காத்திருந்த காலங்கள் 2

(இந்த கதை காத்திருந்த காலங்கள் 1 என்ற எனது கதையின் ன் தொடர்ச்சி. எனது கதைகள் பகுதியில் நீங்கள் படிக்கலாம்..
சுருக்கம்:
இந்த கதையில் வரும் தலைவன் தலைவி முறையே அவன் அவள் என்றே அழைக்கப்பட்டிருக்கும்.
அவனும் அவளும் அருகருகே வீட்டுக்கார்கள். அவர்களது சிறுவயதில் ஒன்றாக இருந்த இரண்டு வீடும் ஒரு சண்டையால் பிரிந்துவிட்டனர்.
அவள் பள்ளி முதல் இளமறிவியல் படிப்புவரை வேறு நகரில் தங்கி படித்தாள். அவன் அவர்களது ஊரிலேயே படித்தான்.
இருவரும் தங்களது மூதறிவியல் படிப்பை அவர்கள் வீட்டின் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருக்கின்றனர்...
அவர்களுக்குள்ளே மலரும் காதலைப்பற்றிய கதையே இது...
அதன் தொடர்ச்சி தான் இது...)

பேருந்து! இளவயதினர் பலர் தங்கள் முதல்காதலைத் தொட்ட, தொடந்த இடம் மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் இடம் இதுவாகத்தானிருக்கும். பேருந்தின் இரைச்சல்களுக்கிடையில் ஒலிக்கும் இனிய படல்களுடன், காதல் மனங்கள் கவிதைகளைச் சுமந்துகொண்டு செல்லும் ஓர் இன்பப்பயணம்.

அவள் ஓட்டுனரின் பின் இருக்கும் முதல் இருக்கையின் கம்பியை பிடித்தவாறு நின்றிருந்தாள். அவன் பேருந்தின் நடுப்பகுதியில் ‘இவளைப்பார்ப்பதை யாரும் பார்க்கா வண்ணம்’ நின்றுகொண்டிருந்தான். பேருந்தின் குலுக்கல்களில் அவள் தோடு கூந்தலில் ஒளிந்துவிளையாடிக்கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாக அவள் இதழோரத்தில் குறுநகை அவ்வப்போது குடியேறியும் மறைந்துபோயும் அவனுள் மாயங்கள் செய்துகொண்டிருந்தது.

பேருந்தின் அந்த அரைமணிநேரப் பயணம் அவளது “பார்க்காத மாதிரி நடிக்கும் பார்வைகளுடன்” இவ்வளவு விரைவில் முடியும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை. பேருந்து அவர்களது ஊரின் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அவள் இறங்கும் முன் இவன் முதலாவதாய் இறங்கி அவளது வருகைக்காக் காத்திருந்தான். அவள் அந்த கூட்டத்தின் இடையில் பேருந்தின் படியின் வழியே இறங்கி வந்தாள். அவள் இறங்கி வந்த நேரம் அவள் விழிகளை நோக்கி கணைகளை வீசிக்கொண்டிருந்தான். அவள் முகத்தில் அச்சத்தின் ரேகை படர்ந்திருந்திருந்தது.

அவனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது அவளது தந்தையும் அந்த பேருந்தில் இருந்தது. அவனுக்கு அவளது தந்தையின் இருப்பு நினைவுக்கு வரவும் அவன் அவளை நோக்குவதைத் தவிர்த்து பேருந்தில் இருந்து இறங்கும் மற்றவர்களைப் பார்ப்பது போல் பாசாங்கு செய்துகொண்டிருந்தான். அவளும் ஒரு பெரு மூச்சுடன் அவனைக்கடந்து சென்றாள். அவ்வாறு கடந்து செல்லும்போது தன் போக்கின் வழியே நாணம் வழியும் புன்னகையை உதிர்த்துச் சென்றாள். அவனுக்கு மட்டுமே புரிந்திருக்கும் அது அவனுக்கானது மட்டும்தானென்று.

அவளது தந்தை இறங்கிவர இவன் நெஞ்சத்தில் படபடப்பு கூடிப் போயிருந்தது. அவளது தந்தை இவனை சிறிது முறைத்துக்கொண்டே நினைத்துக்கொண்டார் “இவனெதுக்கு இங்க நிக்கிறான்???”

