நெஞ்சின் கல்வெட்டுக்கள்

நெஞ்சின் கல்வெட்டுக்கள்!

ஆங்கிலப்பள்ளிகள்
ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருந்த வேளையில்
ஆடோக்கள் நுழையாத காலத்தில்
குதிரை வண்டியில் சக மாணவ-மாணவிகளுடன்
பள்ளி சென்று வந்த காட்சி!

நாப்பது காசில் தரை டிக்கெட்டு
பத்து காசில் இரண்டு முறுக்கு
பழைய படம் பாசமலருக்கு
பாட்டியோடு சேர்ந்து அழுது விட்ட கண்ணீர்!

தாத்தா-பாட்டி ஊரில், விடுமுறையில்,
வாயில் திண்ணையில்,
தாத்தாவுடன் இரவில் படுத்துறங்கியது,
அக்கா கண்களை பொத்த,
தாழ்வாரத்து தூண்களின் பின்னால்
ஒழிந்திருக்கும் அண்ணா, தம்பி, தங்கைகளை
கண்டுபிடித்து கண்ணாம்பூச்சி விளையாடியது !

பொழுது சாயந்து இரவு வரும் வேளையில்
வாயில் முற்றத்தில், சாணத்தால் கோவில் கட்டி
நடுவில் சாணப் பிள்ளையார் வைத்து,
மாலையில் சேகரித்த நிலாப் பூக்களை சாற்றி
வெற்றிலை பாக்கு பழத்துடன் தேங்காய் உடைத்து
சாமிகும்பிட்டபின், பாட்டி கும்மிபாட்டு பாட,
அக்கா, அண்ணன், நான், தம்பி, தங்கைகள் அனைவரும்
சாணத்து பிள்ளையார் கோவிலைச் சுற்றி
கும்மி அடித்துவிட்டு, நிலாச்சோறு சாப்பிட்டது!

நாற்பது வருடங்களுக்கு முன்
நடந்த நிகழ்வுகள் அனைத்தும்
நினைவுகளாய் நெஞ்சில்,
நெஞ்சின் கல்வட்டுகள்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (20-Feb-17, 10:34 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 83

மேலே