திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா -----BRஹரன்---Posted by On May 16, 2010

சில தினங்களுக்கு முன்னால் “திராவிடச் சான்றோர் பேரவை” என்ற அமைப்பிலிருந்து, சனிக்கிழமை மே மாதம் 8-ஆம் தேதியன்று நடக்கவிருந்த, “செம்மொழித் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம்” என்ற நிகழ்ச்சிக்கு வரவேற்று ஒரு அழைப்பிதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அந்நிகழ்ச்சி எனக்கு இரண்டு விதங்களில் சுவாரஸ்யமாகப் பட்டது. ஒன்று, தமிழகத்தின் தி.மு.க அரசு பிரம்மாண்டமாக நடத்தப் போகின்ற “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” விழாவில் அரங்கேற்றுவதற்கான இலக்கிய ஆராய்ச்சிகளில் சமய இலக்கியங்களை ஒதுக்கியது; மற்றொன்று, இந்தக் கருத்தரங்கத்தில் பேசப்போகும் அறிஞர்களின் பட்டியல்.

திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவராக இருக்கின்ற பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள் ஏற்கனவே தமிழக அரசு செய்த மாபெரும் தவறான, சமய இலக்கியங்களை ஒதுக்கியச் செயலைச் சுட்டிக்காட்டி, “தள்ளி வைத்தது நியாயமா?” என்ற தலைப்பில் 28-03-2010 தேதியிட்ட “தினமணி” இதழிலும், “சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா? கழகக் கட்டாயமா?” என்கிற தலைப்பில் மார்ச்சு 17, 24, 2010 தேதியிட்ட ”துக்ளக்” இதழ்களிலும் அறிவுசார்ந்த கட்டுரைகள் திறம்பட எழுதியிருந்தார். அக்கடுரைகளில் அவர் எடுத்தாண்டிருந்த விஷயங்களின் சாரம் இது தான்:

கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலமே செம்மொழித் தமிழின் பொற்காலம். அந்தப் பொற்காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலம்பு, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகிய நூல்களே தமிழ் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகின்றன எனச் சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் “செம்மொழிச் செய்திமடல்” கூறுகிறது. (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அளித்துள்ளது ‘செம்மொழிச் செய்திமடல்’ தான் என்பது குறிப்பிடத் தக்கது)

கி.பி-4 முதல் கி.பி.-7 வரை பிறமொழி பேசும் களப்பிரர் ஆண்ட காலம் ஆதலால் அதை ‘இருண்ட காலம்’ என்று தான் தமிழ் அறிஞர்களும் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் சொல்வது வழக்கம். முக்கியமாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இந்த இருண்ட காலத்தில் இயற்றப்பட்டன என்பதோடு மட்டுமல்லாமல், இயற்றியவர்களின் பெயரையும் தாங்காது, இயற்றப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் கண்ணாடி போல் காட்ட இயலாததாகவும் இருக்கின்றன. மேலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பட்டியலிடப்பட்டுள்ள ‘நாலடியார்’, ஏலாதி, ‘ஆசாரக்கோவை’ போன்ற சில நூல்கள் 7,8,9-ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற நூல்களாகும்.

எனவே, இருண்ட காலத்தைப் பொற்காலம் என்று எங்ஙனம் செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனம் நிறுவியது? வரலாற்றில் சிறந்த ஆய்வறிஞர்கள் வரையறை செய்துள்ள பொற்கால இலக்கியம் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான தகுதிகள் எதுவும் இல்லாத பல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை எவ்வாறு பொற்கால இலக்கியம் என்று இந்நிறுவனம் முடிவு செய்தது? மேற்கூறப்பட்டுள்ள நூல்கள் ஆய்வுக்கு உட்படுகின்றன எனச் சொல்லும் ஆய்வு நிறுவனம், அவற்றை பொற்கால நூல்கள் என்று எவ்வாறு முன்கூட்டியே சொல்லலாம்? அவை தோன்றிய காலம் பொற்காலம் என முடிவு செய்த பின்னர், ஆய்வு தேவையா? 7,8,9-ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற நூல்களை அவை 6—ம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட நூல்கள் என்று முடிவு செய்யப்பட்டது எப்படி? இந்நூல்களைச் செம்மொழித் தமிழ் நூல்கள் என ஏற்றுக் கொண்டுள்ள ஆய்வு மையம், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் கொழுத்த தமிழில் அருளிச்செய்துள்ளவற்றை செம்மொழித் தமிழ் நூல்கள் அல்ல என்று எவ்வாறு ஒதுக்கலாம்?