அவனோ பேருந்தில் இருந்து யாரையோ எதிர்ப்பார்ப்பதுபோல் நடித்துக்கொண்டே பேருந்தின் படியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு தெரிந்த நெருக்கமானவர்கள் யாரும் இதுவரை இறங்காததால் அவனுக்கு மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சம் சிறிதாக எட்டிப்பார்த்தது. அவளும் அவள் தந்தையும் பேருந்தில் இருந்து சிறிது தொலைவு நடந்திருந்தாலும் அவளது தந்தை இவனை அவ்வப்போது திரும்பிப்பார்த்துக்கொண்டே இருந்தார்.

“சீக்கிரம் போய்த்தொல மாமா. இன்னைக்கு நமக்கு சனிப்பார்வைதான்போல…” அவன்.

அவளோ அங்கு எதுவும் நடக்காதது போல் இயல்பாக வீட்டினை நோக்கி நடந்துகொண்டிருந்தாள்.




அப்பொழுது அவனது நண்பன் ஒருவன் இறுதியாக இறங்கி வந்தான். அவனைக் கண்டவுடன் “அப்பாடா தப்பிச்சோம்…” என்று நினைத்துக்கொண்டு.
“வாடா மச்சான்…” அவன்.
அவன் நண்பன் சற்று சினம் கலந்த தொனியில் “ஏன்டா. இவ்ளோ நேரம் நான் உன் பக்கத்துல தான் நின்னுக்கிட்டிருந்தேன். இப்பத்தான் உன் கண்ணுக்குத் தெரியுறனா?”
“சத்தம் போடாதடா குரங்கு. மாட்டிவிட்ருவான் போல இருக்கே.” என்று அவன் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான்.
“என்னமோ சொல்ல வர? சத்தமா சொல்லு!” அவன் நண்பன்.
“ ஒண்ணும் இல்லடா கொஞ்சம் படிப்பபத்தி சிந்திச்சுகிட்டு வந்தேன்…” அவன்.
“நீ… படிப்ப பத்தி... நம்புற மாதிரி சாெல்லுடா. நீ யார்னு எனக்கு நல்லா தெரியும்…” அவன் நண்பன்.
என்ற உரையாடல்களுடன் அவர்கள் அவளையும் அவள் தந்தையும் பின்தொடர்ந்தே சென்றுகொண்டிருந்தனர். இவர்களின் உரையாடல் அவள் காதுகளுக்கு எட்ட அவள் கள்ளத்தனமாய் சிரித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தாள். அவளது தந்தை ஏதோ ஒரு சிந்தனையில் அவர்களின் உரையாடலை கவனிக்காமல் அவளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தார்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த எண்ணிய அவள் சற்றே மெதுவாய் தலை திரும்பி அவனைப்பார்த்து மீண்டும் முன்னோக்கி நடக்கலானாள். அதை அவனும் அவனின் நண்பனும் கவனித்துவிட,

