தாலி

மீன்காரி பொன்னி மகள் சினத்தங்கத்துக்கு வயது இருபது. ஊரில் நடக்கும் அழகு ராணி போட்டியில் தங்கம் பங்கேற்றிருந்தால் அவளுக்குத்தான் தங்கப் பதக்கம் . சினிமாக்காரனின் பார்வையில் அவள் பட்டிருந்தால் அவள் வாழ்க்கை வேறு. பொன்னிக்கு அவள் ஒரே ஒரு மகள். வயது வந்த காலத்தில் மூட்டையைச் சுமந்து கொண்டு யாழ்ப்பாணம் பெரிய கடைக்குப் போய் மீன் விற்கமுடியாத நிலை பொன்னிக்கு. பொன்னியின் கணவன் பொன்னையன்; பத்துவயது மகளையும், மனைவியையும் நிர்க்;கதியாக விட்டு விட்டு, கொழும்புக்கு வியாபாரம் செய்யப் போனவன், போனவன் தான் வீடு திரும்பவே இல்லை.

பொன்னையனை கொழும்பிலை கண்ட பொன்னியின் தூரத்துச் சொந்தக்காரன் சண்முகம்; சொன்னான் “பொன்னி, உண்டைப் புருஷன் பொன்னையன் கொழும்பலை சீலாவதி என்ற பணக்கார சிங்களத்தியோடை குடும்பம் நடத்துவதை நான் கண்டனான். இனி அவன் திரும்பி உன்னிடம் வருவான் என்று எதிர்பாராதே” .

“சண்முகா நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். நான் எப்பவோ அவனைத் தலை முழுகி விட்டிட்டேன.; அவன் கட்டிய தாலியைக் கூட களட்டி எறிந்து விட்டேனே. இப்ப எனக்கு உறவு எண்டு இருப்பது என் மகள் தங்கம் ஒருத்தி மட்டும் தான். இந்த தள்ளாத வயசிலை நான் பெரியகடைக்கு கூடையைச் சுமந்து கொண்டு போய் மீன் விற்கமுடியாத நிலை. இவள் தங்கம் தான், மீன் கொண்டு போய்; விற்கிறாள். என்னைவிட அவளிடம் மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். அதாலை எதோ வரும் வருமானத்திலை தங்கத்தின்டை கலியாணத்துக்குக் காசு மிச்சம் பிடித்து கொண்டு வாறன்” என்று பொன்னி சண்முகத்துக்குச் சொன்னாள்.

பொன்னி மகள் சின்னத்தங்கம் நளினச் சிரிப்புக்காரி. நறுக்கென்ற பேச்சுக்காரி. ஆடவர் கண்வீச்சுக்கு அலட்சியப் பார்வைக்காரி. காளையரைக் கவரும் கட்டுடலும், திரண்டு புடைத்த பின்னழகும். முத்துபோல்; பல்வரிசையும,; கொவ்வைச் சொண்டுகளும். கிள்ளத் தோன்றும் கன்னங்களும். தலைமேல் மீன் கூடையோடு, தாளம் தவறாத நடை யோடு; கைவீச்சும், அதற்கேற்ப அசைபோட்டு ஒடிந்துவிடும் இடை தெரிய, பெரிய கடையை நாடி ஒயிலாகப் போய்ச் சேர்வாள்.

மீன் கடையில் வியாபாரம் செய்த பல பெண்களில் தங்கத்துக்கு; மீன் வாங்க வருபவர்களிடையே ஒரு தனி இடம் இருந்ததுக்கு முக்கிய காரணம் சிரித்து மீனைப் பேரம் பேசும் அவள் அழகுதான். அவள் சிரிப்பிலும், பார்வையிலும் அவளின் கைப்பட வாங்கும் மீனைச் சமைத்தாலே தனிச்சுவை எனக் கருதி அவளிடம் மீன் வாங்குவதற்காகவே நான் முந்தி நீ முந்தி என்று மல்லுக் கட்டிக் கொண்டு நிற்பார்கள் அவள் அழகை இரசித்தபடி வாடிக்கையாளர்கள். அதை பார்த்து மற்ற மீன்காரிகளுக்குப் பொறாமை வேறு. ஆனால் அவள் அருகே இருந்து மீன வியாபாரம் செய்யும் மீனாட்சிக்கும் மட்டும்; தங்கத்தின் மேல் ஒரு தனிப்பற்று. காரணம் அவள் உள் நோக்கம் வேறு. பஸ்டிரைவராக இருக்கும் ஆண் அழகனான தன் அண்ணன் சுந்தரத்துக்கு தங்கம்தான் பொருத்தமானவள் என்று எப்பவோ மீனாட்சி தன் மனதுக்குள் தீர்மானித்துவிட்டாள். அதனால் அடிக்கடி தன் தமையன் சுந்தரம் தன் மேல் எவ்வளவுக்குப் பற்றுதல் வைத்திருக்கிறான் என்றும், சிகரட், பீடி ,குடி என்று கெட்ட பழக்கங்கள் இல்லை என்றும், சிக்கனக்காரன் என்றும் தமையனை அடிக்கடி புகழ்பாடுவாள் மீனாட்சி. தங்கம் அதைக் கேளாதவள் போல்; தன் வியாபாரத்தில் கவனமாக இருப்பாள்.