1902 முதல் 1938 வரை, பரிதிமாற் கலைஞர் முதல் த.வே.உமாமகேசுரம் பிள்ளை வரை, பல அறிஞர் பெருமக்கள் தமிழ் செம்மொழியே என நிறுவியதோடு மட்டுமல்லாமல், தமிழை எந்த அளவிற்கு நேசித்தார்களோ, அந்த அளவிற்குத் தங்கள் சமயத்தையும் நேசித்தார்கள். அத்தகையப் பெரியவர்கள் போற்றிக் கொண்டாடிய சமயத் தமிழை செம்மொழி அல்ல என்றும் அவர்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டாடிய சமய நூல்கள் ஆய்வுக்குக் கொள்ளும் அளவிற்கு அறிவு சார்ந்தவை அல்ல் என்றும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் எப்படித் தீர்மானம் செய்யலாம்?

ஏதோ ஒரு நோக்கத்தில் செம்மொழித் தமிழ்ச் சமய நூல்களை ஆய்வு மையம் ஒதுக்கிவிட்டது. செம்மொழித் தமிழ் ஆய்வு மையத்தின் நிலைப்பாட்டைக் கொண்டுச் சிந்திக்கும்போது, நடை பெறப்போகின்ற செம்மொழித் தமிழ் உலக மாநாட்டில், சமயத் தமிழ் இடம் பெறவில்லை, இடம் பெறாது என உறுதியாகத் தெரிகிறது. இது காலத்தின் கட்டாயமா? அல்லது கழகத்தின் கட்டாயமா?

மேற்கண்ட கேள்விகளை செம்மொழி ஆய்வு மையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் தலைவரான டாக்டர்.வா.செ.குழந்தைசாமி அவர்களை நோக்கியே கேட்டிருந்தார் சாமி தியாகராசன் அவர்கள்.

மேற்கண்ட கட்டுரைகள் தமிழ் மக்களின் கவனத்திற்குப் பெருமளவிற்குச் சென்றுள்ளதில் ஐயமில்லை. எனவே தானோ என்னவோ, அரசு, திரு.வா.செ.குழந்தைசாமி அவர்களை வற்புறுத்தி பேரசிரியர் சாமி தியாகராஜன் அவர்களுக்குப் பதில் கட்டுரை எழுதுமாறு கூறியுள்ளது. அவரும், ஒரு மொழி செம்மொழி எனும் மதிப்பீட்டைப் பெற உலக அளவில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை மனதில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பட்டியலிட்டு, அதன் படி தான் ஐவர் குழு முடிவு செய்தது என்று கூறியுள்ளார். அவருடைய பதில் கட்டுரையில் சாமி தியாகராஜன் கேட்டுள்ள பல கேள்விகளுக்கு நேரான பதில்கள் இல்லையென்பதோடு மட்டுமல்லாமல், ஐவர் குழு செய்துள்ள முடிவுகளுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்கிற தொனியும் இருந்ததை மறுப்பதற்கில்லை.

அவருடைய கட்டுரைக்குப் பதில் கடிதமாக, சாமி தியாகராசன் அவர்கள், “டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தன்னுடைய ‘செம்மொழிகளின் வரிசையில் தமிழ்’ என்கிற புத்தகத்தில், பக்கம்-131-ல், ‘நாம் சங்க இலக்கியங்கள் தொடங்கி, சங்கம் மருவிய கால இலக்கியங்களிலிருந்து ஏறத்தாழ பத்தாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தி, ‘செவ்வியல் தமிழ் இலக்கிய வரிசை’ என்ற தலைப்பில் வெளியிடலாம்’ என்று கூறியுள்ளார். இக்கருத்தை அவர் குழுக்கூட்டங்களில் வலியுறுத்தினால், மறுப்பாரில்லை என்பதுடன், ஐவர் குழுவில் அங்கம் வகிக்கும் வல்லுனர்களுக்கு எந்த விதத்திலும் டாக்டர் குறைவானவர் அல்லர் என்பதும் என் போன்றோர் அறிந்தே உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதி, தன் நிலைப்பாட்டையும் நியாயமான கேள்விகளையும் மீண்டும் தெளிவு பட நிறுவியுள்ளார்.

