தேவகியின் தாரக மந்திரம்

என்ன தான் கல், மண் கொண்டு இழைத்து ஒரு வீட்டை கட்டினாலும், அதனை அழகாக மாற்றுவது குழந்தைகளின் மழலை பேச்சுக்களும் அவர்கள் உதிர்க்கும் முத்து போன்ற சிரிப்புகளும் தான். அதனை என்றுமே நாம் ரசிக்க வேண்டுமே தவிர, ஓரு போதும் அலட்சியப்படுத்திவிட கூடாது. சிறு வயதில் நாம் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியை தருகிறோமோ, அதுவே எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி இருளை விட்டு விலகி வெளிச்சத்தை அடைய உதவி செய்கிறது.

தனிக்குடும்பத்தை விட கூட்டுக்குடும்பமே என்றும் அழகான ஒன்று. ஆனால், இந்த காலக்கட்டத்தில் அது குறைந்து போனதே பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் சஞ்சரிக்க காரணமாகிவிட்டது. அன்று குழந்தைகள், பாட்டி சொல்லும் கதை கேட்டு வளர்ந்தனர். ஆனால், இன்றோ! அதே கதையினை நாம் தொலைக்காட்சியின் உதவியுடன் தெரிந்துக்கொள்ள ஆசை கொள்கிறோம். நாம் பார்க்கும் தொலைக்காட்சி என்ன கூட்டு குடும்பத்தை விட முக்கியம் ஆகிவிட்டதா என்ன!

மாடர்ன் சிட்டியில் பிறந்த ஒரு குழந்தை, தன் பாட்டியின் கதைக்கேட்டு சாதனையாளராக எதிர்காலத்தில் மாறத்துடிக்கும் ஒரு கதை தான் இது.
அந்த குழந்தைக்கு வயது 3, வீட்டை சுற்றிலும் இருக்கும் பொருள்களை பார்த்தவுடன் அந்த சிசுவின் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்து குலுங்கியது. ஷிவா குட்டி என்று அருகில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவள் ஒருத்தி அந்த குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

செல்லம்!! என்னடா, உன் அப்பா சம்பாதிச்ச பொருளையெல்லாம் வேடிக்கை பார்க்கிறாயா என்று அந்த பிஞ்சு கைகளை தடவிக்கொண்டிருந்தாள். அதுவோ இவள் வாயசைவுகளை நோக்கி ஏறிட்டு பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.

எவ்வளவு பேர் மழலை அழகை ரசித்தாலும், அது தாத்தா பாட்டி ரசிக்கும் அளவுக்கு ஒரு போதும் வருவதேயில்லை. அந்த பாட்டியின் வாயசைவுகளை கவனித்த அந்த குழந்தை சிரித்துக்கொண்டிருக்க, தூக்கம் அவனை ஆள முன் வந்தது. திடிரென்று அழுதான் ஷிவா. என்னடா தங்கம், ஷிவா குட்டிக்கு தூக்கம் வருதோ என்று கூறிக்கொண்டு அந்த பாட்டி (தேவகி) குழந்தையை பூ போல் தூக்கிகொண்டு ஊஞ்சலில் படுக்க வைத்தாள். அவன் அப்படியும் அழுகையை நிறுத்தவேயில்லை.

செல்லம், அழக்கூடாது. உனக்கு ஒரு கதை சொல்லவா. என்ன கதை சொல்லலாம் என் பட்டுக்குட்டிக்கு என்று ஒரு நிமிடம் யோசித்த தேவகி சட்டென்று ஷிவாவின் முகத்தை பார்த்து, தூக்கம் உன்னை ஆள போகிறது ஷிவா இப்பொழுது. ஆனால், உன் அப்பா இந்த இந்திய மக்களின் மனதை ஆண்ட ஒரு கதையை நான் கூறவா?? என்று ஷிவாவை கொஞ்ச அவன் எதிர்பார்ப்பு கலந்த பார்வையுடன் அழுகையை நிறுத்தினான்.

சிறு வயதிலே உன் அப்பா படும் சுட்டிடா செல்லம். எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் அடி வாங்கிக்கொண்டே இருப்பான். காரணம், உன் தந்தைக்கு படிப்பில் அவ்வளவு ஆசை இல்லை என்று முகத்தை சோகமாக கொண்டு போனாள் தேவகி. அந்த சிசுவும் அப்படியே ஆச்சரியத்துடன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது.

