காதல் பழக வா-9

காதல் பழக வா-9

ஆயிரம் வார்த்தைகள்
நீ பேசி சென்றாலும்
என் விழிவழியே
யுத்தம் செய்வேன் நான்....

மௌனம் கொண்டு
ஆயுதம் செய்து
உன்னை வீழ்த்தி
வெல்வேன் நான்...

காதல் என்று நீ
நினைத்திருந்தால் தவறு
என்று அறிந்து கொள்வாய்
அதற்கு தண்டனையை
நான் பரிசளிப்பேன்
காத்திரு என் கண்ணா!!!!!
வினோவும், ராமநாதனும் அங்கிருந்து கிளம்பிய நொடியில் இருந்து முழுசாய் ஒரு மணி நேரம் கடந்திருக்கும், எல்லாருடைய எதிர்பார்ப்பும் ராதி தைய தக்க என்று கோவத்தில் குதிக்க போகிறாள், கத்தி ஊரையே கூட்டி பஞ்சாயத்து வைக்க போகிறாள் என்று நினைத்துக்கொண்டு எல்லாரும் ராதியின் முகத்தையே பார்த்து கொண்டிருக்க, ராதியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை....அவள் வார்த்தைகளால் பேசவில்லை என்றாலும் அவளின் கண்ணிலிருந்து நிற்காமல் வழியும் நீர் அவளின் வலியை பேசிக்கொண்டிருந்தது....

அவள் பேசியிருந்தால் கூட யாருக்கும் பெரிதாய் பாதித்திருக்காது, அவளின் கோவம் எதிர்பார்த்தது தான், காரணம் கண்ணன் யாரையும் காதலிக்கவில்லை, இப்படி ஒரு பெண்ணே கண்ணன் வாழ்க்கையில் நேற்று வரை இருந்திருக்கமாட்டாள் என்பது எல்லாரும் அறிந்த விஷயம்....ஆனால் ராதியோ கத்தாமல் திட்டாமல் கோவத்தை காட்டாமல் மௌனமாக அழுதது எல்லாருடைய மனதையும் பாதித்து விட்டது....விஷயத்தை கேள்விப்பட்டு விரைந்து வந்த ராம் ராதியின் மௌன நிலையில் தடுமாறி போனான்....கண்ணனோ எதையும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் முக்கியமான போன் வந்திருப்பதாக பேசிக்கொண்டிருந்தான்.....

ஒருவருக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை, ரமாவுக்கோ ராதியின் மனநிலை குழப்பத்தை ஏற்படுத்த, இப்பொழுது எதை செய்தாலும் அது ராதியை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு ராதியை அவள் போக்கிலேயே சரிப்படுத்த முடிவு செய்தார்...
"நீ ரொம்ப சோர்வா தெரியற, முதல்ல இந்த ஜூசை குடிம்மா, எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம்"

வார்த்தைகளை எப்படி உபயோகிப்பது என்று எத்தனையோ வருட அனுபவங்கள் கொண்ட ரமாவின் உள்ளம் இன்று தடுமாறியது....

ஆனால் எந்த மறுப்பும் சொல்லாமல் ரமாவின் கையிலிருந்த ஜூஸை ராதி வாங்கி ரெண்டே நொடிகளில் காலி செய்து காலி கிளாஸை ரமாவின் கையில் கொடுத்துவிட்டு, "நான் ரெஸ்ட் எடுக்கணும்" என்று மிக மெல்லிய குரலில் கூற அதையும் கவனமாக கேட்டு புரிந்துகொண்ட ரமா ராதியை அழைத்து சென்றார்....

ரமாவுக்கு ராதி மருமகளாக வந்ததில் எந்த பிரச்சனையும் இல்லை, பெண் இல்லாத வீட்டில் தன் மருமகள் தான் தன் மகள் என்று எப்பொழுதோ முடிவு செய்து வைத்திருந்தார், தன் மருமகள் ஏழை வீட்டு பெண்ணாய் இருந்தாலும் தன் வீட்டின் இளவரசி தான் என்பதில் தெளிவாய் இருந்த ராமாவிற்கு ஒரே ஒரு கனவு தான், தன் மகன் விரைவில் திருமணம் செய்து கொண்டு மனைவி மக்களோடு வாழ வேண்டும்...அந்த கனவும் இப்பொழுது நிறைவேறிவிட்டது.....ஆனால் அதற்காக சந்தோஷப்பட முடியவில்லையே...
"கண்ணா, என்னப்பா இதெல்லாம், திடிர்னு அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி இப்படி பண்ணிட்டியே"

"நீங்க தாம்மா சீக்கிரம் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னிங்க, இப்போ அத தான நானும் பண்ணிருக்கேன், அப்போ உங்களுக்கு என் கல்யாணத்துல விருப்பம் இல்லையாமா?"

"அதில்ல கண்ணா, நான் சொன்னது வேற, ஆனா இப்போ"
"இப்போ என்னமா ஆச்சு, எப்படி நடந்தாலும் கல்யாணம் கல்யாணம் தானே, நான் தாலி கட்டினது எப்படிம்மா தப்பிக்கும், உங்க கண்ணன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையாம்மா"

அதற்க்கு மேல் ரமாவால் எதுவும் பேசமுடியவில்லை, என்ன நடக்கிறதோ இனி அதை எதிர்கொள்ள வேண்டியது தான் என்ற மனநிலையில் தன்னை மாற்றி கொண்டார்...

ரமாவின் பிறந்த நாள் விழாவிற்க்காக கண்ணன் அழைத்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து சேர கண்ணனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை, எல்லாரும் கூடி நிற்கும் வேளையில் ராதி எதாவது பேசிவிட்டால் என்ன செய்வது....இப்பொழுது தான் கண்ணன் யோசிக்கவே ஆரம்பித்தான்...

எழுதியவர் : இந்திராணி (18-Feb-17, 10:59 am)
பார்வை : 492

மேலே