வலுக்கட்டும் போராட்டம்

சில விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகும்போதுதான் அந்தப் பிரச்சினையின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது- அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது- சாதகபாதக அம்சங்கள் விரிவாக விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது- நியாய அநியாயம் அடையாளம் காணப்படுகிறது- அதைக்கொண்டு வருபவர்களின் திறன் வெளிப்படுகிறது- சமூகத்திற்கான செய்தி கிடைக்கிறது- எதிர்காலத் தலைமுறைக்கான வழிகாட்டுதல் கிடைக்கிறது. மேற்கூறிய அனைத்தும் எனது வாழ்வியலின் அடிப்படையில் நான் ஆய்ந்து புரிந்து கொண்டு வெளிப்படுத்தும் எனது சொந்தக்கருத்து.
சரி விஷயத்திற்கு வருவோம். இப்போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகுறித்து போராடும் உணர்ச்சி மிகுந்த காலகட்டத்தில் தமிழகம் நடைபோடுகிறது. இந்த நியாயமான போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவு நல்குகின்றன. முதன்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் ஒரு ஜனநாயகத்தின் உண்மையான அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை தெரிவிக்கிறது.
ஆனால், இப்பிரச்சினையை ஊதிவளர்த்த தி.மு.க, இப்பிரச்சினையை வந்தபின் பார்க்கலாம் என்ற அலட்சியப் போக்கில் இருந்த அதிமுக இவர்களை விமர்சிக்காமல், ஜனநாயகத்திற்குட்பட்ட ஒரு தன்னாளுமை மிகுந்த ஒரு புனிதத்துவமுடன் கூடிய அமைப்பான நீதித்துறையின் அணுகுமுறைகளைப் பரிசீலிக்காமல், ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை விவாதிக்க முடியாது. அதேவேளையில், சர்வதேச அளவில் தங்களது வர்த்தகத்தினை தங்களது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் “பீட்டா” போன்ற அந்நிய அமைப்புகளை ஆதரித்து கண்மூடித்தனமான போக்குடன் செயல்பட்ட கடந்தகால அரசாங்கங்கள் எதுவாயினும், அவற்றை விவரிக்காமல், ஜல்லிக்கட்டு குறித்த விவரத்தை நுனிப்புல்லாக பேய முடியாது. இதுவே உண்மை நிலை.
சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான ”கோ சம்ரக்ஷ்ண சாலா” (பசு பாதுகாப்பு இயக்கம்) பலகாலமாக ”பசு வதை” மற்றும் காளைகள் என்றில்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாக்க, இயக்கமாக நடத்தி வருகின்றது. ஆனால், இதற்கு மதச்சாயம் பூசப்பட்டு, இன்றுவரை சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த இயக்கத்தினை இன்றுவரை கொள்கை அடிப்படையில் வெளிப்படையாக ஆதரிக்கவோ, அதன் செயல்பாடுகளில் பங்கெடுத்துக்கொள்ளும் குறைந்தபட்ச அங்கீகாரத்தைக்கூட இங்கிருக்கும் திராவிடக் கட்சிகள் இதுவரை தந்ததேயில்லை.
இந்தியா என்னும் துணைக்கண்டம் இந்துமதத்தினர் பெரும்பான்மையாக உள்ள தேசம். கிரேக்கத்தின் அலெக்சாண்டர் முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் வரை, எத்தனையோ ஆளுமைக்குள் இருந்து போராடி, இந்து என்கிற உணர்வு, ஒற்றுமை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தின் அடிப்படையில் மதமாற்றங்களின் மூலம், தேசத்தின் விழாக்களை, பண்பாடுகளை, நாகரீகத்தை ஒவ்வொன்றாகக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
உதாரணமாக, சிறுபான்மையினர் நடத்தும் கல்விக்கூடங்களில் பெண்குழந்தைகள் மங்கலப்பொட்டு அணியத் தடை, பூச்சூடி வரத் தடை, பெண் மற்றும் ஆண்குழந்தைகள் மத நம்பிக்கைகளான காப்புக் கயிறு, திருஷ்டிக்கயிறு ஆகியன அணிந்து வரத் தடை போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நல்லொழுக்கக்கல்வி என்கிற பெயரில் மெல்ல மெல்ல தங்களது மதவரலாறு, மதக்கடவுளர்களின் மாகிம்த்யம் ஆகியவற்றை மெல்ல மெல்ல திணித்து, இதன் மூலம் அவர்களை தங்களது தாய்மதமான இந்துமதத்தினை புறக்கணிக்கச்செய்யும் பணிகளில் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் என திணித்து அந்த நாளில் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரண்டும் பரிபூரணம் அடையாத பிஞ்சிளம் குழந்தைகள் கூட “காதல் போதை”யில் சிக்கவைத்து, அந்த தினத்தினை தங்களது பிறவிப்பயன் பெற்ற நாளாகவும், பெற்றோர், உற்றோர், உறவினர்கள் என அனைவரையும் மூர்க்கத்தனமாக எதிர்க்க வைத்து, கண்மூடித்தனமான பல தற்கொலைகளையும், ஊர்க் கலவரங்களையும் நடத்தி வைக்கின்றனரே… இதை இந்த சமூகம் உணரப்போவது எப்போது?
இதே போன்ற பணியினைச் செய்ய உள்நுழைந்ததே “பீட்டா” போன்ற அமைப்புகள். இதனை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பல திரைத்துறையினர், அதிகார வர்க்கத்தினர், சில அரசியல் சுயநலமிகள் ஆகிய அனைவரும் “ஜல்லிக்கட்டு”க்கு எதிராக இயங்கினர். அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றினர். இன்று போராட்டம் வலுத்தவுடன் அவர்கள் அந்தர் பல்டி அடிக்கின்றனர். தங்களை கலாச்சாரக் காவலர்களாக அடையாளம் காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். எப்படி?