உன் அப்பா சிறுவயதில் ஒரு இடத்தில் உட்காரவேமாட்டான் ஷிவா குட்டி. துருதுருவென அலைந்துக்கொண்டே இருப்பான். புத்தகத்திடம் நட்பை வெளிப்படுத்த மறுத்த அவனுக்கு, ஊரில் இருக்கும் நண்பர் கூட்டம் ரொம்பவே பெரிது என்று கைகளை முடிந்த அளவு அகன்று விரித்தாள் தேவகி. அவள் கைகளை அகற்ற, அது அவனுக்கு வேடிக்கையாக தெரிய, ஷிவா வேகமாக சிரித்தான்.

உன் அப்பாவிற்கு சிறுவயதிலே கிரிக்கெட் என்றால் ரொம்பவே உயிர்டா தங்கம். காலை பொழுதில் விளையாட செல்லும் அவன், இரவுதான் வீட்டுக்கு வருவான், சாப்பிடக்கூட வீட்டிற்கு வரமாட்டான். இரவு வீட்டுக்கு வந்து இந்த பாட்டியிடம் நன்றாக திட்டு வாங்குவான் என்று கூறி சிரித்தாள் தேவகி. ஷிவாவும் கைகளை தட்டிக்கொண்டு சிரித்தான்.

இரவு வந்து என் அருகில் தூங்கும் உன் அப்பா, நான்கு(Four), சிக்சர் (Sixer) என்று கால்களால் உதைக்கொடுப்பான். ஆம், பகலில் நாங்கள் அவனை அடிக்க, அவனோ என்னையும் உன் தாத்தாவையும் இரவில் அடி பின்னிடுவான். அவன் அவ்வாறு கிரிக்கெட்டை நினைத்துக்கொண்டே கனவில் எங்களை உதைக்க, நாங்கள் என்ன செய்ய முடியும்!! நீயே சொல்லு!! என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஷிவாவை பார்த்தாள் தேவகி.
ஒரு நாள் உன் தாத்தா, இப்படி அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாடிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம். எப்பொழுது படிப்பாய் என்று கேட்டார் ஷிவா.

உடனே அவனுக்கு வந்ததே கோபம் என்று அப்படியே அந்த மூதாட்டி தன் கைகளை கண்ணத்தில் வைத்தாள்.

அதன் பிறகு உன் அப்பா (ஷிவா தந்தை) படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்டா. மறுபடியும் உன் தாத்தாவிற்கு கவலை. சிட்டுகுருவியை போல் சுதந்திரமாய் விளையாடிய உன் அப்பாவை கூண்டுக்குள் அடைந்துவிட்டோமோ என்று கவலைப்பட்டார். படிப்பு நேரம் போக, மற்ற நேரங்களில் எங்கேயும் வெளியில் அவன் செல்லவேயில்லை அதன் பிறகு. வீட்டிற்குள்ளே முடங்கிய அவன், உன் தாத்தா மொபலை எடுத்து வைத்துக்கொண்டு கேம் விளையாடுவான். அதுவும் என்ன கேம் தெரியுமா. கிரிக்கெட் தான் என்று கூறி சிரித்தாள் தேவகி.

ஷிவா அப்படியே அவள் கூறுவதை கவனித்து கேட்டுக்கொண்டிருந்தான். ஒரு சில நொடிகள் தேவகி அமைதியாக!!! ஷிவா ஆ, ஊ, ஆ, ஊ என கத்த தொடங்கினான். அவன் பேசும் மழலை பேச்சை கேட்ட ஷிவாவின் பாட்டி, செல்லத்துக்கு கதை ரொம்ப பிடிச்சு போச்சு போல என்று கொஞ்சினாள். ஷிவா அவனுடைய பாட்டியை பார்த்து சிரித்தான்.
இரு இரு சொல்கிறேன் என்று தொடர்ந்தாள் ஷிவாவின் பாட்டி.