“அடப்பாவி. அதான பார்த்தேன்! என்னடா இவன் இப்படிப் பம்புறானேனு. டேய் இது எப்போது இருந்து டா ஓடிக்கிட்டு இருக்கு?” அவன் நண்பன்.
“கொஞ்ச நாளா!!” அவன்.
“இந்த பொண்ணு இங்க படிக்க வந்தே கொஞ்ச நாள்தாண்டா ஆகுது… டேய் இவங்க அம்மா மோசமானவங்க. உனக்கே தெரியும். சண்டனு வந்தா கிழி கிழினு கிழிச்சிடுவாங்க. ” அவன் நண்பன்.
“டேய். என்ன இருந்தாலும் என் அத்தை. அப்படியெல்லாம் தப்பா பேசக்கூடாது…” அவன்.
“அடப்போடா. அத்தையாம் ல அத்தை... ஒருநாள் அவங்க வீட்டுப்பக்கம் யாரையோ பார்க்க நின்னுக்கிட்டிருந்தேன். அப்ப அங்க ஒரு நாய் நின்னுக்கிட்டு இருந்துச்சி. அத சேர்த்துவச்சி அவங்க அம்மா எப்படி ஜாடை பேசினாங்க தெரியுமா?” அவன் நண்பன்.
“உன்னையுமா! இதுக்காகவே அந்த தெருநாய்க்கு சோறுபோட்டு அவங்க அம்மா வளர்ப்பாங்க போலயே…” என்று அவன் மனதுக்குள்ளேயே தன்னை அவள் அம்மா பேசிய நிகழ்வை நினைத்துக்கொண்டான்.
“என்னடா. முணு முணுக்குற?” அவன் நண்பன்.
“அப்படியா…. மேல சொல்லு…” அவன்.
“அடப்பாவி. ஏண்டா உங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் இருக்குற சண்டை மறந்து போச்சா?” அவன் நண்பன்.
“எங்க குடும்பத்த சேர்த்து வைக்கத்தாண்டா நாங்க இரண்டு பேரும் முயற்சி பண்றோம்…” அவன்.
“நல்லா பண்றீங்கடா…” அவன் நண்பன்.
“ டேய். எங்களுக்குள்ள இருக்குறத யார்கிட்டயும் சொல்லிடாதடா…” அவன்.
“முதல்ல இது எனக்கு தெரியும்னு யார்க்கிட்டயும் நீ சொல்லிடாத. நாளைக்கு எதாவது பிரச்சினை வந்தா உன் கூட சுத்துறத்துக்கு என்ன தான் தூக்கிக்கிட்டு போய் உதைப்பாங்க…” அவன் நண்பன்.

இந்த பேச்சிலேயே அவர்கள் வீடுவந்து சேர அவன் அவன் நண்பனிடம் விடைபெற்றுக்கொண்டு அவன் வீட்டிற்குச் சென்றான். உடல் அசதியால் சிறது நேரம் தூங்கிவிட்டான்.





தூங்கி விழித்தவன் சுயநினைவு வந்தவனாய் விரைவாக முகம் கழுவிக்கொண்டான். அவனுடைய மனது அவனது கட்டுப்பாட்டிலேயே இல்லை. தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தான்…
“நான் வேற பொண்ண பார்க்கும்போது என் மேல கல் எடுத்து அடிச்சா. அத பார்த்த நான் அவள் பக்கத்தில் நெருங்கிப்போகும்போது பேருந்து வந்துடுச்சு. அப்புறம் வீட்டுக்கு வந்துட்டேன்…”
அன்று மாலை நடந்த நிகழ்ச்சியை தனக்குத்தானே நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தான்.
“டேய். அங்க என்னடா தனியா உளறிக்கிட்டு இருக்க.” அவனது அப்பா.
“அய்யோ… அப்பா ஒண்ணும் இல்ல. ஒரு கணக்கு விடையே கிடக்கமாட்டேங்குது. ஒரே குழப்பமா இருக்கு…” அவன்.
“என்னடா. படிக்கலாம் தொடங்கிட்டியா… கொஞ்ச நேரம் வீட்டுக்கு வெளியே போய் நடந்துட்டு வா… குழப்பம் தெளிஞ்சு விடை கிடைக்கும்...” அவன் அப்பா.
“சரிப்பா…” அவன். மனதுக்குள் “என்னடா இவரே நமக்கு எடுத்து குடுக்குறாரு… சரிப்போய் பார்ப்போம்...”

வீட்டின் வெளியில் வந்து அந்த மலர்ச்செடிகளுடன் அமர்ந்தான். அவள் எப்படியும் வந்து தன்னைப் பார்ப்பாளென காத்திருந்தான். அவள் மூச்சுக்காற்றுகூட அந்த பக்கம் வரவில்லை. அவனுக்கே சிறிது நேரம் கழித்து சந்தேகம் வந்தது
“இன்று மாலை நடந்ததெல்லாம் நம்முடைய கற்பனையாக இருக்குமோ? அவள் கைப்பேசி எண்ணை வாங்கி வைக்காம போயிட்டோம்...”