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த “நாகராஜன்” என்பவரே முதன்முதலில் 2006-ல் வழக்குப் போட்டார் என நேற்று “பீட்டா” தெரிவித்துள்ளது. நாங்கள் அதன் பின்னரே, 2011-ல் தான் இணந்தோம் என தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது. அப்போது, மத்திய, மாநில அரசுகளில் அங்கம் வகித்தவர்கள் என்ன செய்தனர்? ஒன்று நாகராஜனுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும். வழக்கினை வாபாஸ் பெற வைத்திருக்க வேண்டும். அதன் பின் இதன் தீவீரத்தன்மையை தொலைநோக்கோடும், சமூக அக்கறையோடும், மாநிலத்தின் மானமாகவும் கருதி மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு நிறைவேற்றியிருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு என்பது மத ரீதியான நம்பிக்கை, பெரும்பான்மை மக்களின் உணர்வு, அதனால் நாங்கள் அதை பாதுகாத்தே தீருவோம் என வலுவான வகையில் ஆதாரங்களை முன் வைத்து பிர்ச்சினையை வென்றெடுக்க வேண்டும்.
மாநில அரசு சட்டமியற்ற முடியாதா? முடியும். நடைமுறையில் சாத்தியமே. அதற்கு ஒரு உதாரணம், இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் நேரடி விவாதத்தில் பங்குகொண்டபோது, நெறியாளரிடம் ஒரு முக்கிய விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அது என்ன? அதாவது ”இரத்த பந்தத்தில் அண்ணன் – தங்கை முறையாக இருந்தாலும், அவர்கள் சேர்ந்துவாழ தடையில்லை. இதற்காக ஏற்கனவே தமிழக அரசு தனி சட்டமே இயற்றியுள்ளது.” என்றார். இதை பெருமை பொங்க கூறுகிறார். ஒரு இந்துவாக, இந்திய கலாச்சார ரீதியான நபராக உங்களால் இதை ஜீரணிக்க முடிகிறதா?
நெருங்கிய இரத்த பந்தங்கள் கொண்டோரிடையே நிகழும் திருமணத்தால் உடல் நலம் கெடும். பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கக்கூடும். மன வளர்ச்சி குன்றக் கூடும் என அந்நிய மருத்துவ முறைகள் கூறுகிறது. இதை அப்படியே ஏற்று கலப்புத் திருமணத்தை ஆதரிக்கிறோம், சாதியை ஒழிக்கிறோம் எனக் கூறிவிட்டு, மேற்படி சட்டத்தை பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் கொண்டு வந்திருக்கின்றனரே… இதை ஆதரிக்கிறீர்களா? ஒரு இந்துவாக என்னால் ஏற்க முடியவில்லை. இது கலாச்சார சீர்கேட்டுக்கு அங்கீகாரம் தந்ததாக ஆகாதா? இது மனரீதியாக மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகாதா? இதன் மூலமாக பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கிய அபிமன்யுவாகத்தான் இருப்பார்களா? இதற்கு என்ன பதில்? இதனைப் பற்றி பகிரங்கமாக சட்டமியற்றும் துணிவு எப்படி வந்தது? இதற்கு என்ன அவசியம் வந்தது? எவ்வளவு பொதுமக்களின் ஆர்ப்பார்ட்டத்தினால் இத்தகைய முடிவிற்கு வந்தனர்? குறிப்பிட்ட ஒரு சிறுபான்மையினர் மட்டுமே அத்தகைய உறவில் நிகழும் திருமணத்தை ஆதரிப்பர். நிச்சயமாக இந்துமதத்தில் புராணங்களில் கூட இருப்பதாகத் தெரியவில்லை. இதைப்பற்றி அனைவரும் வாய்மூடி மெளனியாக இருப்பதேன்? இதற்கு எவரும் தடை வாங்கவில்லையே ஏன்? பின்னர் வந்த ஜெவும் இதை கண்டுகொள்ளாமல் போனதேன்? அவரும் இதனை ஆதரித்தாரா? காரணம், வேறொன்றுமில்லை. இலவசங்கள் போன்ற கவர்ச்சித் திட்டங்கள், போலித்தனமாக பேசி ஒருவரையொருவர் சாடுவது போல் சாடி, அத்தனைப் பிரச்சினைகளையும் மூடி, அப்பாவி மக்களை ஏமாற்றுவதுதான். மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய தருணமிது. இந்துவாக இதயம் உணர்வோம்... தமிழராக தலைநிமிர்வோம்… இந்தியனாக எதையும் எதிர்கொள்வோம். இன்னும் இவை போன்ற கலாச்சாரத்திற்கெதிரான சதிகளை முறியடிக்க வலுக்கட்டும் போராட்டம்.
ஆக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஆதரிக்கும். அனைத்து வகையிலும், உறுதுணையாக இருக்கும் என பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே. நிற்க….
(இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே தமிழக முதல்வர் டெல்லியிலிருந்து திரும்பியுள்ளார். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ”2011 – ல் நடந்த தவறு மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம்.” என நம்பிக்கை அளித்துள்ளார். அட்டர்னி ஜெனரல் வேண்டுகோளின் படி சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டுத் தொடர்பான தனது தீர்ப்பினை தள்ளிவைப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளது. இதற்கிடையில் தமிழக அரசே அவசர சட்டம் கொண்டு வந்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற ஆவன செய்யப்படுகிறது என்கிற செய்தி எட்டுகிறது. மகிழ்ச்சி. )
- M. பழனிவாசன்

எழுதியவர் : (20-Jan-17, 2:58 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 122

சிறந்த கட்டுரைகள்

மேலே