சங்கமித்த நெஞ்சம்

நினைவற்று மடியில் மயங்கிக் கிடக்கும் தோழனின் கோலத்தை பார்க்க தாங்காமல் கண்களை மூடிக் கொண்டாள் நிலா. மூடிய கண்களுக்குள் பழைய ஞாபகங்கள்.
"நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்." பள்ளி வாசலில் தந்தையின் காலைக் கட்டிக் கொண்டு அழுத அந்த சின்ன ஹரியின் நினைவில் துக்கத்திலும் நிலாவின் இதழ்கள் புன்னகை பூத்தன. அதுதான் நிலாவுக்கும் ஹரிக்குமான முதல் சந்திப்பு.அப்பொழுது நிலாவின் பெயர் நிலவன். அழுது கொண்டிருந்த ஹரியின் தோளில் கைபோட்டு தன்னிடமிருந்த மிட்டாயை கொடுத்து அவன் அழுகையை நிறுத்தினான் நிலவன். ஐந்து வயதில் தொடங்கிய அவர்களது நட்பு பதினான்காவது வயதில் பிரிவை சந்தித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் விளைந்து கொண்டிருந்த மாற்றங்களை வாய்திறந்து யாரிடமும் சொல்லமுடியவில்லை நிலவனால். உற்ற நண்பனான ஹரியிடமும் கூட. விளைவு தன் சொந்தங்களையும் நண்பர்களையும் விட்டு விலகிச் செல்ல வைத்தது. யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டே ஓடினான்.
நிலவன் என்ற பெயரை நிலாவாக்கிக் கொண்டான். காற்சட்டை அணிந்தவன், பாவாடைக்கு மாறினான். தலையை படிய வாரியவன், சடை பின்ன ஆரம்பித்தான். மொத்தத்தில் அவன் அவளானாள்.
இத்தனை மாற்றங்களோடு கூடவே இன்னொரு மாற்றமும் உண்டானது. ஹரியுடனான நட்பு காதலாக மாறியது. காதலும் பெற்றோர் பாசமும் தூண்ட எட்டு வருடங்களின் பின் மீண்டும் தன் சொந்த ஊருக்குப் போனாள். போனவளை வீட்டு வாசலில் வைத்தே அடித்து துரத்தினார்கள் அவள் பெற்றோர். இத்தனை நாட்களில் பல அவமானங்களை சந்தித்தவள் தான் என்றாலும் பெற்றோரின் இந்த புறக்கணிப்பு செத்துவிடத் தூண்டியது. ஆனால் ஹரி மீதிருந்த காதல் அந்த எண்ணத்தை செயல்படுத்த விடவில்லை. அவனைத் தேடிப் போனாள். ஹரி அவளது பெற்றோரைப் போல் அவளைத் துரத்தவில்லை தான் எனினும் அவள் காதலை சொன்ன போது அவனுடைய முகத்தில் தோன்றிய பாவமே அவளைக் கொன்று போட்டது. கேவலமான ஒரு பார்வையை அவள் மீது வீசி விட்டு எதுவும் பேசாமலேயே போய் விட்டான். அதற்கு மேல் அந்த ஊரில் இருக்க முடியாமல் திரும்பி விட்டாள். அன்றைய இரவு தலைவலி மாத்திரைகளை விழுங்கி உலக வாழ்விலிருந்து விடுபட முயன்றவளை எப்படியோ காப்பாற்றி விட்டார்கள் கூட இருந்தவர்கள்.
அதற்கு பிறகு மூன்று வருடங்களின் பின் இன்றுதான் ஹரியை பார்த்தாள். ஆனால் இந்த நிலையில் அவனைப் பார்க்க நேரும் என்று கனவிலும் கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை.
வண்டி வைத்தியசாலையை அடைந்ததும் அவசர அவசரமாக ஹரியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். விபத்தில் பலமாக அடிபட்டதால் நிறைய இரத்தம் வெளியேறியிருந்தது. நல்லவேளையாக நிலாவும் ஹரியும் ஒரே வகை குருதியைக் கொண்டிருந்ததால் அவளது குருதியே அவனுக்கு ஏற்றப்பட்டது. நான்கு நாட்களின் பின்பு தான் ஹரி சுயநினைவுக்கு வந்தான். கடந்த அந்த நான்கு நாட்களும் ஒரு தாயைப் போல ஹரியை கவனித்து வந்தாள். ஆனால் அவன் கண்முழிக்கும் போது அங்கு இருக்க விரும்பாமல் ஹரியின் வீட்டாருக்கு தகவல் சொல்லி விட்டு சென்று விட்டாள்.
சரியாக நான்கு வாரங்களின் பின்னர் அவள் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. வண்டியிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்து நிலா வியந்து நின்றாள். ஹரியும் அவனது பெற்றோரும் கையில் தட்டோடு நின்றிருந்தனர். பெற்றோரை வீட்டின் உள்ளே போக சொல்லி விட்டு சிலையென நின்றவளின் கைகளை பிடித்து, "என்னை மன்னிச்சு ஏத்துக்குவியா நிலா?" கண்ணோடு கண் பார்த்து கேட்டான். மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள கண்களில் நீர் கோர்த்தது. கைகளை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டு முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.
"ஹரி நான் இப்படி ஆனது என்னோட தப்பாடா? என்னைப் பெத்த அம்மா கூட என்னை வேணாம்னு தூக்கி எறிஞ்சுட்டாங்க. ஏன் நீயே கூட நான் உன்னைக் காதலிக்குறன்னு சொன்னப்ப என்னை அசிங்கமா தானே பாத்தா. ஏன்டா நாங்க எல்லாம் காதலிக்க கூடாதா? எங்களுக்கும் மனசு இருக்குடா. அதில பாசத்துக்கான ஏக்கம் தான்டா அதிகமா இருக்கு. ஆனா அது எங்களுக்கு கிடைக்கிறதே இல்லை."
நிலாவின் கதறல் ஹரியின் கண்களையும் கலங்க வைத்தது. "அழாத நிலா. என்னோட தப்பை இப்ப நான் உணர்ந்திட்டன். இப்ப என் மனசு முழுக்க உன் மேல காதல் தான் இருக்கு. ஒரு அம்மா போல என்னைப் பாத்துக்கிட்ட நீ தான் எனக்கு கடைசிவரைக்கும் மனைவியாகவும் இன்னொரு தாயாகவும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். யார் உன்னை வெறுத்தாலும் இனி ஒரு பொழுதும் நான் உன்னை வெறுக்க மாட்டன். என்னை நம்பி என்னோட வாழ்க்கை துணையா வருவியா?"
அவனது கேள்விக்கான பதிலை ஒரு அணைப்பில் தெரியப்படுத்தினாள் நிலா. அன்று அவன் குருதியோடு அவள் குருதி சங்கமித்தது போல இன்று இருவரது நெஞ்சங்களும் காதலில் சங்கமித்தன.

எழுதியவர் : துளசி (23-Jan-17, 3:40 pm)
பார்வை : 656

மேலே