என் சோக கதைய கேளு

என்னை பற்றி நான் சொல்ல வேண்டுமென்றால், நான் ஒரு அமெரிக்க வாசி. இந்தியாவை எனக்கு கீழ் கட்டுபடுத்திக்கொள்வது தான் என் ஆசை. இந்திய பெண்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். நான் ஒரு பணக்காரன் என்பதால் என்னை இதுவரை யாருமே வெறுத்தது கிடையாது. அப்படி வெறுத்தால் அவர்களை நான் அழ வைக்காமல் விடமாட்டேன். நான் இந்திய நாட்டில் ஒரு சர்வதிகாரம் புரிந்து அனைவரையும் ஆட்டி படைத்தேன்.

நான் ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து இறங்கும் பொழுதும் இங்கு உள்ளவர்களை ஏளனமாய் பார்க்காமல் இருந்ததே கிடையாது. அதனால், என்னை எதிர்க்க யார் வரப்போகிறார்கள் என்று ஆணவத்தில் அலைந்தேன் நான். விவசாயிகளின் நிலத்தை ஈவு இரக்கமில்லாமல் வாங்கி அதில் தொழிற்சாலைகளை நிருவி ஹாயாக அந்த தொழிற்சாலையில் உட்கார்ந்தேன். என்னை பார்த்து என்னை போல் லட்சக்கணக்கானோர் வசதி ஆக வாழ வேண்டுமென்று ஆசை கொள்ள அவர்களையும் என்னுடன் நான் சேர்த்து கொண்டேன்.

எங்களை அழிக்க யாரும் இல்லை என்று மகிழ்ச்சியுடன் பல ஏழைகளின் வயிற்றெறிச்சலை சுமந்து ஹாயாக வலம் வந்தேன். ஒரு நாள், நான் கடைக்கு சென்ற பொழுது ஒரு கரு நிறத்து அழகி மீது எனக்கு காதல் ஏற்பட்டது. அவள் அவளுடைய கட்டுடல் மேனியால் என்னை மயக்கினாள். விளைவு, அவள் மீது நான் காதல் கொண்டேன். ஊரே எனக்கு அடிமையாக இருக்க, நான் அவளுக்கு அடிமையாகி அவளையே சுற்றி சுற்றி வந்தேன். அவளும் என்னை போல் ஏழையை கண்டால் ஏளனமாய் பார்ப்பாள். அதனால், எங்களுக்குள் ஒரு நல்ல புரிதளுணர்வும் இருந்தது.

சில சமயங்களில் என்னை அவள் கோபம் கொள்ள செய்ய, நான் பொங்கி , பின் சில நொடிகளில் அமைதியாய் அவளிடம் சரணடைவேன். இவ்வாறு எங்கள் காதல் வாழ்க்கை இனிதாய் செல்ல எங்களை எதிர்த்து ஒரு கும்பல் கிளம்பியது. எங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு எதிராக குரல் கொடுத்தது. எனக்குள் பயம் பீறிட்டு கிளம்பியது. எனக்கு மட்டும் அல்ல, என் காதலிக்கும் பயம் அதிகமானது மனதில்.

மக்கள் வேரு ஒரு பிரச்சனைக்காக தன் உரிமையை கையில் எடுக்க, அது ஏதிர்பாராதவிதமாக எங்களை அச்சத்தில் ஆழ்த்தியது. எங்களுடைய சர்வதிகாரத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்தது. குறிப்பாக தமிழ் நாட்டில் எங்கள் இருவரையும் அனைவரும் வசை பாடி எதிர்க்க தொடங்கினார்கள். எங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சிறை பிடிக்க தொடங்கினார்கள். ஒரு முறை சாலையில் நானும் என் காதலியும் நடந்து செல்ல எங்களை மிதித்து துன்புறுத்தி அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். என்னவளின் கட்டுடல் மேனி கலங்கி காயம் அடைந்தது. எங்களால் கடைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை. எங்கு சென்றாலும் எதிர்ப்பார்ப்பை விட எதிர்ப்பே சுற்றி சுற்றி வர, நாங்கள் நரக வேதனையை அடைந்தோம்.

