அன்புள்ள பாதுஷாவிற்கு

பணி நிமித்தம் அந்த அலுவலகத்திற்கு போக வேண்டி இருந்தது. நிர்வாகியைப் பார்த்து அளவளாவி இரண்டு மாததிற்கு மேலிருக்கும். தன் இருக்கையில் ஒரு முதிய பாதுஷாவைப் போல், துளியும் இளமையின் கம்பீரம் குறையாமல் அதே மிடுக்குடன் அமர்ந்திருந்தார். இரண்டு கைகளிலும் விரித்து வைத்த செய்தித் தாளின் சிறிய சலசப்பைத் தவிர அறையில் ஏதோ ஓர் ஆழ்மௌனம் பீடித்த உள்ளுணர்வு எனக்கு.
“வணக்கம் சார்” குரல் கேட்டவுடன் என்ன அமரச் சொல்வாரேன்று காத்து நிற்க, முகத்தை மறைத்த செய்தித் தாளை மெல்ல கீழிறக்கி இறுகிய முகத்துடன் “ம்” என்ற ஒற்றை உறுமலுடன் மீண்டும் நாளிதழுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டார். கடந்த சந்திப்பில் அதிரும் எடுத்துக்காட்டுகளுடன் அரசியல், பங்குச் சந்தை, இலக்கியம் என்று பேசியவரா இன்று என்னக் கண்டும் பாராமுகமாக இருக்கிறார்? அவருடைய திட்டமிடாத அலட்சியம் நொடியில் என் சுய கௌரவத்தைக் கீற “வர்றேன்” என்று வலிய எனக்குத் துளியும் பொருத்தமில்லாத ஒரு புன்சிரிப்பை முகத்தில் பதித்து எனக்குறிய பணியிடத்தில் சென்றமர்ந்தேன்.
“அம்மா, கீரை” என்று வாசற்படியில் சொத சொதத்த ஈரக் கூடையை இறக்கி வைத்து நெற்றியில் துளிர்த்த வேர்வையை முந்தனையால் ஒற்றிக்கொண்டாள் கீரைக்காரப் பாட்டி. வாசலில் போட்ட கோலப் புள்ளிகளை மனதிற்குள் கணக்கிட்டவாறே மீண்டும் ஒரு முறை கூவினாள். என் மனைவி வேண்டாமென்று பையனை விட்டு சொல்லச் சொன்னாள். பாண்டியிலிருக்கும் என் மனைவியின் தங்கை இந்த மாதமாவது ஒரு பத்து நாள் கண்டிப்பாக எல்லோரையும் வரச் சொல்லி இருந்தாள். மாதக் கடைசி பற்றாகுறையால் அழைப்பை அடுத்த மாதம் நிறைவேற்றுவதாக நான் வாக்கு அளித்தும் உக்கிரக் கொதி நிலையில் இருந்தாள் என் மனைவி.
“வெந்தயக் கீரை கண்ணு. அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்குமேன்னு தேடிப் பிடிச்சு வாங்கியாந்தேன். விரசா அம்மவைக் கூப்பிடுய்யா, ஆயா பத்து தெருவுக்கு போகனுமில்லே.” என் பையனை அன்பான வார்த்தைகளால் துரிதப்படுத்தினாள் கீரைக் காரப் பாட்டி. அடுக்களை ஜன்னலிலிருந்து முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி “இன்னைக்கு வேண்டாம்மா” என்று வார்த்தைகளைச் சுறுக்கி வெறுப்பை உமிழ்ந்தாள்.
மறுபடியும் அந்தப் பாட்டி கூவி அழைக்க, இரவோடு இரவாக நாட்டை ஆக்கிரமிக்க எத்தனித்த அண்டை நாட்டு அரசனை நேருக்கு நேர் எதிகொள்ளும் குறுநில மன்னனின் கடுங் கோபத்துடன் ”வேண்டாம்னா கேக்க மாட்டீங்களா. ஒன்னு பிடிக்கும்னா வாரம் பூரா வெந்தயக் கீரை மட்டும் திங்கற வக்கத்த குடும்பம்னு எங்களை நினைச்சுட்டீங்களா? கிளம்பற வழியைப் பாருங்க” என்று பொரிந்து தள்ளினாள் என் மனைவி.