அவளுடைய வரவு இல்லாததால் அவன் வீட்டுக்குத் திரும்பி இரவு உணவை உண்டுவிட்டு உறங்க ஆயத்தமானான். அவனது கைப்பேசியை எடுத்து பாத்தால் whats up செய்திகள் குப்பைத்தொட்டியில் உள்ள குப்பாகள் போல் குமைந்து கிடந்தது…
“பய புள்ளைக! ஒரே செய்திய எல்லோரும் அனுப்பித்தொலையுறானுங்க. இவனுங்க அனுப்புற படங்கள எல்லாம் அழிச்சே நம்ம வாழ்நாள் குறைஞ்சுடும் போல…” அவன்.

இன்று வந்த செய்திகளைக் கண்டவன் கவனித்தான் ஒரு புது எண்ணிலிருந்து “hai..” செய்தி வந்திருந்தது. இது அவனுக்கு ஒன்றும் புதியதல்ல. அவனது நண்பர்கள் புது எண்ணை வாங்கி பெண்போல்பேசி அவனை ஏமாற்றுவதே தொழிழாகி விட்டது. நாளை காதலர் நாள் என்பதால் “எப்படியும் நம்ம பசங்க பண்ற வேலையாத்தான் இருக்கும்… இந்த முறை ஏமாற்றக் கூடாது…” என்று முடிவு செய்தான்.
“ஒருவேளை அவளா இருக்குமோ???? ஆனா அவகிட்டத்தான் நம்ம எண் இல்லையே… யார்கிட்டயாவது வாங்கி இருந்தாலும் வாங்கி இருப்பா திருடி… இருந்தாலும் நாம வழிஞ்சி காட்டிக்குடுத்துடக் கூடாது...” அவன்.

இவன் யாரென்று வினவ மறுமொழி வந்தது.
“உனக்குத் தெரிந்தவள்…”
“ எனக்கு நிறையபேர தெரியும்…. அதுல நீங்க யாரு?” அவன்.

“நிறைய பேர உனக்கு தெரியறது இருக்கட்டும் எத்தனைப் பேருக்கு உன்னைத் தெரியும்… “
அவன் மனதுக்குள் “நம்மள பற்றி நல்லா தெரிஞ்சி வச்சுருக்காங்க… ஒரு வேளை நம்ம பசங்க வேலையா இருக்குமோ?”
“ஏதாவது குறிப்பு கொடுங்க…” என்று பதில் அனுப்பினான்.
“உன்னையத் தெரிஞ்ச இரண்டு மூணு பேத்துல நானும் ஒருத்தி…இன்னைக்கு என்னைய பார்து அசடு வழிஞ்சியே… இங்க என் பேர சொல்லு பார்க்கலாம்...”
அவன் மனதுக்குள் “ இதெல்லாம் ஒரு குறிப்பா? ஒரு நாளைக்கு ஒருத்தர்ட்ட பல்ப் வாங்கினா நினைவு இருக்கும்… நல்லா வசமா மாட்டிக்கொண்டேமே… ஒரு வேளை இன்னைக்கு பேருந்து நிறுத்தத்துல நம்மல பார்த்து சிரிச்ச பொண்ணா இருக்குமோ..,.”
“என்ன பதிலையே காணம்?”
அவன் மனதுக்குள் “நம்ம பசங்கதான் எவனோ விளையாடுறான்… ஆனது ஆச்சு…”
என்று எண்ணிக்கொண்டு அவன் பதில் அனுப்பினான் “டேய்… எவன்டாவன்? என்கிட்ட விளையாடுறது… யாருன்னு கண்டுபிடிச்சேன் மவன செத்த…” செருப்பு இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பிவிட்டான்...
“ஒரு பொண்ணு செய்தி அனுப்புறா! அவக்கிட்ட இப்படித்தான் பேசுவியா?”
“டேய்… எத்தனை முறைடா என்ன ஏமாத்துவிங்க… போதும்டா எனக்கே போர் அடிக்குது…” அவன் பதில்.
“அப்பன்னா பொண்ணுண்ணா அவ்ளோ வழியுவியா??? உன்னைய பத்தி தெரிஞ்சுக்காம உன்னைய பிடித்தது தப்புன்னு இப்பத்தான புரியுது… எரும மாடு… பன்னி… நீ நரகத்துக்குத்தாண்டா போவ….” என்ற பதிலுடன் அவனது எண்ணை அவள் தனழ whatsupp ல் தடுத்து வைத்தாள்.
“போங்கடா… போங்க சிக்காமயா போய்டுவிங்க அப்ப வச்சுக்கிறேன்…” அவன். சிறிது நேர சிந்தனைக்குப்பின்..
“ஆமா இதுவரைக்கும் நம்மகிட்ட விளையாண்ட நண்பர்கள் நம்ம எண்ணை தடுத்து வச்சி பேசினது கிடையாது… இந்தமாதிரி எரும பன்னினுலாம் திட்டினது கிடையாதே… ஒருவேளை பொண்ணாத்தான் இருக்குமோ…”
அவனது அறிவுக்கு இப்பொழுதுதான் எட்டியது…
“தடுத்து வேற வச்சுட்டாளே!! கண்டீப்பா அவளாதான் இருக்கும்…” அவன்.