உன் அப்பா, தாத்தா பேச்சை கொஞ்ச நாள் தான் கேட்டார் ஷிவா குட்டி. மறுபடியும் மட்டையை தூக்கிக்கொண்டு தோழர்களுடன் விளையாட சென்றுவிட்டார் என்று சொல்ல ஷிவாவின் சிரிப்பு கூச்சல் ஒலி வீட்டையே ஆண்டது. ஹேய் தங்கம், என்ன உன் அப்பாவுக்கு நீ சப்போர்ட்டா (Support) என்று கூறி சிரித்தாள் தேவகி.

அப்படியும் ஷிவா சிரிப்பதை நிறுத்தவேயில்லை. தேவகி, ஷிவா சிரித்து முடிக்குவரை காத்திருந்தாள். ஏனென்றால், குழந்தைகளின் சிரிப்பும் காலமும் ஒன்று. விதவிதமாக சிரிக்கும் குழந்தைகளின் சிரிப்பை நாம் ரசிக்க மறந்தால், மீண்டும் அது போன்ற ஒரு பொற்காலம் கிடைப்பது மிகவும் அரிது. அதனால் அதனை ரசிக்க ஒரு போதும் மறக்கவேக்கூடாது.

ஷிவா சிரித்து முடிக்க மீண்டும் கதையை தொடங்கினாள் தேவகி.
அன்று எங்கள் பேச்சை கேட்காமல் ஒரு முடிவை எடுத்த தால் தான் செல்லம், இன்று உன் தந்தை அவனுடைய இலட்சியத்தை அடைந்துள்ளான். ஆம், அன்று என் மனதையும் உன் தாத்தா மனதையும் உன் அப்பா ஆண்டான். கிரிக்கெட் தான் வாழ்க்கை என்று தீர்மானம் எடுத்தான். அதனால், இன்று கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயத்தை அன்பு என்னும் மூன்றெழுத்தை கொண்டு ஆள்கிறான் உன் அப்பா என்று கர்வமாக, கம்பீரமாக அந்த தாய் பெருமையாக கூற, ஷிவா அவனையும் மெய்மறந்து கதையை கேட்டுக்கொண்டிருந்தான்.

உன் அப்பா வெற்றியை மட்டுமே ரசிக்கவில்லைடா செல்லம். அவன் பலவித தோல்விகளையும் சந்தித்தான். அதனால், பல மோசமான விமர்சனங்களுக்கு பதில் கூறவும் அன்று நேர்ந்தது. இருப்பினும், அந்த கவலைகளை அவன் ஒருபோதும் நெஞ்சில் சுமந்துக்கொண்டதே இல்லை. அதேபோல் வெற்றி என்னும் சொல்லை கேட்டு தலைகீழ் புரியாமல் குதிக்கவும் இல்லை. இன்று உன் அப்பாவை பற்றி பலரும் புகழ்ந்து பேச, எனக்கும் உன் தாத்தாவுக்கும் மிகவும் பெருமையாக இருக்கிறதுடா தங்கம் என்று சொல்ல, ஷிவா அந்த இடத்தில் ஒரு பெரிய மனிதனாகவே மாறினான். அவனை ஆள நினைத்த தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை விட்டு விலக, புத்துணர்ச்சியுடன் தன் பாட்டி தேவகியை பார்த்தான்.

என்னடா செல்லம் பார்க்கிறாய். நீயும் உன் அப்பாவை போல் ஒரு நாள் பெரிய ஆளாக வர வேண்டும் சரியா என்று கொஞ்சலாக பேசினாள் தேவகி. ஷிவா தன் பாட்டியை பார்த்து மெல்ல சிரித்தான்.

அதற்காக உன் அப்பாவை போல் நீயும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று நான் கூறவில்லை. உனக்கு பிடித்த வேலையை செய். இந்த பாட்டி உன் கூடவே இருக்கும் வரை என்றுமே உனக்கு தான் என் முதல் உரிமை சரியா என்று கூறி சிரித்தாள்.
என்ன, பாட்டியும் பேரனும் ஏதோ தனியாக ரகசியம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றாள் ஷிவாவின் தாய் சாக்ஷி. பாட்டிக்கும் பேரனுக்கும் ஆயிரம் பேச இருக்கும். பசிக்குதுமா என்றாள் தேவகி. இதோ சமையல் ரெடி அத்தை என்று கூறி உள்ளே சென்றாள் சாக்ஷி.
பொறுமையா ரெடி பண்ணுமா. ஒன்னும் அவசரம் இல்லை. நானும் என் பேரனும் கதை பேசிக்கொண்டிருக்கிறோம் என்றாள் தேவகி.

