சக்கர வண்டிகள்

முகம் முழுதும் பரந்த மகிழ்ச்சியோடு, சிறிய துவிச்சக்கர வண்டியை முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்து அதை தடவிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தான் சுப்ரமணியன். தன்னையே மறந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு சிரிக்கிறான். பின் விழிக்கிறான். உடல் சிலிர்க்கிறான். முணுமுணுக்கிறான். இதையெல்லாம் அவதானித்த சாரதி “என்னப்பா...... இவ்வளவு சந்தோஷமா இருக்க....... சைக்கிள் மகனுக்கா?” என வண்டியை செலுத்திக்கொண்டே பக்கக் கண்ணாடி வழியாக கேட்டான்.
“ஆமாங்க. என் மூத்த மகன் கோபாலனுக்குத்தான். வயசு 10 தான் ஆகுது. படிப்புல கொட்டிக்காரன். விளையாட்டுல சுட்டிப் பையன். சும்மா துறுதுறுன்னு இருப்பான். இப்பவே பதினாறாம் வாய்ப்பாடு வரைக்கும் பாடமாக்கிட்டான். தலைகீழா கேட்டாலும் சொல்லுவான். ரெண்டாம் வகுப்பு படிக்கும்போது மூணாந் தவணைப் பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினான். அப்போதே ஒரு சைக்கிள் வாங்கி கேட்டான். முடிவெட்டுற வேல செய்யுற என்னால ஒடனே வாங்கி கொடுக்க முடியல. இப்ப மூணா வகுப்பு படிக்கிறான். முதலாந் தவணப் பரீட்சையில எல்லா பாடத்திலயும் நூத்துக்கு நூறு வாங்கியிருக்கான். என்னோட வசதிக்கு அவன பெரிய ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்க முடியாது. அவன் கேட்ட சைக்கிளையாவது வாங்கிக் கொடுப்போமேன்னுதான்.....!” சுப்ரமணியன் கூறி முடிக்க முன்னமே “நல்லது...... நல்லது......” சாரதி முடித்துவிட்டார்.


“ஞாயிற்றுக்கிழம நேத்து கூட பின்னேரம் முன் வீட்டு பொடியன் திலக், வீட்டு ஒழுங்கையில சைக்கிள் ஓடி விளையாடியதை வீட்டுல இருந்தே பாத்துக்கிட்டு இருந்தான். அவன் கிட்டபோய் தனக்கும் தரும்படி கேட்டான். ஆனால் திலக் மறுத்திட்டான். எனக்கு ரொம்ப கவலையா போயிடுச்சு. அவன சமாளிக்குறதுக்காக வேற பேச்சு கொடுத்தேன். எனக்கும் சைக்கிள் வேணும்னு அடம்பிடிப்பானோன்னு நினைச்சேன். ஒரு வார்த்தகூட சைக்கிள பத்தி பேசல. அப்பாவோட கஷ்டத்த புரிஞ்சு நடக்குற புத்திசாலிப் பையன். என்னோட நெலமைய அவன் தெரிஞ்சுகிட்டான். அவனோட ஆசைய நான் நிறைவேத்தணுந்தானே. அதான் கடன் பட்டாலும் பாரவாயில்லேன்னு அவனுக்கு இந்த சைக்கிள வாங்கிட்டு போறேன்.” கூறிமுடித்தான் சுப்ரமணியன்.




“இந்த சைக்கிள கொண்டுபோய் காட்டினதும் அவன் சந்தோஷத்துல துள்ளிக்குதிப்பான். கைகள தட்டி ஆடுவான். ஓட்டைப்பல்லு தெரியுற மாதிரி வாய திறந்து சத்தமா சிரிப்பான். ஓடி வந்து என்னைய கட்டிப்புடிச்சு கொஞ்சுவான். கன்னங்கள முத்தத்தாலேயே ஈரமாக்குவான். இந்த சைக்கிள்ள ஏறி தன்னோட மிருதுவான கால்களால மிதிச்சு ஓட்டுவான். அதப்பார்க்க கோடி கண்கள் தேவையே.” இப்படியெல்லாம் சுப்பரமணியன் தன் மனதுக்குள் கண்களை மூடிக்கொண்டு நினைக்கும்போதே அவன் உடம்பெல்லாம் புல்லரிப்பதுபோலானது. இப்பொழுதே அவன் எதிர்பார்த்த அந்த நொடிகளை அனுபவிக்கவேண்டும்போல் அவன் மனது துடித்தது.


