நல்ல வாழ்க்கைத் துணை அமைய தெய்வீக விளக்கங்கள்

கலியுகத்தைப் பொறுத்த வரையில் ஆண், பெண் இருவருமே தெய்வீகப் பணியில் எந்த அளவிற்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.

இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன என்பது உண்மையே.

அப்படியானால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வரனைத்தான் நாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். அப்படி இருக்கும்போது எதற்காக விரதம், இறை சேவை என்று கேள்வி எழலாம்.

நம்முடைய உறவுகள் இந்தப் பிறவியுடன் முடிவடைவது கிடையாது. அவை மீண்டும் மீண்டும் வளரும்.

எந்த அளவிற்கு இறைப் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறோமோ அதைப் பொறுத்துதானே இனி வரும் பிறவிகள் அமையும்.

இப்பிறவியின் நல்வினை, தீவினைகளின் விளைவுதானே இனிவரும் பிறவிகளில் நாம் பெறப் போகும் வாழ்க்கைத் துணையும் சந்ததிகளும்.

எனவே, நாம் அடுத்தடுத்து பெறும் வாழ்க்கைத் துணை இனிமையாக அமைய தொடர்ந்து நற்காரியங்களையும், விரத பூஜைகளையும் அவசியம் தொடர்ந்து இயற்றியே ஆக வேண்டும்.

திருமணம் மனதுக்கு விரும்பிய ஒருவருடன் நிகழும்போதுதான் அது சந்தோஷத்தை அளிக்கும், நற்சந்ததிகளை உருவாக்க துணை புரியும்.

அதனால்தான் எல்லாப் பொருத்தங்களுக்கும் முன்னோடியாக தம்பதிகளின் மனப் பொருத்தத்தை முக்கியமாக வைத்தார்கள்.

மனம் விரும்பினால் மட்டும் ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை வாய்த்து விடுமா என்ன? இறை சேவையும், பிற உயிர்களின் சேவையுமே ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் என்பதை புராணங்களும் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறும் உறுதிப்படுத்துகின்றன.

பார்வதி, வள்ளி, தெய்வானை, மீனாட்சி, ராதை, ருக்மணி என எந்த அவதார தேவியரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மனதுக்கேற்ற மணாளனைக் கரம் பிடிக்க எவ்வளவோஅரும்பெரும்
தவங்களையும் விரதங்களையும் கடைபிடித்தார்கள் என்பது விளங்கும்.

ஆண்கள் மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணை அமைய

சுயம்பு மூர்த்திகள் அருள்புரியும் சிவாலயங்களில் தினமும் 108 முறை பிரதட்சணமாக வலம் வருதல்.
தினமும் காலை, மாலை சந்தியா நேரங்களில் 108 தோப்புக் கரணம் இட்டு பிள்ளையாரை வணங்குதல். புதன், சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடுதல்.இலவச திருமணங்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தல், பசு மாடுகளுக்கு அகத்திக் கீரையும், எருமை மாடுகளுக்கு தண்டுக் கீரையும் அளித்தல் போன்ற தெய்வீக காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி வந்தால் மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணை அமைய இறைவன்
அருள்புரிவார்.

பெண்கள் மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணை அமைய

கன்னிப் பெண்களும் அவர்களின் பெற்றோர்களும்,தினமும் கோயில் நந்தவனங்களில் உள்ள பூச்செடிகள், துளசி, வில்வ மரங்களுக்கு நீர் வார்த்தல் கோயில்களில் பச்சரிசி மாக்கோலம் இடுதல், சிறப்பாக வசந்த மண்டபங்களை சுத்தம் செய்து அலங்கரித்தல் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு கிலோ எடைக்குக் குறையாமல் தங்கள் கைகளால் மஞ்சள் இடித்து இறை மூர்த்திகளின் திருமஞ்சனத்திற்காக அளித்தல்,
நவராத்திரி தினங்களிலும் விஷ்ணுபதி புண்ணிய நாட்களிலும் இயன்ற சுமங்கலி தானங்களை நிகழ்த்துதல்,
வாசமுள்ள மலர்களைத் தொடுத்து இறை மூர்த்திகளுக்கு அளித்தல்,
போன்ற நற்காரியங்களைத் தொடர்ந்து இயற்றி வந்தால் மண வாழ்க்கை மணமுள்ளதாக அமையும்.

திருமணம் நடத்துவதற்கு ஜோதிடம் கூறும் சில விதிமுறைகள்

1. முதல் விதி

திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி

இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி

புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்...

5. ஐந்தாவது விதி

துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி

முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி

அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி

திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி

கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (6-Feb-17, 9:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 888

சிறந்த கட்டுரைகள்

மேலே