ஷிவா குட்டி, அதனால், உனக்கு பிடித்த ஒரு வாழ்க்கையை யாருக்கும் சிரமம் தராமல் வாழவேண்டும் சரியா. இந்த உலகம் திறமைக்கு எப்பொழுதும் முதல் உரிமை கொடுக்க மறுக்கும். இருப்பினும் சோர்ந்துவிடக்கூடாது செல்லம். விடாமல் போராடனும். வெற்றி கிடைக்கும் வரையும் போராடனும். வெற்றி கிடைத்த பிறகும் அதனை தக்கவைத்துக்கொள்ளவும் போராடனும் சரியா.

உன் தந்தை பெயரை பயன்படுத்தாமல் உனக்கென்று ஒரு பெயரை நீ வாங்க வேண்டும். அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்று அனைவருக்கும் நீ ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் செல்லம், சரியா!! என்றாள் தேவகி.
ஷிவா அப்படியே தேவகியை கவனித்துக்கொண்டே இருந்தான்.
கதை முடிந்த சில நிமிடங்களில் ஷிவா தூங்கிவிட்டான்.

தேவகி அதே இடத்திலே கீழே உட்கார்ந்தாள். அவளுக்கு தன் மகனை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. தூக்கம் ஆட்கொண்ட தன் பேரனுக்கு தன் மகன் வாழ்க்கை கதையை கூற, ஷிவா புத்துணர்ச்சியுடன் கதையை கேட்டான். இன்று தனக்கு எந்த ஒரு திறமையும் இல்லை என்று நினைக்கும் பலருக்கும், தோல்விகளை தோளில் சுமந்து மூலையில் ஒடுங்கும் பலருக்கும் என் மகனின் வாழ்க்கை எவ்வளவு புத்துணர்ச்சியை தரும்!!!! என்று எண்ணி மிகவும் பெருமிதம் அடைந்தாள் தேவகி.

என் மகன் எப்பொழுது வருவான் என்று ஏக்கத்துடன் வாசலில் தேவகி கையில் மொபைலுடன் அமர்ந்திருக்க, காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டாள்.
அவள் சோர்ந்து போகும் பொழுது கேட்கும் ஒரு தாரக மந்திரம் அது.
அந்த மந்திரம் மெல்ல அவள் காதுகளை தீண்ட தொடங்கியது.
அமைதியாக இருந்த மொபைல், சிறிது இடைவெளிக்கு பிறகு திடிரென்று,

தோனி!!!!
தோனி!!!
தோனி!!
தோனி!!

என்று முழங்க, தன் மகனின் பெயரை கேட்டு ஒரு நொடி அவள் உடம்பு சிலிர்த்து போனது.
இந்த தாரக மந்திரத்தை கேட்ட அவள் மனதில் ஒரு புத்துணர்ச்சி பொங்க மீண்டும் உள்ளே எழுந்து சென்றாள் தேவகி.

சில நிமிடங்கள் யோசித்த தேவகி, சட்டென்று டிவிடியை (DVD) ஆன் செய்தாள். சிறிது மௌனத்திற்கு பிறகு அந்த ஒலி வீட்டையே அழகுபடுத்தியது.

தோனி!!
தோனி!!
தோனி!!

என்ற அந்த வார்த்தைகள் ஷிவாவின் காதுகளை தீண்ட அவன் தூக்கத்தில் தன் கால்களை ஊஞ்சலில் இருந்தபடியே உதைத்தான்.

பல இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்த இந்த 2 எழுத்து வார்த்தை (தோனி) அவர் மகனை மட்டும் விட்டுவிடுமா என்ன!!!!

ஷிவாவின் வாழ்க்கை புத்துணர்ச்சியுடன் இனிதே தொடங்கட்டும்…

எழுதியவர் : பாலகார்த்திக் பாலசுப்பிர (29-Jan-17, 6:48 pm)
சேர்த்தது : Balakarthik Balasubramanian
பார்வை : 351

மேலே