அங்கும் இங்கும் புரண்டு படுத்து அரை மணி நேரத்தை ஓட்டுவதே அவனுக்கு மிகப்பெரும் துன்பமாக இருந்தது… பின்பு ஒரு மணிநேரம் கழித்து சிறிது தூக்கம் கண்ணைக் கட்டியதால் கட்டிலில் அசந்து விழுந்தான். அந்த நேரம் ஏதோ ஒரு புதிய செய்தி வந்தது. உறக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு கைப்பேசியைப் பார்த்தான்…
அவனது நண்பன் “ இனிய இரவு… இனிய கனவுகள் மலரட்டும்… ” என்று செய்தி அனுப்பி இருந்தான்.
“ரொம்ப அவசியம்… போடாங்…” என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே மீண்டும் அந்த புது எண்ணில் இருந்து மீண்டும் செய்தி வந்தது.
“நீ இந்த மாதிரி பொண்ணுங்களைக் கண்டா வழியுறவனு நினைச்சுக்கூட பார்க்கல… உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல…”

அவன் “அதான் புடிக்கலயே. அப்புறம் எதுக்கு செய்தி மீண்டும் அனுப்புற” என்று தட்டச்சு செய்துவிட்டு மீண்டும் சினம்கொண்டு திட்டுவாளோ என்று அதை அழித்துவிட்டான்…

“நான் மட்டுமல்ல நிறைய பசங்க அப்படித்தான்… எனக்கு பெண் நண்பர்கள் இருந்தா நான் ஏன் இப்படி இருக்கப்போறேன்… இல்லாத ஒண்ணுக்குத்தானே ஏங்க முடியும்…”

“சரி அது கிடக்கட்டும் நான் யாருன்னு சொல்லு?”
அவள்தான் என்ற உறுதியில் அவளின் செல்லப் பெயரை (சிறுவயதில் அவன் அழைத்த) அனுப்பினான்…
பல வகையான சிரிப்புடன் அவனுக்கு மறுமொழிவந்தது…
“அடேய்… யாருடா அது? இந்த முறை ஏதோ புதுப்பெயரா சொல்ற… இந்தமுறையும் ஏமாந்துட்டியா… ஊஊஊ...”
இந்த மறுமொழியைப் பார்த்தும் சினத்தின் உச்சிக்கேச் சென்றவன்…
“ஏன்டா… உங்களுக்கு எது எதுல விளையாடுறதுன்னு தெரியாதா…” என்று நன்றாகத் திட்டி செய்தி அனுப்பிவிட்டு அந்த எண்ணை தடுத்து வைத்துவிட்டு தூங்கச்சென்றான்…
அவன் வீட்டு சன்னலின் வழியே அவள் இருக்கும் அறையை பார்த்து படுத்துக்கொண்டே நினைத்துக்கொண்டான்,
“இவளுக்கு நம்ம மேல ஒரு ஆசையும் இல்ல போல. நாமதான் அவளை நினைத்தே நேரத்தை வீணா செலவளிக்குறோம்… இவளென்று நினைச்சுக்கிட்டு எவனெவன்கிட்டயோ மொக்க வாங்க வேண்டியதா இருக்கு… ”
ஒரு பத்து நிமிடம் கழித்து அவளது அறையில் மின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது. அவனுக்கு ஒரு குழப்பம். என்னவா இருக்கும்? இன்னைக்கு புதுசா இப்படி நடக்குது.