மேற்கண்ட சுவாரஸ்யமான கட்டுரைப் பறிமாற்றங்களைப் படித்து விட்டதாலும், திராவிடச் சான்றோர் பேரவை தன்னுடைய கருத்தரங்கில் என்ன சொல்கிறது என்று பார்க்க விரும்பியதாலும், சனிக்கிழமை அந்நிகழ்ச்சிக்குப் போனேன். கருத்தரங்கைத் துவக்கிப் பேசிய பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள், தங்கள் அமைப்பிற்கு ‘திராவிடச் சான்றோர் பேரவை’ என்று பெயரிட்டதற்கான விளக்கத்தைக் கூறியபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கால்டுவெல் பாதிரியார் காலத்திலிருந்து இன்று வரை, அவரும் அவரின் திட்டமிட்ட திரிபுக் கருத்துக்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் திராவிட இனவெறிக் கழகங்களும், கட்சிகளும், அமைப்புகளும், தவறாக உபயோகப்படுத்தியதால் “திராவிடம்” என்ற சொல் தன்னுடைய முக்கியத்துவத்தையும் பொருளையும் இழந்து விட்டது என்கிற உண்மையான பின்னணியில் பார்க்கும்போது, சாமி தியாகராசனின் விளக்கம் மேலும் சுவரஸ்யம் பெறுகின்றது. திராவிடம் என்ற சொல்லின் பெருமை மீண்டும் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு சிறப்பான இடம் பெறும் என்கிற நம்பிக்கையும் நமக்கு வருகின்றது.

இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கத்தைப் பற்றி அவர் விளக்கியது அருமையாக இருந்தது. “தமிழில் சமய இலக்கியங்கள் என்று நோக்குங்கால், இஸ்லாமிய, கிறுத்துவ, சமண மற்றும் பௌத்த சமயங்களைப் பற்றிய இலக்கியங்கள் கூடப் பல இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் அச்சமயங்கள் தமிழ் மண்ணில் தோன்றியவையல்ல என்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கு உரியவையல்ல என்பதும் உண்மை. மேலும் தமிழ் நாட்டில் தோன்றி, தமிழ் மண்ணின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் சார்ந்து பூர்வீகச் சமயங்களாக இருப்பவை சைவமும் வைணவமும் தான். எனவே, செம்மொழிச் சமய இலக்கியங்கள் என்று சொன்னால் அவை தேவாரம், திருவாசகம், திருமுறைகள், திவ்யப்பிரபந்தங்கள் மற்றும் பல பக்தி இலக்கியங்கள் ஆகியனவற்றையே குறிக்கும். இப்பேர்பட்டச் சமய இலக்கியங்களை, செம்மொழித் தமிழ் உலக மாநாட்டில், தமிழக அரசு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்வதே இக்கருத்தரங்கின் நோக்கம்” என்று தெளிவு படக்கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், “6-ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட இலக்கியங்கள் தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்கிற ஆய்வு மையத்தின் பரிந்துரையை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டாலும், திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் பிரபந்தங்கள், முதல் மூன்று ஆழ்வார்களின் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) பாசுரங்கள் ஆகியவை ஆறாம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்றவை என்பதால் அவைகளையும் அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் அரசு செய்யாதது தவறு தான்” என்று அழகாகச் சுட்டிக் காட்டினார்.

பிறகு சிறப்புப்பேச்சாளர்கள் அனைவரின் கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாகப் பதிப்பித்து அதை விழா மலராக வெளியிட்டார்கள். தமிழகத் துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதாசிவானந்தா அவர்கள் வெளியிட, திராவிடச் சான்றோர் பேரவை நிறுவனர் திரு.அ.நடேசன் அவர்களும், கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் அமைப்பின் தலைவர் திரு.ந.பன்னீர்செல்வம் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். மலரைப் பற்றி, திராவிடச் சான்றோர் பேரவையின் உயர்நிலைக்குழு உறுப்பினர் திரு.இரா.சுப்பராயலு அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.

