மனித நம்பிக்கைகள்

கண்களைத் திறந்து பார்க்கப் போராடுகிறார் அந்த முதியவர். அவரைச் சுற்றி உறவினர்களின் கூட்டம். ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை செய்த பிறகு மருத்துவர் நோயாளியின் பெயரைத் தெரிந்து கொண்டு மெதுவாக அந்த முதியவரை அழைக்கிறார். முதியவரின் இமைக்குள் விழிகள் பதறுவது தெரிகிறது. மிகவும் ஆதரவாக முதியவரின் கைகளை இறுக்கமாகப் பற்றி
“ஐயா, நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாமல் தைரியமாக இருங்கள்” . என்று முதியவரின் நம்பிக்கையை வளர்ப்பார்.
“அவருக்கு ஒன்றுமில்லை. சிறிய அடைப்புதான். சரியாகிவிடுவார். தயவு செய்து நோயாளியைச் சுற்றி கூட்டம் போடாதீர்கள்” என்று உறவினர்களின் கூட்டத்தையும் மிகவும் சாமார்த்தியமாகக் கலைப்பார்.
ஒரு வாரம் கழித்து முதியவரும் முழுக்குணம் அடைந்து வீடு திரும்பிய பிறகு, முதியவரின் உயிரைக் காப்பாற்றியது மருந்தும் மாத்திரைகள் மட்டும் இல்லை. அவரின் நம்பிக்கைதான் என்று மற்றோரு நோயாளிக்கு மீண்டும் நம்பிக்கை அளிப்பார் அந்த மருத்துவர்.
இது போன்ற நம்பிக்கைகள்தான் வாழ்க்கையின் ஆதாரம். அதைச் சுற்றித்தான் இந்த மானுடம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தனி மனிதனின் படிப்பு, முன்னேற்றம் என்று அனைத்து நிலைகளிலும் அவரவர் நம்பிக்கைகளே அவர்களுக்குக் கைகொடுக்கிறது. என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் என்னால் நிச்சயம் நன்றாக எழுத முடியும் என்ற அந்தத் துளி நம்பிக்கையால்தான் மாணவனால் மூன்று மணி நேரத்தில் தன் முழுத்திறமையையும் வெளிக்காட்ட முடிகிறது.
ஆதி மனிதன் முதலில் நம்பியது இயற்கையைத்தான். பிறகு இயற்கையின் சீற்றத்தைத் தணிக்க அதையே வழிபடவும் ஆரம்பித்தான். பணிந்து முறையிட்டால், இயற்கையும் சாந்தமாகிவிடும் என்ற நம்பிக்கைதான் அதற்கு முக்கியமான காரணம். பிறகு தோன்ற ஆரம்பித்ததுதான் குழுக்களின் கலாச்சாரம், தனி மனித வழிபாடு, அரசு, அரசியல் மற்றும் ஆட்சி என்ற தொடர் மாற்றங்கள். மக்களின் மேல் வைக்கும் நம்பிக்கை வாக்குச் சீட்டுகளாக மாற ஆட்சியும் மாறுகிறது. இப்படியாக இயற்கையைச் சார்ந்த நம்பிக்கைகளிலிருந்து தொடங்கிய மனித சமூகம், பிற்காலங்களில் தனி மனித ஆளுமை மேலான நம்பிக்கையாக உருமாறியது.
ஒவ்வொரு மதமும் நம்பகமான பிரச்சாரங்களை மக்களிடையே பரப்பும் பணியில் தன் முழுத்திறமையையும் காட்டியது. அந்த முயற்சியே இன்று நாம் காணும் மதங்களுக்குத் தனி அடையாளங்களை அமைத்தும் கொடுத்தது. மதம் சார்ந்த நம்பிக்கைகள் வளர்ந்ததற்கும் , வளர்வதற்குமான காரணம் எந்த நிலையிலும் உண்மையக் கண்டறியாமை, ஆதாரம் எதுவும் இல்லாமல் ஒப்புக்கொள்ளும் மன நிலை, மற்றும் அதிகப்படியாக உணர்வுகளைத் தூண்டும் மறைமுகச் செயல்களால் காரணங்கள் எதையும் தேடிப் பயணிக்காத சோர்வு மயக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவைகள்தான். மத நிறுவனங்கள் இன்றளவும் இதை ஒரு மாபெரும் இயக்கமாகவெ தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெற்றண்ட் ரஸ்ஸல் கூறியதைப் போல ஆதாரம் என்று ஒன்று இருந்திருக்குமே ஆனால், இது போன்ற மதங்கள் இந்த அளவிற்கு வளர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆதாரத்தை காட்டுவதற்குப் பதிலாக மத குருமார்கள் தங்களின் கைகளில் வைத்திருப்பது, மனித உணர்வுகளைத் தூண்டி, அவர்களைத் துளியும் சுயமாக சிந்திக்காமலிருக்கச் செய்யும் ஒரு விதமான யுக்தி. சுருக்கமாகச் சொன்னால் மத நம்பிக்கை என்பது ஏதாவதோரு நிலையில் மனிதர்களை முழுவது ஒப்புக்கொள்ளச் செய்யும் ஒரு வசீகரமான முயற்சி. மதம் சார்ந்த நம்பிக்கையை ஒருவர் தன் மனதில் ஏற்றுக்கொள்ள அனுமதித்த பிறகு, அவரே தன் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் ஒரு கைதேர்ந்த ஒரு முகவராக மாறிவிடுகிறார். முகவரின் குடும்ப அங்கத்தினர்களின் பொருளாதார சார்பு நிலையும் இது போன்ற மதக் கொள்கைகளை கண் மூடித்தனமாக ஒப்புக்கொள்ள வழி வகுக்கிறது. ஒரு நிலையில் மதப் பெருக்கம் பொருள் குவிப்பில் தடையற்ற சுதந்திரத்தை பெற்றுக்கொள்கிறது. பொருள் சார்பு நிலை வந்தவுடனேயே ஆளுமைகளின் பதவிப் பறிப்பு, மாற்று மதத் தேடல் என்று மதங்களின் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
