தமிழ் வசந்தம்- கட்டுரை- கவிஜி

தவம் கலைந்ததா.... கலைக்கப்பட்டதா....... வாய் திறக்கிறது காலம்......வானம் திறக்கிறது என் கண்கள்.

தின்று செழிக்கும்
கொன்று தின்னும்
உம் அதிகார ஆணவத்தில்
வர்க்க கட்டுகள் திறக்க
மக்களுக்கான அரசியலை
ஆவென பிறக்க செய்யும்
எங்களின்
அன்றொரு பசித்த செந்நாள்....

இது ஒரு தமிழ் வசந்தம்

இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்தே.... காலத் தேவைக்கு தகுந்தாற் போல பல போராட்டங்களையும் புரட்சிகளையும் சந்தித்தே வந்திருக்கிறது. மானுட வர்க்கம்... அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப் படும் போதெல்லாம் கிளர்ந்தெழும் வீரத்தை தானாகவே கொண்டுள்ளது மானுட இயல்பு.

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரே இருப்பவர்களே தீர்மானிக்கிறார்கள். கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வு.. இன்னும் 50, 100 வருடங்கள் சென்று பார்த்தால் அது வரலாற்று செய்தியாகி இருப்பதை உணர முடியும். முந்தைய காலங்களில் நடந்த போராட்டம் இன்று நமக்கு வரலாறு என்பதை மறுக்க முடியாது. அதிகார வர்க்கம் தலை தூக்கி மக்களின் தலை அடக்க நினைக்கும் போதெல்லாம் ஒரு தோழன் கிளர்ந்தெழுவான். அவன் ஓராயிரம் பேரை உருவாக்கி விடுவான். அவன் ஏசுவாக இருக்கலாம். சே வாக இருக்கலாம். பெரியாராக இருக்கலாம். பெயர் இல்லாத புள்ளியில் இணைந்த மாணவ கைகளாக இருக்கலாம். விவேகானந்தர் கேட்ட அந்த 10 பேர் ஆயிரம் பேராக வந்திருக்கிறார்கள். அவர்களை ஒரு நோக்கத்தின் கீழ் கொண்டு சேர்க்கும் வரைகளை வகுத்தெடுக்க சகாயம் மாதிரி படித்த அறிவாளியான உண்மையுள்ள உள்ளம் முன்னுக்கு வர வேண்டும். தீக்குச்சி யார் என்பதை உராய்தலே முன்னெடுக்கும்.

இந்த போராட்டம் ஆரம்பித்தது வேண்டுமானால் ஜல்லிக்கட்டுக்காக இருக்கலாம். ஆனால் போக போக அது பற்றிய தீ வேறு. அது ஆற்று மணல் திருட்டாக இருக்கலாம். வெண்மை புரட்சியின் விபரீதமாக இருக்கலாம். தமிழ் மொழியின் இரண்டாம் பட்சமாக இருக்கலாம். காவிரி முல்லை பெரியாறு பற்றியதாக இருக்கலாம். இலங்கை தமிழர்களாக இருக்கலாம். மீனவ நண்பர்களின் மரண தோட்டாவாக இருக்கலாம். வெளிநாட்டு பானமாக இருக்கலாம். உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பாக இருக்கலாம். காட்டை காட்டிக் கொடுக்கும் தேசத் துரோகமாக இருக்கலாம் மத்திய மாநிற அரசாங்கத்தின் அலட்சிய போக்கை கண்டிக்கும் விதமாக இருக்கலாம். உள்ளுக்குள் வைத்து புழுங்கி.. குமைந்து.. இயலாமையின் தரையில் புழுவென துடித்துக் கொண்டிருந்த மக்களின் மூச்சுத் திணறலை இந்த போராட்டம் மடை திருப்பி விட்டிருக்கிறது.

"இனியும் பொறுக்காதே மனமே... இனியும் தாமதிக்காதே தமிழ் இனமே.." என கொந்தளிக்க வைத்திருக்கிறது.

பாரதியும் பாரதி தாசனும் வாழ்த்தெடுத்த வளர்த்தெடுத்த மொழி இது. அதன் மீது நாகரிகத்தின் உச்சமென தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ் மக்களின் போராட்டம் இனி விடாது கருப்பு தான். ஒவ்வொரு துளி செந்நீரிலும்,........"மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா" தான்.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!


என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. என்ன நடக்க வேண்டும். கூட்டம் கூட்டமாக மக்கள் ஒன்று கூடத் துவங்கி விட்டார்கள். கார்ல் மார்க்சின்... வார்த்தைகள் நிஜமாகும் தருணம் இது.

தமிழினமே ஒன்று கூடு. இஸ்ரேல் கூடியதை போல. கோலியாத்துக்களை கண்டு பயப்பட தேவை இல்லை. தாவீதுகள் நிறைய இருக்கிறார்கள். எந்த ஒரு போராட்டமும் மக்கள் போராட்டமாக மாறாத வரை வெற்றி கிடைப்பதில்லை. அடித்து உதைத்து மண்ணில் கூடிய கூட்டத்தை வேண்டுமானால் கலைத்திருக்கலாம். மனதில் கூடிய கூட்டம் அப்படியேதான் இருக்கிறது. அதற்கான காரண காரியங்கள் இன்னும் இன்னும் வலுப்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அது சீக்கிரம்..... கூடிய விரைவில் மீண்டும் கிளர்ந்தெழும். ஒத்திகைகளில் சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அரங்கேற்றத்தில் ஆணவ போக்கு அறுபடும். கொடுங்கோல் ஆட்சியை எப்போதுமே ஒரு கூட்டம் எதிர்த்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. இம்முறை கூட்டம் சற்று பெரியதாகி விட்டது. பொதுவுடமைக் கொள்கைகளை ஒட்டி சாதி மதம் கடந்து கூடிய கைகள் இன்னும் பலமாக இறுக ஒரு தலைவன் வேண்டும். அது போலி அரசியல் கடந்த சகாயமாக்களாகவும்....வெமுலாக்களாகவும்.... கண்ணையாக்களாகவும்... இருக்க வேண்டும்.

