யாரை அழைத்தாய் கண்ணம்மா

கண்ணாமூச்சி விளையாடிய
கண்ணம்மா!
காமுகனிடம் சிக்கிக்கொண்டாயே!
கடவுளே!
கருணையே நீ தான் என்றால்
காக்கும் தொழில் மறந்ததேன்?
கலங்கமில்லா கயல்விழியாளை
கயவன் கலைந்தெறிந்த
காரணம் என்று எதை சொல்வாய்?

பாசமும் வேஷமும் அறியாத
பச்சைக்கிளியே!
பருந்துக்கு இரையாகி போனாயே!
பரந்தாமா!
பகைவன் இவன் என புரியாமல்
பட்டாம்பூச்சி ஒன்று படபடத்தபோது
பார்கடலில் சயனித்திருந்தாயோ?
பாவி ஒருவன் கசக்கி எறிய
பட்டுப்பூவை படைத்ததும் ஏன்?

தூணிலும் துரும்பிலும் இருப்பின்
துள்ளி திரிந்த மான்
துன்புற்று துடித்த போது
தூங்கிப்போனாயோ?
தூப அலங்காரம் நிறைவில்லையா
துதி பாடியது போதவில்லையா?
துலாபாரக் கண்ணா!
தும்பை தளிர் ஒன்றை
துளிர் விடாமல் செய்ததேன்?

வண்ணத்துப்பூச்சியின் அழகு
விரயமாகிப்போனதே! இந்த
வலி களைய வழி உண்டோ?
விலங்கொன்றை மனித ரூபத்தில்
வலம் வரவிட்ட உனக்கு
விலங்கிட வேண்டும், உன்
விலாசம் தருவாயா?
விதிப்பயனென்று சொல்லி விவாதம் முடிப்பாயா?

எழுதியவர் : பூம்பாவை (14-Feb-17, 12:53 am)
சேர்த்தது : Poompaavai
பார்வை : 118

மேலே