விழி சொல்லும் வழி - மரபு கவிதை

விழிசொல்லும் வழிதனிலே
----- விண்மீன்கள் உலாவருமே !
கழிநடையில் காதலுமே
------ கைகூடும் நாள்வருமா !
பழிவருமே பாதகத்தி
------ பதில்சொல்ல மாட்டாயா !
அழிக்காதே எனையும்நீ
------- அழகானப் பார்வையினால் !


விழிகூடத் தேடிடுமே
------ விரைந்துவாராய் என்னிடமே
வழிதெரியாப் பருவமகள்
------ வாடிடுமே உன்னிதயம்
விழிக்குள்ளே நான்தானே
------- விண்ணோக்கிப் பார்க்காதே
அழிகின்ற யாக்கைதான்
------- ஆனாலும் என்செய்வேன் !


இசைக்கின்ற என்கையிலே
------ இசையாகிப் போய்விடுவாய்.
பசைபோல நமதுள்ளம்
------- பசுமையான நினைவுகளால்
அசைபோடும் என்றுமினி
------ அகலாதே எனைவிட்டே .
திசைதோறும் உன்நினைவு
------ திண்டாடும் என்னிதயம் !!!!!


விழிகளிலே உன்நினைவு
------ விருப்பமாக வந்திடவே
தொழிலெல்லாம் மாறிப்போய்
------- தொலைநோக்கும் பார்வையிலே
அழகாக உன்னருகில்
------ அன்பாக அமர்ந்திடுவேன் .
வழியெல்லாம் நீயாகி
------ வந்தணைப்பாய் எனைச்சேர்த்தே !!!!


கண்ணீரும் கதைசொல்லும்
------ காவியமும் படைத்திடுமே
விண்ணுலகின் வியன்பொருளே
----- விரைந்துநீயும் வந்திடுவாய் .
எண்ணமெலாம் நீயன்றோ
------ என்னுயிரே வாடுகின்றேன்.
பண்பலவும் பாடிடுவேன்
------ பாசத்தால் தேடிடுவேன் !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Feb-17, 2:30 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 118

மேலே