அதே நேரம் அவளது வீட்டில்.
“என்னடி. அங்க விளக்கு எரிந்து அணைந்து எரியுது…” அவள் அம்மா.
“தெரியலம்மா. ஏதோ விளக்குப் பொத்தான்ல பிரச்சினைப் போல…” அவள்.
“முதல்ல விளக்க அணைச்சுட்டு படுத்துத் தூங்குடி…” அவள் அம்மா…
அவளும் விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டாள்.

“எரிஞ்சிக்கிட்டு இருந்த விளக்கும் அணைந்து போச்சு… இனிமே அவள் நிம்மதியாத் தூங்குவா… நாமதான் அவள நினைச்சுக்கிட்டே தவிச்சுக்கிடக்கணும்…” அவன்.
அவனுக்கு உறக்கம் கைக்கொடுக்காததால் மீண்டும் கைப்பேசியை எடுத்து அந்த எண்ணுக்கு செய்தி அனுப்பினான்…
“டேய். பொறுத்துக்கோடா. ஏதோ சினத்துல அப்படித் திட்டிட்டேன். இனிமேல் அப்படி பண்ணாத. ஆமா யாருடா நீ?”...
ஒரு 20 நிமிடம் ஏதும் மறுமொழி வரவில்லை. அவன் சற்று அரைத்தூக்த்திற்கு சென்ற நேரம் செய்தி வந்த அறிவிப்புவந்தது. எடுத்து பார்தவனின் தூக்கம் தொலைந்து உற்சாகம் பிறந்தது. வந்த செய்தியானது அவன் மற்றும் அவளின் சிறு வயதில் ஒன்றாக எடுத்த படத்தினைக் கொண்டிருந்தது.
“அடிப் பாவி… நீ தானா… எதுக்குடி என்ன ஏமாத்துன?” அவன்
“ஆமா… ஏன் நான் உன்ன ஏமாத்தக்கூடாதா?” அவள்.
“அதுக்காக இப்படியா! நான்தான் சரியா நீ என்று கண்டுபிடிச்சனே. அப்போதே ஒத்துக்கிட்டு இருக்கலாம். வழக்கமா பசங்க பொண்ணுங்க மாதிரி நடிச்சு என்ன ஏமாத்துவாங்க. இப்ப பொண்ணு பயன் மாதிரி நடிச்சு ஏமாத்திடுச்சு…” அவன்.
“ஆமா! எனது எண்ணை whats up ல எதுக்கு தடுத்து வச்ச? அரை மணி நேரமா எப்படித் தவிச்சுப்போனேனு தெரியுமா?...” அவள்.
“அது நீ தான்னு எனக்கு எப்படித் தெரியும்…” அவன்.
“அதான் நான் என் அறையோட விளக்க அணைச்சு அணைச்சு போட்டு உனக்கு சைகைக் குடுத்தேன். நீ கண்டுக்கவே இல்ல… அம்மாகிட்ட திட்டு வாங்கியதுதான் மிச்சம்…” அவள்.
“நல்லா கொடுத்த சைகை… வாங்கு… நல்லா வாங்கு… என்ன ஏமாற்றின உனக்கு நல்லா வேணும்…” அவன்.
“ஒருநாள் எங்க அம்மா ஒரு நாய திட்டமாதிரி உன்ன திட்டுனாங்களே அந்த அளவுக்கு இல்ல?” அவள்.
“சரி அத்தை தானே திட்டுனாங்க… எல்லாம் திருமணத்திற்குப் பிறகு பேசிக்கலாம்…” அவன்.
“அத்தையா??? திருமணமா? யாருக்கும் யாருக்கும்?” அவள்.
“உனக்கும்… எனக்கும்…” அவன்.
“பார்ரா… ஏதோ தெரிஞ்ச பையனாச்சே… பேசலான்னு வந்தா… இப்படித்தான் பேசுவியா… நான் எப்ப உன்ன காதலிக்கிறேனு சொன்னேன்… நீயே கற்பனை பண்ணிக்காத. அந்த நினைப்போட என்கிட்ட பேசாத...” அவள்.
“சரி நீயும் தெரிஞ்ச பையன் அப்படின்ற நினைப்போட மட்டும் என்கிட்ட பேசவேண்டாம்… என்னோட காதலியா பேசுறதா இருந்தா என்கிட்ட பேசு. இல்லனா நாம இரண்டு பேரும் பேசவே வேணாம்…” அவன்.
“இதுதான் இந்த பசங்கக்கிட்ட இருக்கிற கெட்டப்பழக்கமே. அந்த எண்ணத்தோட என்னிடம் பேசாதே…நண்பனா மட்டும் பேசு… சரினா சொல்லு...” அவள்.
என்று அவள் சொல்லிவிட்ட பின் இருவரும் 10 நிமிடம் அமைதிகாத்தனர். அவள் நடிக்கிறாளா இல்லை உண்மையத்தான் சொல்கிறாளா என்று அவனுக்கு ஓரே குழப்பம். …