“ஏம்பா! உன் மகன் நல்லா சைக்கிள் ஓடுவானா? பழக்கமில்லாம் ஏறி ஓடி விழுந்துடப்போறான். “ சாரதி எச்சரித்தார். “அதுல நான் கவனமா இருப்பேன். நான்தான் அவனுக்க பழக்கனும். அவன் ஒடம்புல சின்ன காயம் வந்தாலும் என் உடம்பு நடுங்கும்.” என பதட்டத்துடன் கூறினான் சுப்ரமணியன். “அட என்னப்பா, கொஞ்சம் கவனமா இருக்கனும்னு சொன்னேன். அதுக்குபோய் இவ்வளவு பதட்டப்படுறியே..... அவ்வளவு பாசமா உன் மகன் மேல! நீ தரசரத மகாராஜாவையே மிஞ்சிடுவ போலிருக்கே!” சாரதி சிரித்தார். சுப்பரமணியனின் உதடுகளும் விரிந்தன.


“ஆமாங்க! தவமிருந்து கெடைச்சவன். கல்யாணமாகி எட்டு வருசத்துக்கு பிறகு பிறந்தான். அந்த எட்டு வருசமா இருந்த எதிர்பார்ப்ப விட, அவன் வயித்துல இருக்கான்னு தெரிஞ்ச அந்த எட்டு மாச எதிர்ப்பார்ப்பு இருக்கே அப்பப்பா...... அத சொல்ல முடியாது! அனுபவிச்சவங்களுக்கு மட்டுந்தான் புரியும்.” மீண்டும் கண்கள மூடினான் சுப்ரமணியன்.


முச்சக்கர வண்டி, ஒழுங்கைக்குள் நுழைந்து வீட்டு வாசலில் போய் நின்றது. சிறிய துவிச்சக்கர வண்டியும் கவனமாக இறக்கி வைக்கப்பட்டது. முச்சக்கர வண்டி ஒழுங்கையை விட்டு வெளியேறியதும் வான் வண்டி ஒன்று உள்ளே நுழைந்து திலக்கின் வீட்டு வாசலில் நின்றது. திலக்கின் தந்தை முன் கதவை திறந்து இறங்கினார். சுப்ரமணியனைக் கண்டதும் சோகம் நிரம்பிய புன்னகையை தெரியப்படுத்திக் கொண்டே வானின் பின் கதவை திறந்து சக்கர நாற்காலியை இறக்கி வைத்தார். ஒன்றும் புரியாமல் சுப்ரமணியன் நெற்றியில் சுருக்கம் ஏற்பட புருவங்களை குவித்து நின்றான்.


சொற்ப நேரத்தில் வலது காலில் பெரிய கட்டுடன் இருந்த திலக்கை தூக்கி அவனது தந்தை அச்சக்கர நாற்காலியில் உட்கார வைத்தார். சுப்ரமணியனும் ஓடிப்போய் உதவி செய்தவாறே “என்ன ஆச்சு?” என கேட்டான். “ஸ்கூல்ல மாடிப்படியில இருந்து வழுக்கி விழுந்திட்டான். வலது கால் எலும்பு முறிஞ்சிடுச்சு. ஸ்கூல் மாஸ்டர் ஆஸ்பத்தரியில சேத்துட்டு டெலிபோன் பண்ணினாரு. ஓடிப்போய் பார்த்துட்டு இப்பதான் கூட்டிட்டு வர்றேன். எப்படியும் ஒரு மாசத்துக்கு நடக்குறது கஷ்டமாதான் இருக்குமாம்.” வந்த அழுகைய கட்டுப்படுத்திக்கொண்டு திலக்கின் அப்பா கூறி முடித்தார்.


சுப்ரமணியனுக்கு மனம் நெருடலாக இருந்தது. தன்னைப்போலவே தன் மகன் மீது இவரும் அதிக பாசம் கொண்டவர் என்பது அவனுக்கு நன்றாக தெரியும். “இதுவரை சைக்கிள்ல விளையாடிய தன் மகன் சக்கர நாற்காலியில் இருக்கும்போது, என் மகன் சைக்கிள் ஓட்டி குதூகளிப்பதை கண்டால், அவர் மனம் வேதனைப்படுமோ? நேற்று கோபாலன் கேட்டதற்கு நான் சைக்கிள கொடுக்கல, இப்ப அவன் விளையாடுறான், என்னால முடியலேன்னு திலக் வேதனைப்படுவானோ?” என எண்ணலானான். அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கலங்கிக்கொண்டிருந்தான்.


இதயத்தின் ஒரு புறம் தான் எண்ணி வந்த ஆசைகள், சைக்கிளை வீட்டுக்குள் எடுத்துச்செல்ல தூண்டிக்கொண்டிருந்தது. மறுபுறம் திலக்கின் நிலைமையும் அவனது குடும்பத்தினரின் சோகமும் வாட்டிக்கொண்டிருந்தன. முடிவெடுக்க முடியாமல் விழித்துக்கொண்டிருந்தான். சக்கர நாற்காலி திலக்கின் வீட்டுக்குள் சென்றது. கோபாலனின் சைக்கிள் வண்டி இன்னும் வெளியேதான் நிற்கிறது.

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (9-Feb-17, 10:25 pm)
Tanglish : sakkara vandikal
பார்வை : 363

மேலே