அன்னைக்கொரு கீதம்---பாடல்---

பல்லவி :

ஆனந்த ஊஞ்சலை ஆட்டுகின்ற தாயே
அகிலமே போற்றும் அன்னை நீயே...
ஆலயம் நீ வாழும் இடம் தானே
அங்கேயே வாழ்க்கைக் கொண்டேன் நானே...
அன்பையே அமுதாய் உண்டு நாளும்
அன்றிலாய் வளர்ந்து வந்தேன் நானும்......
ஆனந்த......


சரணம் 1 :

இரவு பகல் விழித்திருந்து
என் முகம் பார்த்தாயே...
இமைகளில் போர்த்திக் கொண்டு
என் உயிர் காத்தாயே...
கண்ணீரில் நான் நனைந்தால்
செந்நீரில் நீ குளித்தாயே...
என்னாளும் பாசத்தை
எனக்காக நீ அளித்தாயே...
மஞ்சமும் நோகுமென்று நெஞ்சத்தை விரித்தாயே
பஞ்சமும் வந்தாலும் பசியினைத் தீர்த்தாயே......
ஆனந்த......


சரணம் 2 :

தேனும் பாலும் தினந்தந்து
உன் பசி மறந்தாயே...
சுமைகளைத் தாங்கி நின்று
உன் சுகம் துறந்தாயே...
கண்ணாலே நான் வணங்கும்
வாய் பேசும் தெய்வம் நீயே...
அன்பாலே வென்றிடும்
மணம் வீசும் முல்லை தாயே...
தங்கமாய்ப் பூமியிலே திங்களாய்ப் பிறந்தாயே
வாங்கிய ஆயுளை எனக்கென தந்தாயே......
ஆனந்த......

எழுதியவர் : இதயம் விஜய் (13-Feb-17, 9:15 am)
பார்வை : 498

மேலே