ஐந்து-சி-சிறுகதை

“ஆதரவு ஒனக்கில்லே” திடிரென போர்க்கொடி உயர்த்திய கோகிலாவின் மேல் கோபம் பொங்கியெழுந்த்து. விவேக் ஆகிய நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்..
“ஆதரவு எனக்கில்லையா ? கோபம் ஏன் ? ” கோகிலாவிடம் பவ்யமாகவும், அனுசுரணையாகவும் கேட்டதற்கு “பெரிய ஐந்து-சி-”க்கு ஒண்ணு குறைஞ்சா கூட ஆதரவு வாபஸ்தான்” மிரட்டுகிறாள்.
இந்த அக்கப்போரைப் பார்த்தும், கண்டுகொள்ளாமல் கள்ளமௌனத்தோடும், மர்ம சிரிப்போடும் உலாவரும் ஜெயந்தியைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வருகிறது.
“ என்னதான் பிரச்சினை கோகிலாவுக்கு…இதுநாள் வரை என் பக்கத்துணையாக இருந்து எல்லாவற்றும் நீங்க சொல்றதுதான் சரின்னு ஆமாம்சாமியாக தலையாட்டியும், புதிய நபரை சேர்ப்பதற்கு ஆதரவளித்து வந்த கோகிலா முரண்டு பிடிக்கிறாள் என்றால்…. !
”ஏதோ சதி இருப்பதாய் மனதில் பட்டது. அந்த சதிகாரி ஜெயந்திதான் என்றும் ஊகிக்கவும் முடிந்த்து. இருந்தாலும், ஜெயந்தியை பகைத்து கொள்ள என்னால் முடியவில்லை.
ஜெயந்தியைப் பகைத்து கொண்டால், பின்விளைவுகள் ஆபத்தானது என்று எனக்கு தெரியும். ஜெயந்தியை சரிக்கட்டி வழிக்கு கொண்டு வரவேண்டுமென்றால், கோகிலாவை தன்பக்கம் தக்க வைக்க வேண்டும்.
அதற்குதான் “ வாரம் ஒருமுறை ஐந்து-சி” கட்டாயம் வந்தாக வேண்டுமென்று மிரட்டுகிறாள்.
“கோகிலாவைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து “ஏம்மா, ஒனக்கு என்னவெல்லாம் செய்திருக்கேன், மறந்துட்டியா? நியாமா ? தர்ம்மா ? ” கேட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அந்த இடத்தையே காலி செய்கிறாள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு வேறு வழியில்லாமல் “ “ நீ கேட்ட ஐந்து-சி வாரத்திற்கு வந்து சேரும்” என்று சொல்லி அச்சாரமாக, அப்போதே இரண்டு –சியை கொடுத்ததும் கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சி பெருகியது.
மகிழ்ச்சியில் துள்ளி குதித்து…. தாவி என்னை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு. அந்த மகிழ்ச்சியிலேயே ஜெயந்தியிடம் ஓடிப்போய், “ எனக்கு ஐந்து-சி ஓ.கே ஆயிடுச்சு, தம்பி பாப்பா தாராளமா வரலாம் பச்சைக் கொடி காட்டிவிட்டு ஓடினாள்.
“ கோகிலா என்ற பத்துவயது சிறுமிக்கு “ஐந்துபெரிய பாக்கெட் சாக்லேட்டுதான்” ஐந்து-சி-யாம்.

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (17-Feb-17, 8:30 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 274

மேலே