மைனர் மாணிக்கம் கழுத்தில் தங்கச் சங்கிலிமின்ன, தன் தங்கப் பல்லை சிரித்துக் காட்டியபடி , தினமும் தங்;கத்திடம் மீன் வாங்க வரும் முக்கியமான பிரமுகர்களில் ஒருவன்.

“ என்ன தங்கம் நீ உடுத்திருக்கிறது புதுச் சீலை போலத் தெரியுது. அதுக்கு ஏற்ற பிளவுசு வேறை போட்டிருக்கிறாய். உண்டை நிறத்துக்குப் பொருத்தமான சீலைதான். சீலை விலை அதிகமோ? நான் தரட்டே சீலையின்றை காசை”, இளித்தபடி கேட்டான் மைனர் மாணிக்கம்.

“அய்யோ வெண்டாம் மைனர் உம்முடைய காசு. நான் உழைத்து; மிச்சம் பிடிச்சு வாங்கின சேலை இது”இ நறுக்கென்று தங்கம் பதில் சொன்னாள். முகத்தை சுழித்துக்கோண்டு பேசாமல் போனார் மாணிக்கம்.

மாணிக்கம் போன பின், மீன் வாங்க வந்தார் வட்டிக் கடை வடிவேலு. “என்ன தங்கம் எப்படி இண்டைக்கு வியாபாரம்? அதிக மீன் வாங்கி விற்கக் கடனாய் பணம் வட்டியில்லாமல் நான் தரட்டே. நீ நினைத்த நேரம் திருப்பித்தாவேன்” சிரித்தபடி கேட்டார் வடிவெலு.

“ ஐயோ வேண்டாம் உம்முடைய காசு வடிவேலு ஐயா.. அதைச்சாட்டி அடிக்கடி என்னோடை பேச நீர் வருவீர்.” தங்கம் குனிந்தபடி பதில் சொன்னாள்;. தங்கம் பார்வை தன் மேல் விழாததைக் கண்ட வடிவேலு ஏமாற்றத்தோடு மீன் வாங்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

அடுத்து வந்தார் மீன் வாங்கக் கையில் உமலோடு விதானையார் வினாசித்தம்பி. இரு தடவை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். பெண்களைக் கண்டாலே சபலப் புத்தி அவருக்கு.

“என்ன தங்கம் உண்டை முகத்தில் இண்டைக்கு வாட்டம். வேலை என்ன உனக்கு கனத்துப் போச்சோ? நான் வரட்டே உனக்கு உதவி செய்ய”?. கரிசனையொடு கேட்டார் விதானையார் வினாசித்தம்பி.

“ ஐயோ வேண்டாம் விதானையார் எனக்கு உம் உதவி. கேட்டதுக்கு மிகவும் நன்றி.’ நறுக் என்று பதில் சொன்னாள் தங்கம் தன் முகத்தை உம்மென்று வைத்தபடி.

“என்ன குஞ்சுவை கனகாலாம் காணோம். காய்ச்சல் ஏதும் வந்ததோ உனக்கு? மருந்து வாங்கிக் கொண்டு வந்து நான் தரட்டே உனக்கு இது அடுத்து வந்த கவலையுடன் கலியாணமாகாத கந்தையர் கேட்டார்.

“மருந்தும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். தினமும் நான் மீன் கூடை சுமந்து மீன் விற்கக் கடைக்கு வருகிறேன். உமக்கு நான் இருப்பது தெரியவில்லையோ” கோபத்தோடு பதில் சொன்னாள் தங்கம்.

