ஜல்லிக்கட்டுக் காளைக்கு வீரஉரை

ஜல்லிக்கட்டுக் காளைக்கு வீரஉரை:
=================================


அடங்காத காளையேநீ!
***அடங்காதே யாருக்கும்!
நெற்றிப் பொட்டில் திலகமிட்டு வீரத்துடன்…களத்தில்
***வெற்றி முத்தமிட்டபின் உனைவீழ்த்த யாருமில்லை!


வீரமூட்டி வளர்த்துன்னை மைதானத்தில் விடுகிறேன்..
***வீரர்களை முட்டி நிதானமாயப் பரிசுவென்று வா!
கட்டவிழ்த்து விட்டவுடன்..கட்டோடெதிர்..
***கண்டவரைக் காயமின்றிச் சாய்த்துவிடு!


அகிம்சையால் நாம்பெற்ற சுதந்திரம்போல்..உனையடக்க..
***ஆயுதமின்றி எதிர்கொண்டுவரும் வீரர்களைவென்றுவா!
உன்திமில்பிடித்து திமிர் அடக்கநினைத்தால்..
***தன்தமிழ் வீரம்பெரிதன்று தக்கபடி எடுத்துச்சொல்லு!


மல்லுக் கட்டும் வீரர்கள் மத்தியில்..
***ஜல்லிக்கட்டொன்றுதான் வீரமெனப் புரியவை!
ஈராண்டாய்க் கட்டுண்டிருந்த காளையே..
***இன்றுன் வீரத்தை இருநொடியில் காட்டு!


களைப்பறியா உன் கொம்பைப் பிடித்தால்..
***அளப்பரிய யுன்தெம்பை எடுத்துக்காட்டு!
வால் பிடிக்கும் வாழ்க்கை வேண்டாவென..
***உன் வாலைப் பிடிப்பவனை எட்டிஉதை!


பார்வைபடாமல் பக்கத்தில்வரும் வீரர்களையுன்..
***வஞ்சகம்வேண்டா வென வயிற்றில் முட்டு!
சீராட்டிப் பாராட்டி வளர்த்தயுன் உடம்பை தொட்டால்..
***சீறியவனை துவம்ஸம் செய்து சிலிர்த்துநில்!


விளையாடிக் களைக்கும்போதுநீ..எனைப்பார்!
***காளையுனை வீரத்தோடு வளர்த்த நானிருக்கிறேன்!
நூறுமீட்டர் ஓடவேண்டாம் உலகசாதனைசெய்ய..
***ஒருமீட்டர் ஓடிப்பாருங்கள் காளையோடு அதுவேசாதனை!


ஈதொரு வீர விளையாட்டென்று சொல்லிங்கே!
***ஓர்கோழைக்கு துளிஇடமில்லை என்றுசொல்!
அயலார் வியந்துகளிக்கு மிவ்விளையாட்டில்..
***அயலினம் நுழைய அனுமதியோம் மென்றுரை!


பாட்டில் குற்றமிருக்கலாமானால்..உன்
***விளையாட்டில் குற்றமென்று..
கூறும் கயவர்களை யினியுன்
***கூரான கொம்பால் குத்திக் கிழித்துவிடு!


சொப்பனமே கண்டிடுவார் உனைவெல்ல..
***தப்பனவே உணர்ந்திடுவார் தோல்விகண்டபின்னே!
வீழ்ச்சியுறா வெற்றிபெற…காளையடக்கும் வீர்ர்களே..
***சூழ்ச்சியின்றி விளையாட சூதறியாது வரவேண்டும்!


தோற்றபிறகு எங்களைக் கொல்வதென்பது…
***அயலார் வகுத்த கோழைத்தனமெனில்…
தோற்றாலுமினி உங்களைக் கொல்லாமலிருப்பது..
***காளையெங்கள் வீரத்தனமென்று பறைசாற்று!

கவிதைப் போட்டிக்காக அனுப்பப்பட்டது..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (20-Feb-17, 12:44 pm)
பார்வை : 57

மேலே