வீரம் பாய்ந்த மண்ணிலே - மரபு கவிதை

வீரத்தின் விளைநிலமாம்
----- விரைந்துநீயும் பற்றிடுவாய் !
பாரமுமே ஈங்கில்லை
----- பாய்ந்திடுமே பகுத்தறிவே !
தீரமாகச் செயல்தனையும்
----- திக்கெட்டும் செய்திடுவீர் !
தாரமுமே வேண்டுமெனில்
----- தாபிப்போம் இக்கருத்தை !!!


மண்ணுலகில் பிறந்தவராம்
----- மங்காத செந்தமிழர்
கண்களிலே தீரமிக்குக்
------ காசினியை நோக்கிடுவீர் !
வண்ணமிகு வளமையினை
------ வகையுறவே சுரண்டிவிட்ட
எண்ணமெலாம் கெட்டுப்போய்
------ எம்மருங்கும் அடிமைகளே !!!


முன்னொருநாள் வீரத்தை
------ முனைப்பாகக் காட்டினரே !
பின்னாளில் பிசகிப்போய்
------ பிறரடிமை ஆனாரே !
நன்னாளாம் இல்லையினி
------ நலம்கெட்டுத் திரிகின்றார் .
பன்னாளும் வீரத்தைப்
------ பாதுகாக்க மறந்திட்டார் .!!!


செந்தமிழர் வீரத்தைச்
------ செப்புகின்ற மண்ணிதுவே !
பைந்தமிழர் பலர்நோக்கும்
------ பாய்கின்ற வளமனைத்தும்
அந்நாளில் வந்ததுவே !
------ அகன்றதுவே அடிமையெண்ணம் !
எந்நாளும் நிலைத்திடவும்
------ எண்டிசையும் வேண்டுகின்றேன் !!!


பாய்கின்ற மண்ணிலுமே
------ பாராளும் வீரம்தான்
காய்த்திடுமே கனியாகக்
------ காலத்தால் பயன்கொடுக்கும் .
மாய்ந்திடவும் வேண்டாமே
------ மறத்தமிழர் வாழ்வரிங்கே !
சாய்ந்திடவும் வேண்டாமே
------ சாதிப்போம் இவ்வுலகில் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Feb-17, 11:47 pm)
பார்வை : 88

மேலே