கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதலும், கருணையோடு செயலாற்றுதலும் தவறா

அருமையான மாலைப்பொழுது...
பரபரப்பான புளியங்குடி நகரில் சிவா, மகேந்திரன் என்ற இரண்டு மாணவர்கள் பெருந்திற்காகக் காத்திருந்தனர்..
மணி சரியாக 06:50 ஆகும் போது சிற்றூந்து வந்தது.. பயணிகள் ஏறுவதற்காக
வழக்கமான நிறுத்ததில் நிறுத்தி வைக்கப்பட்டது...

சிற்றூந்தில் ஏறிய சிவாவும், மகேந்திரனும் சற்று களைப்பாக இருந்ததால் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்...
அப்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த பெரியவர் சிவா மற்றும் மகேந்திரனிடம், " தம்பி இந்த இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் மருந்து வாங்கிவிட்டு வந்துவிடுகிறேன்.. ", என்றார்.. அதற்கு மகேந்திரன், " சரிங்க தாத்தா. நீங்கள் சென்றுவாருங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ", என்றான்..
பெரியவர் சென்ற சிறிது நேரத்தில் ஏறிய இரண்டு பெண்கள் அந்த இடத்தில் அமர்ந்தார்கள்..
அதற்கு சிவா, " அந்த இடத்தில் ஒரு வயதான பெரியவர் அமர வருவார்.. எங்களைப் பார்த்துக் கொள்ள சொல்லி இருக்கிறார்.. ", என்றான்...
அதற்கு ஒரு பெண்மணி, " சரி தம்பி. பெரியவர் வந்தால் எழுந்து இடம் தருகிறேன்.. ", என்றார்..
ஆனால், இன்னொரு பெண்மணியோ, " நீங்கள் பொய் சொல்கிறீர்கள். பெரியவர் வந்தால் நீங்கள் எழுந்து இடம் கொடுங்கள்.. ", என்று மாணவர்களுடன் வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு நின்றார்...
அப்போது சிவா மற்றும் மகேந்திரன் பயிலும் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் வந்தார்...
சிவாவும், மகேந்திரனும் அமைதியாக இருந்தார்கள்...
ஆசிரியை தனது புத்தகங்களை வைத்திருக்குமாறு சிவாவிடம் கொடுத்தார்...
சிறிது நேரத்தில் இடத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்ற முதியவர் திரும்பி வந்தார்...
அவரைக் கண்டது அந்த பெண்கள் எழுந்து நின்று, முதியவர் அமர இடமளித்தார்கள்...

சிறிது நேரம் சென்றிருக்கும்...
இரண்டு பெண்மணிகள் பெருந்தில் ஏறினார்கள்...
அவர்களில் ஒருவர் சிவா மற்றும் மகேந்திரனிடம், " தம்பி இது என் மகள். உடம்புச் சரியில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறேன். அவளால் நிற்க முடியவில்லை..
கொஞ்சம் நீங்கள் எழுந்து அவளுக்கு அமர இடம் தரமுடியுமா?... " என்றார்...
அதைக் கேட்ட சிவாவும், மகேந்திரனும் மறுமொழி கூறாமல் எழுந்து அந்த உடல்நிலை சரியில்லாத பெண்மணி அமர இடமளித்தார்கள்...
முன்பு சிவா மற்றும் மகேந்திரனுடன் சண்டைக்கு வந்த பெண்மணி, இப்போது அவர்கள் இன்னொரு பெண்ணுக்கு அமர இடம் தந்து எழுந்ததைக் கண்டு, மேலும் கோபமாக, " தெரிந்த ஆட்களுக்கு என்றால் இடம் தருவார்கள். நாம் கேட்டால் தருவார்களா? ", என்று சுற்றியுள்ள பெண்களிடம் குறைகூறத் தொடங்கிவிட்டார்...
ஆனால், உண்மையில் இடத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிய முதியவரோ, அமர இடம் கேட்ட உடல்நலமில்லாத பெண்ணோ சிவாவிற்கும், மகேந்திரனுக்கும் முன்பின் தெரியாதவர்களே....

கருணையின் அடிப்படையில் , கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென செயல்பட்டால் இந்த உலகம் நம்மை நன்றாகவே விமர்சிக்கிறது...
சிவா மற்றும் மகேந்திரனின் செயலில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை...
சிவா மற்றும் மகேந்திரன் நினைத்திருந்தால் அவர்கள் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து இருந்திருக்கலாம்...
ஆனால், அவ்வாறு செய்யவில்லை...
காரணம், அவர்களுடைய மனச்சாட்சி அதற்கு இடமளிக்கவில்லை...
அவர்கள் ஆற்றிய செயல்களுக்கு தவறான விமர்சனங்களே பரிசாக கிடைத்தது...

மாணவர்கள் என்றாலே தவறான கண்ணோட்டமே எங்கும் காணப்படுகிறது...
நல்ல மாணவர்களும் இருக்கிறார்கள்....
அவர்களால் செய்ய முடிந்ததைத் தினமும் இந்த சமுதாயத்திற்காகச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Feb-17, 8:48 pm)
பார்வை : 669

மேலே