நான் எந்த மதத்தையும் சேராதவன். என் போதனைகள் அனைத்து மதங்களின் உயரிய கருத்துக்களைக் கொண்டே இயங்குகிறது என்று மதத்தை மையப்படுத்தாமல் ஒரு சில குழுக்களின் தலைமை தற்போது இந்தியாவில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம், மதத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி பொருள் குவிக்கும் நிறுவனங்களின் மேலான நம்பிக்கையின்மைதான். இன்னும் வற்றிப்போகாத மதம் சார்ந்த நம்பிக்கைகள் மக்களின் ஆழ் மனதில் இருப்பதால்தான் அதற்காக, அதற்கீடான மாற்றுத்தேடலில் அவர்களுக்குக் கிடைக்கிறார்கள் அறிவு ஜீவிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் இதைப் போன்ற அவதாரப் புருஷர்கள். இத்தகைய குருக்களின் கருணைப்பார்வை வசதியான பிபிஓ ஊழியர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், மற்றும் ஆன்மீகத்தேடலில் இந்தியாவிற்கு வரும் வெளி நாட்டுப் பயணிகளுக்கு மட்டும் தான் கிடைக்கும். இது போன்ற குழுக்களின் தலைவர் தன் மேல் உள்ள நம்பிக்கையை மக்களிடம் வளர்க்க கார்ப்போரேட்டுக்களின் உதவியை நாடுகிறார். இங்கும் மனித நம்பிக்கைகள்தான் காசாக்கப்படுகிறது.
குறைந்தது 10 மணிக்குள்ளாவது தி.நகர் தபால் நிலையத்திற்கு போகத் தீர்மானித்து பேருந்தப் பிடித்து 11 மணி வாக்கில் ஒரு வழியாக வந்து சேர்ந்தேன். வருகை சீட்டிற்கு பதிவு செய்ய 52 ஆவது எண் கிடைத்தது. அறிவிப்புப் பலகையில் எண் 30 அரை மணிநேரமாக போவேனா என்று அடம் பிடித்தது. அங்கும் இங்கும் இருக்கைக்காக நோட்டம் விட்டேன். ஒரு வழியாக காலியான இருக்கையை கண்டுபிடித்து ஓடாத குறையாக அதன் அருகில் நெறுங்க, “சார், அங்கே உக்காராதீங்க. ஓட்டை சேர். பின்னலே விழுந்திடுவீங்க” என்று என்னை எச்சரித்துத் தன் அருகில் இருக்கும் காலி இருக்கையை காட்டினார் எழுபதுவயதில் அந்த முதியவர். தெளிவான கண்கள். கசங்கிய கட்டம் போட்ட அரைக்கை காட்டன் சட்டை. காலரின் நிறம் மிகவும் வெளுத்திருந்தது. மூக்கின் நுனியில் சரிந்து விழும் கண்ணாடியை அடிக்கொருதடவை மேலே தள்ளி விட்டுக்கொண்டு குறைந்தது ஏழு மணியார்டர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். யோசித்துக் கொண்டே முதியவரைப் பார்க்க அவர் தன் ஜோல்னா பையிலிருந்த ஒரு பழைய மாத இதழை என்னிடம் படிக்கக் கொடுத்தார். அரைமனதுடன் பக்கங்களைப் புரட்டினேன். கேட்கலாமா, வேண்டாமா என்ற சிறிய மனப் போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து தயக்கத்துடன் கேட்டேன். “ஐயா, தவறாக நினைக்காதீர்கள். உங்கள் வயதில் உங்களுக்குத்தான் மணியார்டர் வரவேண்டும். ஆனால் நீங்களோ இத்தனை பேருக்கு பணம் அனுப்புகிறீர்களே” என்றேன். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “அனாதைப் பசங்க சார், இந்த ரூபாவைத்தான் எதிர்பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ஒரு ஏழு பேருக்கு மாதா மாதாம் தலா ரூபாய் ஐம்பது வீதம் ஒழுங்கா தவறாம பணம் அனுப்பிடுவேன். என் மகன் கிட்டே இருந்து ரெண்டு மாசமா பணமே வரலை. இந்தப் பசங்க புண்ணியத்திலேயாவது அடுத்த மாசம் வருதான்னு பாக்கணும்” என்றார் அந்த முதியவர்.
அவரின் கண்களில் மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது மானுடத்தை நடத்திச் செல்லும் அதே நம்பிக்கையின் ஒளி.

எழுதியவர் : பிரேம பிரபா (18-Feb-17, 8:49 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
Tanglish : manitha nambikaigal
பார்வை : 393

மேலே