அடுத்து மீன் வாங்க வந்தவர் போஸ்ட் மாஸ்டர் சின்னையர். அவர் கேட்டார் தங்கத்தைப் பார்த்து “ என்ன தங்கம் கையிலை கிளிட்டு வளையல்? தங்கத்துக்கு இரண்டு பவுனிலை நல்ல தங்க வளையல் நான் வாங்கித்தரட்டே”?.

“நீர் முதலிலை உம்முடைய மனுசிக்கு வளையல் வாங்கிக் கொடும். நூன் அவவுக்கு சொல்லுகிறன நீர் எனக்கு வளையல் வாங்கித்தரவோ என்று கேட்டதாக” என்றாள் சிரித்தபடி தங்கம்.

ஒன்றும் பேசாhமல மீன் வாங்காமல் போனார் சின்னையர்.

“ என்ன விலை கயல்மீன் தங்கம்? மீனின் கண்கள் உன் விழிகள் போல இருக்கிறதே” நக்கல் நடராசர் கேட்டார் தங்கத்தைப் பார்த்து.

மீனின் விலையைக் கூட்டி சொன்னாள் தங்கம்.

“உனக்கும் சேர்த்தோ மீனின் விலை. அப்படி என்றால் நீ சொன்ன விலைக்கு நான் வாங்கத் தயாh” என்றார்; நக்கல் பேர்வழி நடராசர்;
.
“ நான சொன்ன விலைக்கு நீர் காசு தந்தாலும் மீன் உமக்கு நான் ; தரப்போவது இல்லை. திரும்பிப் போம் வந்த வழியே.” கோபத்தோடு பதில் சொன்னாள் தங்கம்.
,
வாடிக்கையாளர்களின் வேடிக்கைக் கேள்விகள் அம்பு போல் அவளைத் தைத்து நின்றன. என்ன கரிசனம் அவள் மேல் அவர்களுக்கு. அவர்கள் பேச்சினில் தான் எத்தனை வம்பு.

தங்கம் தன் பிளவுசுக்குள்; கையை வைத்தாள். அதைப் பார்த்த அவள் வாடிக்கையாளர்கள் ல்லோரும் விட்டனர் பெருமூச்சுக்கள். வெளியே எடுத்தாள் தங்கம் தன் மார்பகத்தே மறைத்து வைத்திருந்த தாலிக்கொடியை.

சத்தம் போட்டு எல்லோரும் கேட்க தங்கம் சொன்னாள் “என் புருஷன் தந்த பாதுகாப்பு இது. அவர் கையால் கட்டிய தாலியிது. இப்ப நான் ஒருவனுக்குச் சொந்தம். கொஞ்ச நேரத்தில் என் அத்தான் வருவான் என்னை கூட்டிப் போக. அப்போ கேளுங்கள் கேள்விகளை அவரிடம் மறக்காமல். சரியான பதில்களைத் அவர் தக்கபடி தருவார்”.

கேள்வி கேட்டவர்கள் அனைவரையும் அடுத்த வினாடி அந்த இடத்தில் காணோம். வேறு தங்கத்தை தேடிப்போயினரோ? தங்கத்தின் மச்சான் வரமுன் விரைந்து ஓடினரோ?

மீனாட்சிக்கோ தங்கம் சொன்னதைக் கேட்டு ஒரே அதிர்ச்சி. “என்னடி தங்கம்.; உனக்குத் திருமணம் எப்பவடி நடந்தது? உண்மையை எனக்குச் சொல்லடி”.

கேள்வி கேட்ட மீனாட்சியைப் பார்த்து கெக்கட்டம் விட்டுச் சிரித்தாள் சின்னத்தங்கம்.

“என்ன அக்கா உனக்குத் தெரியாமலா எனக்குத் திருமணம்? விரலி மஞ்சளில் கயிற்றால் கட்டிய தாலியும், ஒரு கொஞ்சம் குங்குமமும் பலர் பார்வையிலும் கொஞ்சலிலுமிருந்து என்னைக் காக்கத்தான் இந்தத் போலித் தாலி. இந்தத் தாலி எனக்கு ஒரு வேலி”.

(பி.கு: நான் எழுதிய கவிதையை மாற்றத்தோடு உருவாக்கிய சிறுகதை இது)

*******

எழுதியவர் : வாழ்க்கை பொன் குலேந் (14-Feb-17, 7:40 am)
Tanglish : thaali
பார்வை : 534

மேலே