மௌனம்

மௌனத்தின் ஆழ்மனதின்
அந்தரங்கம் அறியும்பொருட்டு
அரவமற்ற சோலையொன்றில்
நிசப்தமுடன் காத்திருந்த கண்கள்
குளிர்கால இரவின் பனிமெத்தையுள்
அது அழகாய் துயிலக்கண்டது

ஒலியின் மரணத்தில்
உருவமற்றுக் கண்நீர்சிந்திய அது
யாருக்கும் தெரியாமல் தனது
துன்பத்தைத் தனக்குள்ளே
புதைக்கத் தன்னையே
இடுகாடாக்கியிருந்ததை அதன்
ஊமை உணர்வுகளில் மிகத்தெளிவாய்க்
காணக்கூடியதாகவும் இருந்தது.

உயிர்களின் உறக்கத்தில்
வாழுகின்ற மௌனத்த்தை
இரகசியமாய் இரவோடிரவாக
களவெடுத்துப் போன மகிழ்ச்சியில்
வெளிச்சங்களாய் சிரிக்கின்றன
நிலவும் நட்சத்திரங்களும்.

ஆழ்கடலின் உள்ளே மீன்களோடு
பேசுவதை ஒட்டுக்கேட்ட
அலைகள் கரையிடத்தே சொல்லி
மகிழ்வதை உள்ளூர ரசித்தவண்ணம்
உறைந்து கிடக்கின்ற மௌனம்
பச்சோந்தியின் வண்ணங்களில்
அழகை பிரசவம் செய்யவும்
கற்றிருக்கின்றன

தன்னைக்கொண்டு யாரோ
இருளைக் கொன்றுவிட்டதாக
உருகி அழுகின்ற மெழுகுவர்த்தியின்
இதயத்துடிப்பாய் மௌனம்
இருந்ததென்பதனை ஒரு
சிறு எல்லைக்குள் பரவிக்கிடந்த
வெளிச்சத் துகள்கள்
அடையாளப் படுத்தியுமிருந்தன.

பிரசார மழைக்குப்பின்
பதவிப் பாம்புகள் பிடித்துத் தின்ன
அடங்கிப்போகும் தேர்தல்கால
அபேட்சகத் தவளைகள்போல்
உரிமைக்குக் குரல்கொடுக்கும் வேலைக்கு
விடுதலை வழங்கிவிட்டு, நாற்காலியிலும்
அமரத் தெரிந்திருந்த மௌனம்
கேவலத்தின் கிரீடம் அணிந்து
சிரிப்பதற்கும் கற்றிருந்தது .

ஏழைகளின் வாயடைத்து
உருவாக்கப்படுகின்ற
கட்டாய மௌனத்தில்
வெடிப்பதற்கு முற்படுகின்ற
எரிமலைகளை எப்போதுமே
பனிமலையாகிப் போகின்ற
உண்மையை வெளியே சொல்லாமல்
இருக்கவும் செய்கின்றது

உயர்ந்தவன் தோளில்
உல்லாசமாய் கைபோட்டு
தாழ்ந்தவனை மிதித்துப்போகின்ற
சப்தங்களில் மறைந்துபோகின்ற
மௌனம் என்றாவதோர் நாள்
நீதியின் வழியாக தண்டனையும்
வழங்கி வைக்கின்றது என்பதனை
சிறைக்கதவுகள் மூலம்
உணர்த்தியும் காட்டுகின்றது

விலைபேச முடியாத மௌனம்
புரட்சியின் பூக்கள் பூப்பதற்கு
காலச் செடியின் காம்பில்
முகையாகவே எப்போதும்
இருக்கின்றது என்பதை எல்லோருக்கும்
தன்பாசையில் சொல்லியே
வைத்திருக்கிறது. என்றாலும்
நாம்தான் அதை சரிவர
புரிந்து கொள்ளவே இல்லை.


*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Feb-17, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : mounam
பார்வை : 455

மேலே