சிறிது நேரம் கழித்து அவளிடமிருந்து “முடிவைச் சொல்லு…” என்று செய்தி வந்தது.
“நான் என் முடிவ முன்னையே சொல்லிட்டேன்… அதுல எந்த மாற்றமும் இல்ல…” அவன்.
மீண்டும் மீண்டும் “சொல்லு” என்ற செய்தி மட்டுமே அவளிடம் இருந்து வந்தது…
“அதத்தவிர என்கிட்ட சொல்றத்துக்கு ஒண்ணும் இல்ல… வேற என்னத்த நான் புதுசா சொல்வது…” அவன்.

“ ஆமா நீ என்ன துணிச்சலில் என்னைத் திருமணம் செய்துகொள்வேன்னு சொன்ன?” அவள்.
“நேற்று பல்கலைக் கழக பேருந்து நிறுத்தத்துல நான் உன்கிட்ட நெருங்கி வரும்போது விலகிப்போகாம நீ இருந்த. நீ நினைச்சுருந்தா என்னை விட்டு நழுவி ஓடிருக்கலாம். ஆனா நீ செய்யல... “ அவன்.
“ஆமா. அதுக்குள்ள அந்த பேருந்துகாரன் வந்து கெடுத்துட்டான்…” அவள்…
“அடிக் கள்ளி… உள்ளுக்குள்ள அவ்வளோ ஆசையும் வச்சுக்கிட்டுத்தான் என்ன ஏமாத்துறியா?” அவன்.
“உன்ன ஏமாத்தாம வேற யார ஏமாத்தப்போறேன்… சரி சொல்லு...” அவள்.
“அடியேய்… திரும்பவும் முதல்ல இருந்தா…” அவன்.
“ போடா… உன்கிட்ட போய் சொல்லு… சொல்லுனு கேட்டுக்கிட்டு இருக்கிறேன் பாரு… நீ ஒரு மாங்காய் மடையன் டா…” அவள்…
“அது உனக்கும் தெரிஞ்சு போச்சா…” அவன்.
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்… என் வாழ்நாள் முழுக்க உன் தோட்டத்து மலர்களைச் சூடனும்… அவ்வளவுதான்... நாளை நாம் பல்கலைக்கழகத்தில் சந்திப்போம்…” அவள்.
என்று செய்தியை அனுப்பிவிட்டு அவன் அந்த செய்தியைப் பார்த்ததை உறுதி செய்துகொண்டு “நாளை வரை ஏங்கிக் கிடக்கட்டும் “ என்று அவனது எண்ணை whats up ல் தடுத்து வைத்தாள்… அந்த செய்தியை அனுப்பிய நேரம் சரியாக 12 மணி ஆகியிருந்தது… காதலர் நாள் பிப்பரவரி 14 பிறந்திருந்தது….