பின்னர், சுவாமி சதாசிவானந்தா அவர்கள், ‘திருவாசகம்’ பற்றியும், டாக்டர்.வி.கே.எஸ்.சிவசக்திபாலன் அவர்கள், ‘திருமந்திரம்’ பற்றியும் தங்களுடைய ஆய்வின் சிறப்பம்சங்களைப் பற்றியும் பேசினார்கள். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சந்தக்கவி திரு.இராமசாமி அவர்கள், திவ்யப்பிரபந்தங்களில் உள்ள சந்தக்கவிகளை அருமையாகப் பாடி அவற்றிற்கு விளக்கங்களும் கூறி அனைவரின் மனத்தையும் கொள்ளை கொண்டார். வேதங்களிலும் சந்தங்கள் இருக்கின்றன என்பதை விளக்கி, வேத ஸ்லோகங்களைக் கூட சந்தங்களின் சுவையுடன் ஓதமுடியும் என்பதை அழகாகச் செய்து காண்பித்தார்.

நமக்கு மிகவும் அறிமுகமான ஆராய்ச்சியாளர் முனைவர் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள், ‘மெய்க்கீர்த்தி’ என்ற தலைப்பில் ஒரு அற்புதமான சொற்பொழிவு ஆற்றினார். ராஜராஜ சோழன் தன் கல்வெட்டுக்களுக்கு மெய்க்கீர்த்தி என்ற தலைப்பிட்டு தன் ஆட்சி காலத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் காலத்தால் அழியாவண்ணம் நமக்கு விட்டுச் சென்றதை விளக்கிப் பேசிய அவர், “சேர சோழ பாண்டிய மன்னர்களுக்குள் எவ்வளவோ விஷயங்களில் பகைமையும் ஒற்றுமையின்மையும் இருந்தாலும், சிவ வழிபாடுகளில் சிறந்து விளங்கி சைவ சமயத்தைப் பேணுதலில் ஒன்றாக இருந்தார்கள்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “ஒருவருக்கொருவர் படையெடுத்துச் சென்று போர் புரியும்போது கூட சிவன் காவில்களுக்குச் சேதம் ஏற்படுத்தாமலும், கோவில் கல்வெட்டுக்களுக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படுத்தாமலும் நடந்துகொண்டனர்” என்ற முக்கியமான விஷயத்தையும் நமக்குத் தெரிவித்தார்.

பிறகு திராவிடச் சான்றோர் பேரவையினரால் ‘பிதாமகர்’ என்று போற்றப்படும் முதுமுனைவர் சேக்கிழார் அடிப்பொடி திரு.தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் பெரியபுராணம் என்னும் கடலில் நீந்தி விளையாடி அழகிய நல்முத்துக்களை எடுத்து வந்து நமக்கு அளித்தார். சைவ சித்தாந்தத்தில் அவருடைய புலமையை நாடே அறியும். “ஸம்ஸ்க்ருதம் தேவ பாஷை; தமிழ் மஹாதேவ பாஷை” என்று தமிழ் மொழிக்குச் சிறப்புப் பெருமை சேர்த்த அறிஞர் அல்லவா திரு.இராமச்சந்திரன்! இராமச்சந்திரன் சிவன் மேல் பேரன்பு கொள்வது தான் இராமாயண காலத்திலேயே ஆரம்பித்துவிட்டதே! இவருடைய நிதானமானப் பேச்சில் தான் எத்தனை விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது!

