எழிலின் திருமணம் - சிறுகதை

எழிலரசியின் திருமணம்
(சிறுகதை)

எங்கும் ஒரே பரபரப்பு. வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வருவோரும் போவோரும் ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமூக்காடிக்கொண்டிருந்தனர். மழலைப்பட்டாளங்களின் கும்மாளத்திற்கோ அளவே இல்லை. இதுதான் சாக்கு என்று தெருவெங்கும் ராட்டினதூரி, குதிரை வண்டி விளையாட்டு, போன்ற விளையாட்டு வண்டிகள் வேறு தெருவை அடைத்துக் கொண்டிருந்தது. அது மட்டுமா? மெகந்திபோடுதல், வளையல் கடைகள், பலூன் கடைகள் போன்ற சிறு சிறு கடைகள் கூட அங்காங்கே ஆக்கிரமித்துக் கொண்டன. எங்கிருந்து தான் ஈசல் புத்துக்களைப் போல் இவர்களெல்லாம் வந்து குவிகிறார்களோ என்று சிலர் அங்கலாக்கத்தான் செய்தார்கள்.

இத்தனை அமர்க்களத்தையும் பார்த்து மௌனம் சாதித்த வண்ணம் கவலையோடு ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான் எழிலின் தம்பி மதிவாணனன். தம்பி வருத்தப்படாதேடா. நானே அமைதியாக இருக்கும் பொழுது நீயேன் கவலைப்படுகிறாய்? விதிப்படிதான் எல்லாம் நடக்கும். வாடா! என்று தம்பியை சாமதனப் படுத்தினாள் எழில். அக்கா! நீ பேசாமல் இரு. நான் மீண்டும் ஒருமுறை அப்பாவிடம் பேசுகிறேன் என்று உள்ளே சென்றான் மதி. உள்ளே சென்ற அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவன் தன் தந்தையிடம் எதைப் பேச எண்ணினானோ அதை அவன் தாய் உமா பேசிப் பேசி மயக்கமே அடந்துவிட்டார். அருகே தந்தை ரகுபதி அவள் மேல் தண்ணீர் தெளித்து எழுப்பி உமா! இங்கே பார்! தயவு செய்து நான் சொல்வதைக் கேள். வருந்தி வருந்தி பார்த்தாலும் இது போன்ற செல்வச் செழிப்புடன் கூடிய ஒரு வரன் நம் மகளுக்குக் கிடைக்குமா? நீயே யோசித்துப் பார். என்றார். அதுவும் நாளை காலையில் முகூர்த்தம் வைத்திருக்கும் இவ்வேளையில் நீ இவ்வாறெல்லாம் முரண்டு பிடிக்காதே உமா என்று மேலும் கூறினார்.

என்னங்க! நான் சொல்வதை மீண்டும் ஒருமுறை நன்கு யோசித்துப் பாருங்க. உங்களுக்கே உண்மை புரியும். நாம் ஏழையாக இருக்கலாம். வசதி என்பது நம் வாழ்க்கையில் எட்டாக் கனியாகக் கூட இருக்கலாம். அதுக்காக பேரெழிலுடன் இருக்கும், அதுவும் படித்துக் கொண்டிருக்கும் நம் மகளுக்கு இப்பொழுது திருமணத்திற்கு என்ன அவசரம்? அதோடு மாப்பிள்ளை மொடாக் குடிகாரன் என்று வேறு ஊரே பேசுகிறது. நம்மால் தான் நம் குழந்தைகளுக்கு எதுவும் பெரிதாக சிறப்பாக செய்ய முடியவில்லை. உடல் நலம் குன்றிய எனக்கு வைத்தியம் பார்க்கவே உங்கள் வருமானம் போதுமானதாக உள்ளது. ஏதோ நம் குழந்தைகள் பள்ளியில் சக்கைப்போடு போடுவதால் ஸ்காலர் ஷிப்பில் அவர்களின் ஆசிரியர்களே தெய்வம் போல் நம் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார்கள். இதற்குள் இந்த தடபுடல் வேறு தேவை தானா? யோசித்து ஒரு நல்ல முடிவைக் கூறுங்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே நிச்சயித்த மாப்பிள்ளை பூபதியும் அங்கு வந்துவிட்டான். மாமா நான் குடிகாரன் தான். எப்பொழுது எழிலைக் கண்டேனோ அப்பொழுதே இனி குடிக்கவே கூடாது என்று உறுதியாக உள்ளேன் மாமா. அத்தை நீங்கள் கூட என்னை நம்பமறுக்கிறீர்களே! பாருங்கள்! நாளைக்காலையில் எழிலைத்திருமணம் செய்து கொண்ட பின் ஊரே பாரட்டும் படி நாங்கள் வாழத்தான் போகிறோம். என்று கூறி விடைபெற்றான் பூபதி. பூபதி செல்வச் சீமான்களாகிய அவன் பெற்றோர்களுக்கு ஒரே வாரிசு.

அவர்களுக்கும் தங்கள் மகனின் நடவடிக்கை சிறிதும் பிடிக்காத போதும். ஒரே மகனாயிற்றே. அதுவும் நண்பர்களின் தீய சேர்க்கையால் இக்குடிப்பழக்கத்திற்கு அடிமையகிய அவனை எண்ணி அவர்கள் கலங்காத நாளே இல்லை. இதற்கிடையில் தான் எழிலின் பெற்றோர்களை அவர்கள் சந்திக்க நேரிட்டது. திருமணம் ஆகிவிட்டால் திருந்திவிடுவான் என்று ஜோசியன் கூறியதைக் கேட்டதும் அதனை நம்பி அப்பாவிப் பெண்ணான எழிலின் வாழ்க்கையை அவள் தந்தையின் ஒப்புதலோடு பணையம் வைக்கத்துணிந்துவிட்டனர். அதன் பிறகுதான் இந்த ஏற்பாடெல்லாம்.

விடிந்தும் விட்டது. திருமண மண்டபம் ஒரே கலகலப்பாக இருந்தது. மேள வாத்தியங்களும் முழங்கத் தொடங்கியது. மணப்பெண் எழில் விரக்தியுடன் அலங்காரக் கோலத்தில் காணப்பட்டாள். தம்பி மதி வேறு ஒருபுறம் அழுதவண்ணம் இருந்தான். இதெல்லாம் தான் வெளியில் யாருக்கும் தெரியாதே!

ம். ம். மாப்பிள்ளையைக் கூப்பிடுங்கோ! முகூர்த்தத்துக்கு நாழியாறதோல்யோ? இது ஐயரின் ஒலிப்பு. ஆமாம் பூபதி எங்கே? அனைவரும் தேடிய வேளையில் ஒருவன் ஓடி வந்து, அம்மா! அம்மா! பூபதி நம்மை எல்லாம் ஏமாத்திட்டாம்மா!. என்னடா சொல்றே! அதிர்ச்சியுடன் கேட்டாள் பூபதியின் அன்னை பார்வதி. அம்மா இன்று காலை வழக்கத்திற்கு அதிகமாக நாங்களெல்லாம் எவ்வளவோ தடுத்தும் கேட்க்காமல் குடித்துக் கும்மாளம் போட்டு வண்டியை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய்..... ஐயோ என்னடா புதிர் போடற? என் இதயமே வெடிச்சிடும் போல் இருக்கேடா? எங்கடா அவன்? அம்மா பிளீஸ்! தைரியமா இருங்கம்மா. கலங்காதேங்கம்மா. சொல்ல சொல்ல என்னங்க.............. மயங்கினாள் பார்வதி. வாசலில் ஆம்புலன்சில் பூபதியின் சடலமும் வந்தது.

ச்சே. என்ன பெண் இவள். தொடகாலி திருமணத்துக்கு முன்பே புருஷனைத் தின்னுட்டாளே. ஹும். இதெல்லாம் ஒரு குடும்பம். இவளுகெல்லாம் ஒரு கல்யாணம். ச்சே. வாங்க எலாரும் போலாம் என்று வந்தவர்கள் யாவரும் எழிலைக் காரி உமிழ்ந்து விட்டுச் சென்றுவிட்டனர்.

நாட்கள் பல கடந்தன. எழிலும் கவலையை சிறிது சிறிதாக மறந்துவிட்டு படிப்பைத் முடித்துவிட்டுப் பணிக்கும் போகத்துவங்கிவிட்டாள். பார்க்கும் ஆடவர்கள் அனைவரும் வயது வேறுபாடு கூட இல்லாமல், எழில்! தங்கம் இங்க பாருடா! சொன்னாக் கேளுடா செல்லம். எங்கள்ல யாரைப் பிடிச்சிருக்கோ அவர்களை நீயே தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள். யாராயினும் ஓ.கே. என்று சர்க்கரையக் கண்ட எறும்புகளைப்போல் அவள் பின் ஜொல்லு விட்டுக் கொண்டு நாய்களைப் போல் அலையத்துவங்கினார்கள்.

இதையெல்லாம் கேட்கும் பொழுதும். பார்க்கும் பொழுதும் உமாவிற்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. உமாவுக்கு மட்டும் தானா? அனைவருக்கும் தான். காலம் கடந்தது. எழிலுக்கு வயதும் ஏறிக்கொண்டே சென்றது. மதியும் வளர்ந்து பெரியவனாகி தந்தையின் பாரத்தைக் குறைக்கப் பணிக்கும் செல்லத் துவங்கிவிட்டான்.

அன்றுதான் அவன் முதலாளி வசந்திடம் தங்கள் குடும்பத்தைப் பற்றி ஓரளவு சுருக்காமாகக் கூறும் சந்தர்ப்பமும் கிடைத்தது. வசந்த் அவர்களின் குடும்பக்கதையைக் கேட்டு மெழுகென உருகினான். அன்று மாலையே தன் பெற்றோர் வனிதா, குமரேசனுடன் எழிலின் இல்லத்திற்குச் சென்று முறைப்படிப் பெண்கேட்டான். எழில் மீது ஏற்பட்ட அனுதாபத்தால் மட்டுமல்ல, அவர்கள் ஏற்கனவே நடந்ததையெல்லாம் நன்கு அறிந்திருந்தபடியால் எழிலை மனமுவந்து ஏற்கவும் சம்மதம் அளித்தனர்.

உமாவிற்கு இதெல்லாம் கனவா? அன்றி நனவா? என்ற பிரமிப்பு ஏற்பட்டது. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதியுள்ளபடி. வசந்தின் பேரெழிலும் தனக்கு ஒப்பாக இருந்ததை எண்ணி மனதிற்குள் பெருமையடந்தபடி மணவறையை நோக்கி மெல்ல அடியெத்துவைத்தாள் குனிந்ததலை நிமிராமல். தன் அக்காவின் வாழ்விலும் வசந்தம் வீசியதை எண்ணிய மதிவாணன் மனதிற்குள்ளாக பெருமையுடன் பீடுநடைப் போட்டான். மதிமட்டும் தானா? நாமும் தானே!

எழுதியவர் : திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி (20-Feb-17, 8:12 pm)
பார்வை : 590

மேலே