அந்த செய்தியைப் படித்துவிட்டு சிறிது நேரம் திகைத்துப்போனவன்…
திருப்பி செய்தி அனுப்ப எத்தனித்தபோதுதான் உணர்ந்தான் தனது எண் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை…
“அடிப்பாவி… இப்படித்தவிக்க விட்டிட்டியேடி… இன்னைக்கு உறக்கம் வந்த மாதிரிதான்… நாளை வரைக்கும் காத்திருக்கனுமே…” அவன்.
அவனது வாழ்வில் அவனுக்கு அவளுடன் நடந்த இனிமையான நிகழ்ச்சிகளையெல்லாம் அசைபோட்டுக்கொண்டே விடியும் நேரத்தை நோக்கி காத்திருந்தான் கனவுகளில்….



பிப்பரவரி 14 காலை…
அவன் வெகு விரைவாக எழுந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தொடங்கி காலை உணவு உண்டுகொண்டிருந்தான். அப்பொழுது அவனின் பெற்றோர்களின் உரையாடல்...
“ஆமா… என்னடி… பக்கத்துல அவங்க வீட்டுல நிறைய பேரு வந்துருக்காங்க…” அவன் அப்பா.
“அவிங்க பொண்ண பொண்ணு பார்க்க இன்னைக்கு வராங்கலாம்… யாேரோ நல்ல வசதியுள்ள ஆட்களாம்… பக்கத்து வீட்டு அம்மா சொன்னாங்க” அவன் அம்மா.
இதைக்கேட்ட அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. வாய்க்கு கொண்டு சென்ற உணவு தவறி வட்டிலில் விழுந்தது… அவனது காதல் கற்பனைகளும் சுக்கு நூறாக உடைந்தது…
“அப்படியா… பரவால நல்ல செய்திதான்… என்ன நம்ம இரண்டு வீடும் சண்டை பண்ணாம இருந்திருந்தா நாமதான் அங்க முதல்ல நின்னுருப்போம்… நாம எடுத்து வளர்த்த பொண்ணுடி அவ… எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்…” அவன் அப்பா.
அவர்களின் உரையாடல் இப்படித் தொடர்திருக்க அவள் உணவை மேற்கொண்டு உண்ணாமல் பாதியிலேயே எழுந்து சென்றான்…
“டேய்… ஏண்டா சாப்பிடாமயே போற… உனக்கு இதே வேலையாப் போச்சு…” அவனது அம்மா…
“அம்மா… நேரம் ஆச்சு நான் பல்கலைக்கழகம் போறேன்..” அவன்.
என்று சொல்லிவிட்டு அவன் வீட்டைவிட்டு வெளியே வந்தான். அவன் வெளியே வரவும் அவளைப் பெண்பார்க்க வந்தவர்கள் 4 கார்களில் அவளின் வீடு வந்து சேர்நததற்கும் நேரம் சரியக இருந்தது.
அவள் வீட்டில் அவளது உறவினர்கள் நிறைந்திருந்து வந்திருக்கும் பெண்வீட்டாரை வரவேற்க காத்திருந்தனர்….
இதைக்கண்ட அவன் கண்களில் வழியவந்த நீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மலர்தோட்டத்தில் மலர்ந்த மொட்டுகளிடம் விடைபெற்றுக்கொண்டு அவன் அம்மாவிடம் சொன்னான்…
“அம்மா… செடிலாம் வாடி இருக்குது… இன்னைக்கு ஒருநாள் மட்டும் நீ தண்ணீர் விட்டுரு…”
தன் வாடிய முகத்தை அந்த வாடிய செடிகளுக்குக் காட்ட விரும்பாத அவன் பல்கலைக்கழகம் நோக்கிச் சென்றான்…
அவன் செல்லும் வழியையே அவளது கண்கள் அவைகள் காணும் தொலைவுவரை கண்டுகொண்டே இருந்தன ‘யாரும் பார்க்கா வண்ணம் கண்ணீருடன்…’ இதை அவன் கண்டிருக்க வாய்ப்பில்லை… எப்படியும் இவளைத்திட்டிக்கொண்டிருப்பான் “தன்னை ஏமாற்றிவிட்டாளென…”
அவர்கள் கண்ணீர் நிரந்தரமா என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்...

மீண்டும் சந்திப்போம்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (14-Feb-17, 12:09 am)
பார்வை : 424

மேலே