ஜல்லிக்கட்டு

துள்ளித்துள்ளி வருகுதுபார்
ஜல்லிக்கட்டு காளை
தள்ளிவிட்டு போகுதுபார்
பீட்டாவோட ஆளை

தகதகன்னு மின்னுதுபார்
சீவிவச்ச கொம்பு
எதிர்த்துநீயும் நின்னுடாத
எதுக்கொனக்கு வம்பு

தமிழர்களின் உரிமைதனை
பறிக்கநீயும் யாரு
இளைஞர்களின் நெஞ்சுரத்தை
ஊர்முழுக்க பாரு

தனித்தனியாய் உள்ளோமென்று
தப்புக்கணக்குப் போட்டாய்
அணிஅணியாய் திரண்டுநிற்க
மூக்குடைந்து நின்றாய்

மறத்தமிழன் விளையாட்டுக்கு
யாருபோட்டா தடைய
அறவழியில் போராடுவோம்
பாருஇந்தப் படைய

மழையுமென்ன குளிருமென்ன‌
எதுக்கொனக்கு கவலை
தில்லிருந்தா அடக்கிக்காட்டு
காளையோட திமிலை

வீரமூட்டி வளர்த்ததெங்கள்
கட்டபொம்மன் மண்ணு
வாரமல்ல மாதம்கூட‌
எதிர்த்திடுவோம் நின்னு

ஒவ்வொன்னா தடைபண்ண‌
யோசிச்சியா நிசமா
ஒவ்வொருத்தரும் குரல்கொடுக்க‌
மாட்டிக்கிட்ட வசமா

சீறிநாளை சிலிர்த்துஎழும்
வாடிவாசல் வழியே
நூறுகாளை பாயும்போது
நீஎங்கபோயி ஒழிவ‌

முறுக்குமீசை பாரதியெங்கள்
முப்பாட்டன் தானே
எக்குத்தப்பா முடிவெடுத்து
விழுந்திட்டியே வீணே

கொடிகாத்த குமரனிங்கே
தெருக்குத்தெரு உண்டு
வெடிபோன்றே குரலெடுப்போம்
பயந்திடாதே கண்டு

முறத்தாலே புலிவிரட்டிய‌
தமிழச்சியின் வீரம்
அறத்தாலே உரிமைகேட்க
உன்தலைமுழுக்க பாரம்

சேர்ந்திடுச்சு கைகளிங்கே
உரிமையினை மீட்க‌
சோர்ந்திடாது கடைசிவரைக்கும்
தமிழருரிமை காக்க‌

விளையாட்ட தடைசெய்வத
விளையாட்டா நினைச்ச‌
போராட்டம் வலுப்பெறவே
வெலவெலத்துக் கிடக்க‌

துள்ளிக்கிட்டு ஓடிவரும்
ஜல்லிக்கட்டுக் காளை
வெளுத்துக்கட்டி ஆட்டம்போடும்
இந்தக்கூட்டம் நாளை

வெற்றிப்பறை முழங்கிடுமே
எதிர்த்த‌குரல் அடங்கிடுமே
தமிழர்பக்கம் தலைவைக்க‌
நினைப்போர்மனம் நடுங்கிடுமே

ஒற்றுமையா சாதிப்போம்
பிரிப்போரை தள்ளிவைப்போம்
வெற்றிபெரும் நாள்முழுதும்
ஜெயம் ஜெயமென கொண்டாடுவோம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Jan-17, 7:54 pm)
பார்வை : 1613

மேலே