தமிழகத்தில் அனைவருக்கும் அறிமுகமான, பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என மூன்று முகங்கள் கொண்ட திரு.பழ கருப்பையா அவர்கள் நம் இதிகாசங்களான இராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் பெருமைகளை அழகாக எடுத்துக் கூறினார். ஆங்காங்கே திருக்குறளையும் எடுத்துக் கையாண்ட அவர், பூஜைக்குறிய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் மேடையில் இருந்ததாலோ என்னவோ சற்றே பாதை மாறிப் பயணம் செய்து நம்மைக் குழப்பினார். கழகப் பேச்சாளர்களுக்கே உரிய, துளிக்கூட ஆதாரமே இல்லாத, ஆரிய-திராவிடக் கட்டுக்கதைப் பற்று அவரிடமும் குடிகொண்டுள்ளது. ஆயினும் துக்ளக் பத்திரிகையில் எழுதியிருந்ததைப்போல் எங்கே ஜெயலலிதாவையும் திருஞான சம்பந்தரையும் ஒப்பிட்டுப் பேசிவிடுவாரோ என்று பயந்தேன். நல்ல வேளை அவ்வாறு எதுவும் செய்யாமல் தன் உரையை சீக்கிரமாகவே குடித்துக்கொண்டார்.

கடைசியாக அர்ஷ வித்யா பீட நிறுவனர் பூஜைக்குறிய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், “சைவ வைணவ இலக்கியங்கள், தங்களுடைய பக்தி, ஞானம் மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள் மூலம், தமிழ் மொழியைச் செம்மைப்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்க்கை முறையையும் செம்மைப் படுத்தியுள்ளன. இது யாராலும் மறுக்கமுடியாத பேருண்மையாகும். திவ்யப் பிரபந்தங்கள் அருளிய ஆழ்வார்களும், திருமுறைகள் அருளிச் சென்ற நாயன்மார்களும் மற்றும் ஏனைய பக்தி இலக்கியங்கள் அளித்த சமய குருமார்களும் நமக்கு விட்டுச்சென்ற பாடல்களின் மூலம் உலகமனைத்திற்கும் நம் நாட்டின் பெருமையையும், கலாசாரத்தின் சிறப்பையும் நம்மால் எடுத்துச் செல்ல முடிகிறது என்றால் அது மிகையாகாது” என்று கூறினார்.

திராவிடச் சான்றோர் பேரவையை ஆசீர்வதித்துப் பேசிய ஸ்வாமிஜி, “இதைப் போன்ற கருத்தரங்குகள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்த வேண்டும். பேரவை என்று பெயர் பெற்றுள்ள இந்த அமைப்பு நிஜமாகவே மாபெரும் பேரவையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. உங்கள் அனைவருக்கும் எனது ஆசிகள்” என்று தன் சிற்றுரையை முடித்தார்.

ஸ்வாமிஜி அவர்கள் பேசுவதற்கு முன்னால் சென்னை ராயபுரம் பகுதியில் மதமாற்றங்களைத் தடுக்கும் விதமாக சிறந்த முறையில் பணி புரிந்து வரும் பதினைந்து பேர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கி ஆசீர்வதித்தார்கள். அவர்களில் சிலர் அன்னிய மதத்திலிருந்து தாய் மதம் திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பின்னர் திராவிடச் சான்றோர் பேரவை பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியது:

1. கோவையில் நடைபெற இருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மநாட்டை திராவிடச் சான்றோர் பேரவை (சென்னை) வரவேற்கிறது.
2. சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தனது ஆய்வுப் பட்டியலில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற திருமூலர் திருமந்திரம், காரைக்கால் அம்மையார் பிரபந்தங்கள், முதல் மூன்று ஆழ்வார்களின் பாசுரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று திராவிடச் சான்றோர் பேரவை கேட்ட்க்கொள்கிறது.
3. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமாக, பாரதிதாசன் பல்கலைக்கழகம் “அருள்சுனை” என்ற ஒன்றைப் பாடத்திட்டமாக்கி பட்டையம் வழங்க இருப்பதைப் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும் எனத் திராவிடச் சான்றோர் பேரவைக் கேட்டுக் கொள்கிறது.

என்னைப் பொறுத்தவரை அன்று மிகவும் பயனுள்ள ஒரு நாளாக இனிதே கழிந்தது. என்னுடைய ஒரே அவா, திராவிட அரசு இந்தத் திராவிடச் சான்றோர்களின் வேண்டுகோளை செவிமடுக்கவேண்டும் என்பது தான். செய்யுமா? செய்தால் தமிழ் கூறும் நல்லுலகு பயன்பெறும். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எழுதியவர் : (20-Feb-17, 4:45 am)
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே