ஏறு தழுவுதல்

காளை தழுவுதல் பெருமையாம்
***********************************
ஜல்லிக் கட்டு, தமிழா ? –அதை
குப்பையில் கொட்டு தமிழா !
ஏறு தழுவுதல் சொல்லு –உன்
எண்ணத்தில் அதையே கொள்ளு ....

காளை என்றும் தோழன்-அதைக்
கண்ணெனக் காப்பவன் தமிழன் !
காளையைத் தொடுவான் தமிழன்-பிறர்
காலைத் தொடுபவன் தமிழனா ?

ஏறு தழுவிடும் விளையாட்டு –அதில்
எழுந்திடும் வீரம் நீ காட்டு !
ஏரு தன்னில் அதைப் பூட்டு –வரும்
விளைச்சல் கொண்டு களிப்பூட்டு !

காளை வீட்டின் பிள்ளை –அது
கனவிலும் தராது தொல்லை.
ஏழை வாழ்வில் உழைப்பாளி- அதில்
என்றும் மகிழ்வான் பிழைப்பாளி !

யாரால் முளைத்தது பீட்டா –அதில்
அரசுகள் எல்லாம் கூட்டா ?
யாவரும் காட்டுவீர் பேட்டா –அது
பதுங்கணும் அதனைக் கேட்டா....

பீட்டா என்றெரு பரதேசி –அவன்
பணிகள் எதுவென நீயோசி !
கூட்டாய் தமிழா விழித்திடு –அந்த
புரட்டுக் கும்பலை ஒழித்திடு.

காளை தழுவதல் கொடுமையாம்-என்று
பழித்துச் சொன்னவன் எருமையாம்
காளை தழுவுதல் அருமையாம் –என்று
எடுத்துச் சொல்லுதல் பெருமையாம்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (20-Feb-17, 8:12 pm)
பார்வை : 69

மேலே