பாடப் புத்தகங்களில் நவீனக் கவிதைக்கு இடமில்லையா

நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கும் நவீனக் கவிதை இலக்கியம் தனது நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கல்வித் துறையும் பாடத் திட்டமும் நவீனக் கவிதையை இன்னும் ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

புதுக்கவிதை என்று தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ் நவீனக் கவிதையின் விதைகளை பாரதியிடம் காணலாம். எனினும் பாரதியிடம் உந்துதல் பெற்றுக் கவிதை எழுதிய ந. பிச்சமூர்த்தியே ‘தமிழ் நவீனக் கவிதையின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து சி. மணி, க.நா. சுப்பிரமணியம், நகுலன், பிரமிள், சுந்தர ராமசாமி, தி.சோ. வேணுகோபாலன், ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் போன்றோர் நவீனக் கவிதையின் தொடர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார்கள். தொடர்ந்து, விக்கிரமாதித்யன், கல்யாண்ஜி, அபி, ஆத்மாநாம், பிரம்மராஜன், தேவதேவன், தேவதச்சன், ஆனந்த், சுகுமாரன், சமயவேல், ராஜசுந்தரராஜன் முதலானோரும் நவீனக் கவிதையின் பரிணாம வளர்ச்சிக்கும் அதன் பரிமாணங்களுக்கும் கூடுதல் வளம் சேர்த்தார்கள்.

தொண்ணூறுகளில் சுயம்புலிங்கம், மனுஷ்ய புத்திரன், என்.டி. ராஜ்குமார், லஷ்மி மணிவண்ணன், குட்டி ரேவதி, அழகிய பெரியவன், ஹெச்.ஜி. ரசூல், சுகிர்தராணி என்று ஒரு புதிய படையே புறப்பட்டு வந்தது. தலித்தியம், சிறுபான்மைச் சமூகம், பெண்களின் வாழ்நிலை போன்றவற்றை இந்தக் காலகட்டம் கொண்டுவந்தது. அடுத்த காலகட்டத்தில் இன்னும் பெரிய வீச்சு கொண்டு சமூகத்தின் பல அடுக்குகளையும் இழைவுகளையும் வெளிப்படுத்திய கவிஞர்கள் வருகையால் நவீனக் கவிதை மேலும் வளம் பெற்றிருக்கிறது.

புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் போன்றோரின் சிறுகதைகள் பாடங்களில் இடம்பெற்றுள்ளன என்றாலும் கவிதையில் இது நிகழவில்லை. மேல்நிலை வகுப்புகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் ‘மறுமலர்ச்சிப் பாடல்கள்’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட கவிதைகளைப் பார்க்கும் ஒரு தேர்ந்த வாசகருக்கு அதிர்ச்சியே ஏற்படும்.

நவீனக் கவிதை என்றாலே புரியாததுபோல் எழுதப்படுவது என்ற பொய்யான கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஞானக் கூத்தன், ஆத்மாநாம், கல்யாண்ஜி, மனுஷ்ய புத்திரன், முகுந்த் நாகராஜன், இசை முதலான கவிஞர்களின் பல கவிதைகள் மிகவும் எளிமையானவை, சுவாரசியமானவை. வெகுஜனத் தளத்திலும் மிகுந்த புகழ்பெற்றவை. வெகுஜனப் பத்திரிகைகளின் இயல்பான ஒரு பகுதியாக நவீனக் கவிதைகள் ஆகியிருக்கின்றன. திரைப்பட இயக்குநர்கள்கூட நவீன கவிஞர்களின் பங்களிப்பை நாட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், பாடத்திட்டமோ கல்வியாளர்களோ அவர்களைக் கண்டுகொள்வதில்லை.

நவீனக் கவிதை மீதான புறக்கணிப்பை விடுத்துப் பாடத் திட்டத்தில் அதற்கு இடம் கொடுக்க வேண்டும். நல்ல கவிதைகள் நல்ல மாணவர்களை நிச்சயமாக உருவாக்கும்.

எழுதியவர் : (19-Feb-17, 2:11 am)
பார்வை : 77

சிறந்த கட்டுரைகள்

மேலே