இவ்வாறு அனு அனுவாக சித்ரவதை செய்து எங்களை அழிப்பதை விட ஒரே தடவையாக எங்களை கொன்றுவிடுங்கள் என்று மன்றாட வேண்டிக்கொண்டேன். இறுதியாக எங்களுக்கு ஒரு வாய்ப்பு இந்த தமிழ் நாட்டு மக்கள் தர எண்ணினார்கள். அது வேரு ஒன்றுமில்லை. என்னையும், என் காதலியையும் இந்த ஊரை விட்டே கிளம்புமாறு எச்சரிக்கை விடுத்தனர். வேறு வழியில்லாமல் அவர்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

இந்த தமிழ் நாட்டில் கடைசியாக ஒரு தடவை சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று ஆசை கொண்டேன். எங்களுடைய கோரிக்கையை அவர்களும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர். இளைஞர்கள் எழுச்சி உரையில் இடையில் சில நிமிடம் பேச அனுமதி அளித்தனர். நான் டேபிள் அருகில் கீழே நின்றேன். ஒருவன் மூச்சு திணற திணற எங்கள் பாவச்செயல்களை பேசிக்கொண்டிருந்தான்.

இறுதியாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க என்னை அவன் தூக்கி மைக் முன் நிறுத்தி ஏதோ பேசினான். அப்பொழுது நான் வாய் விட்டு அழ, அவன் அமைதியானான் ஒரு நிமிடம்.
நான் என் பேச்சை ஆரம்பித்தேன்.

என் பாசமிக்க தமிழ் மக்களே!
உங்கள் நிலத்தை அபகரித்தும், உங்களுக்கு சிரமம் கொடுத்தும் ஒரு குற்றவாளியாய் உங்கள் முன் இன்று நான் நிற்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூட நான் கூறமாட்டேன். காரணம், நான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது. விவசாயிகளின் நிலத்தை அபகரித்து கொண்ட நான், அவர்களுடைய தற்கொலைக்கு மூலக்காரணமாக இருந்துவிட்டேன். இனிமேலும் என்னால் தலை நிமிர்ந்து இந்த தமிழ் நாட்டில் வாழ முடியாது. ஆனால், ஒரு சிறிய வேண்டுகோள்!

இன்னும் கொஞ்ச நாளைக்கு, உங்கள் பாரம்பரியத்தை வியப்புடன் நான் பார்க்க வேண்டும். விவசாயிகளின் கடின உழைப்பை நான் பார்க்க வேண்டும். உங்கள் கள்ளம் கபடமற்ற மனதை பார்த்து நான் வியக்க வேண்டும். உங்களுக்கு நான் தந்த தொந்தரவிற்கு எனக்கு ஒரு பாவ மன்னிப்பாக உங்கள் பாரம்பரியத்தை காண ஒரு வாய்ப்பு தாருங்கள்.
இவ்வாறு நான் அவர்களை மன்றாட வேண்டிக்கொள்ள, அப்பொழுது ஒரு பெரியவர் மைக் முன்பு வந்து என் கோரிக்கையை பற்றி பேசினார்.

சரி, உன் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தமிழன் என்றுமே மற்றவர்கள் சொல்லுக்கு மரியாதை தருபவன். எங்களுக்கு இடையூராக நீ இருந்தால் இந்நேரம், உன்னை நாங்கள் விரட்டி அடித்திருப்போம். உனக்கு மார்ச் 1 வரை கால அவகாசம் தருகிறோம். அதற்குள் இந்த தமிழ் நாட்டை நன்றாக சுற்றி பார்த்துக்கொள். எதாவது தவறு செய்ய வேண்டுமென்று நினைத்தால் உன்னை நாங்கள் அந்த நிமிடமே விரட்டி அடிப்போம் என்றார்.

என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு அவர்களிடம் நன்றி கூறினேன் நான்.
என்னவளும் கூட்டத்தில் நின்றாள்.

தமிழர்களின் வீரத்தையும், அன்பையும் கண்டு வெட்கி தலை குனிந்தேன். அந்த பெரியவர் மேடையை விட்டு நகர்ந்தார்.

ஆம், அவர் தான் தமிழ் நாட்டு தொழிற்சங்க தலைவர்.

என் பெயர் கொக்க கோலா என் காதலியின் பெயர் பெப்ஸி…

மீண்டும் சந்திப்போம்…

எழுதியவர் : பாலகார்த்திக் பாலசுப்பிர (31-Jan-17, 12:29 am)
சேர்த்தது : Balakarthik Balasubramanian
பார்வை : 482

மேலே