இலக்கல்ல வாழ்வு. இலக்கை நோக்கிய பயணமே வாழ்வென்று கூறிய புத்தனையும் அறவழி போராட்டமே காலம் வெல்லும் என்ற காந்தியின் போராட்டத்தையும் வேறு வழியே இல்லாமல் கையில் சாட்டை எடுத்த ஏசுவின் போராட்டமும் ஒன்று கூடிய புள்ளியில் தான் இந்த மாணவ புரட்சியை மக்களின் எழுச்சியைக் காண்கிறேன். புலர்வெளிச்சம் கண் படும் இடங்களிலெல்லாம் நியாயங்கள் வழிந்தோடுவதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடத்தான் தோன்றியது. ஆனந்த சுதந்திரம் அடைத்து விட்டோம் என்று. மிகப் பெரிய அச்சுறுத்தலை அதிகார வர்க்கத்துக்கும் ஆணவ போக்குக்கும் எதேச்சதிகார அடக்குமுறைக்கும் கிறுக்குத்தனமான கொடுங்கோல் ஆட்சிக்கும் எதிராக பதிவு செய்து விட்டோம் என்பதை ஆணித்தரமாக அழுத்தமாக கூறலாம்.

எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அது ஊழலற்ற நல்லாட்சி. ஓட்டுக்கு காசு தராத உளவியல் தரிசனம். ஒளிவு மறைவற்ற உண்மையான மக்களாட்சி.

இது ஜனநாயக நாடு. ஒரு சாரர் கோடிகளில் புரளவும்.. மறு சாரர் சாக்கடையில் உருளவும் வாய்த்தால் அது எப்படி ஜனநாயகம் ஆகும். எந்த திட்டமும்.....ஏழைகளையும் பணக்காரர்களையும் இணைக்க சமன்படுத்தும் புள்ளியினை மனதில் கொண்டுதான் போடப்பட வேண்டும். ஆனால் இங்கே நடப்பது என்ன. ? நயவஞ்சகமும்..... நரிகளின் ஊழ் வினையும். அபத்தத்தின் அரசர்கள் ஆட்சி செய்ய.. அறிவுக்கு களஞ்சியங்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் வேகும் சூழல்.

காமராஜரை கண்ட நாடு....அண்ணாவைக் கொண்டாடிய நாடு.....ஓமந்தூராரைக் கொண்ட நாடு.. பெரியார் தேசம் இப்படி நாசமாக போக இனியும் விடக் கூடாது. ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேள். செத்தாலும் பரவாயில்லை. உன் பதில்கள் எதிர்காலத்துக்குள் விதைக்கப்படும். விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்காது. இந்த விதை விருச்சத்தின் விதை. ஒரு விதைக்குள் அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அதுவரை பொறு மனமே என்று கத்தி சொல்லும் வீரத்தின் சுவடுகளை இந்த மாணவர்களின் போராட்டம் பறை சாற்றுகிறது.

எது விடுதலை, எது குடியரசு..? மக்களின் தேவை அறிந்து அதற்கு தகுந்தாற் போல ஆட்சி நடத்தும் முறைதான் சுதந்திரம்.. குடியரசு. ஒரே இரவில் நோட்டுகள் செல்லாது என்பதும்... ஓட்டு போட்ட மக்களை கால் கடுக்க சாலையில் வரிசைக்குள் அடைப்பதும்.... அறவழியில் போராடிய மாணவனை பூட்சு காலம் மிதிப்பதும்.... அதிகாரமே அச்சம் தரும் என்ற மாயைக்குள் நுழைந்து கொண்டு ஆட்சி நடத்துவதும்... மொழி சுதந்திரத்தை பறித்துக் கொள்வதும்.... எந்த வகையிலும் நீதியை நிலை நாட்டாது. தமிழனை எத்தனை முறை அடித்தாலும் எழுந்து வருவான் என்று மீண்டும் நிரூபித்து விட்டது இந்த தமிழ் வசந்த ஜனவரி புரட்சி....

மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக அல்ல மக்கள். இனி கல்வியையும் மருத்துவத்தையும் தனியாரிடம் தாரை வார்க்கும் உருப்படாத வேலைக்கு எதிராக, மதுக்கடைக்கு நிரந்தர தீர்வு காண போராடும் நாள் குறிக்கப்படும்.

காவல் துறை தோழர்களே.... இந்த போராட்டம் உங்களுக்கும் சேர்த்துதான். நீர் கொடுத்தவன் குருதி காணுதல் முறையோ.

தோழர்களே தேவை இல்லாத இடத்தில் ஆங்கிலம் பேசுவதை தவிருங்கள். அந்நிய பானங்களை விட்டொழியுங்கள். உடலினை உறுதி செய்யுங்கள். உள்ளம் பலமாகும். அழுக்கு நீங்கும். போராட்டம் வலுப்பெறும்.

"உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்" என்பது நம் பாட்டனின் மந்திரம். மானுட பாதையை உருவாக்குங்கள்.

அகிம்சையை போலொரு ஆபத்தான ஆயுதம் வேறொன்று உண்டோ....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Feb-17, 3:59 pm)
பார்வை : 379

சிறந்த கட்டுரைகள்

மேலே