மிகவும் அன்யோன்யமாக அன்புடன் குசலம் விசாரித்து ஆற அமர கீரை வாங்கும் மதுரைக்காரம்மா இன்று ஏனோ வெடித்துச் சிதறியதில், கீரைக் காரம்மாவிற்கு மிகவும் வருத்தம். கூடையோடு மனக் கசப்பையும் சுமந்து கொண்டு அடுத்த வீட்டிற்கு நடையைக் கட்டினாள்.
நாலணாவிற்கும் எட்டணாவிற்கும் அடுத்த வீட்டு மாமி பேரம் செய்வதை சிரித்தபடி ரசித்தவாறே எப்படியும் இரண்டு கீரைக் கட்டை மிகவும் சாதுர்யமாக விற்கும் பாட்டி அன்று ஏனோ பொறுமையிழந்தவளாக “ ஏம்மா, ஏழை பாழை வயித்துலே இப்படி அடிக்கிறே. இந்த அஞ்சுக்கும் பத்துக்கும்தானே நான் நாயா தொருவிலே அலையறேன். கொஞ்சம் கூட மனுசத்தனமே இல்லாத பேரமா இல்லே இருக்கு.” என்று உணர்ச்சி வயப்பட்டு பேசி கூடையை தலையில் வைத்து விசுக்கென்று சூறாவளியாக வெளியேறினாள்
தான் ஏதோ கீரைப்பட்டியால் அவமரியாதக்கு உட்படுத்தப்பட்டது போல உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள் அந்த மாமி. அப்போது அலுவலகம் செல்லத் தயாராகியிருந்த மாமா “எங்கேடி என் டிபன் பாக்ஸ்?” என்று வழக்கமாகக் கேட்க “வயசு நாப்பாதுக்கு மேலாச்சு. இந்த பிராமணனுக்கு, அடியாள் வேலை செய்ய ஒரு ஆள் கூடவே வலம் வந்து தொலைக்கணும்” என்று முகத்தை நெட்டியபடி டொங்கென்று மேஜை அதிர டிபன் பாக்ஸை வைத்துக் கடந்து போனாள் மாமி.
மாமாவும் சாப்பாட்டு டப்பாவுடன் மாமியின் வெறுப்பை மனதில் சுமந்து கொண்டு அடையாறுக்கு வண்டியேறினார். இனி மாமி இறக்கி வைத்த மன எரிச்சலை அதிகமாகவோ, கொஞ்சம் ஏற இறங்கவோ , அவரின் கீழ் வேலை பார்ப்பவர்களிடன் மிகவும் தாராளமாக வினியோகித்து விடுவார். வழக்கம் போல பாதிக்கப்பட்ட அவரின் உதவியாளர்களும் அந்த மனக் கழிவை மிகவு அக்கறையாக ஒரு பொக்கிஷம் போல சுமந்து கொண்டு தத்தம் மனைவிமார்களிடன் மறக்காமல் மாலையில் சேர்த்துவிடுவார்கள்.
இந்த ஒரு அவலமான சமூகச் சுழற்சி. அய்யப்பந்தாங்கலில் விதைத்த வெறுப்பு அடையாறு வரை சென்று பிறகு உட்கிளைகளாகப் பிரிந்து நகரின் அனைத்து பகுதிகளுக்குள் இலவசாமாக விநியோகிக்கப்படுகிறது.
பாண்டிச்சேரி பயணத்தை தள்ளிப்போடப்படுவதை நான் கொஞ்சம் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருந்தாள், கொஞ்சம் வித்தியாசமான முறையில் என் மனைவி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிறிது அன்பாக கீரைக்காரப் பாட்டியை கையாண்டிருப்பாள். அந்தக் கீரைக்காரப் பாட்டியும் மாமிக்கு இரண்டு கட்டுக் கீரையையும் விற்றிருப்பாள். மாமவும் நிச்சயம் வீடு திரும்பும்போது மாமிக்கு மிகவும் பிடித்த மெது பக்கோடாவை கிருஷ்ணா விலாசில் வாங்கி வந்து தந்திருப்பார். மாமாவின் கீழ் வேலை பார்ப்பவர்களும் அன்று அலுவலகத்தில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகளைக் கூடுதல் மெருகுடன் தத்தம் மனைவிமார்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பார்கள்.
ஒரு சராசரி வட்டத்திற்குள் வாழும் இது போன்ற மனிதர்களின் மனநிலை சமுதாயம் சார்ந்த புறநிலைக் காரணிகளால் மாறுபடுகின்றதென்பதை மனது ஒருபுறம் ஒப்புக்கொண்டாலும், என் மானசீக பாதுஷாவும் அதற்குப் பலியாகிவிட்டாரே என்ற சோகத்துடன் சென்னை திரும்பினேன்.

எழுதியவர் : பிரேம பிரபா (18-Feb-17, 9:02 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 100

சிறந்த கட்டுரைகள்

மேலே