20-Jan-17, 2:54 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 260

மேலே