காதல் பழக வா 11

காதல் பழக வா-11

சிவந்து போன
என் நெஞ்சம்
உன் காதலை மட்டுமல்ல
உன் கண்களை
சந்திக்க கூட விரும்பவில்லை....
இருந்தும் இந்த
மணமேடையில் உன்னோடு
நாடகம் அரங்கேற்றவே
இணைத்திருக்கிறேன்....
புரியாமல் மகிழ்ச்சி கொள்ளாதே!!!



நிமிடங்கள் கடக்க கடக்க திகைப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்த ஒட்டு மொத்த குடும்பத்தின் ஒரே கேள்வி "இந்த பொண்ணு சொல்றது உண்மையா?"

இதற்க்கு மேல் எதையும் மறைக்க முடியாது என்ற மனநிலையில் ரமா உண்மையை கூறிவிட முயலும்போது கண்ணனோ தான் ஆரம்பித்த நாடகத்தை மேலும் தொடர முடிவெடுத்தான்...

"ஆமா பெரியப்பா, அவ சொல்றது உண்மை தான், நாங்க ரெண்டு பெரும் உயிருக்குயிரா விரும்பினோம், ஆனா அவளோட வீட்ல அவளுக்கு விருப்பமில்லாம கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி செஞ்சாங்க, அந்த சமயத்துல எனக்கு வேற வழி தெரியாம தாலி கட்ட வேண்டியதா போச்சு.... எங்க காதலை பத்தி சமயம் பார்த்து உங்ககிட்ட சொல்லலாம்னு நினச்சேன், ஆனா எல்லாம் என் கை மீறி போய்டுச்சு, நீங்க யாருமே இல்லாம இப்படி தனியா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறது தப்புனு தெரியுது, இந்த விஷயத்துல என் மேல கோவப்படாதிங்க, என் பக்க தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் . உங்களுக்கு என் நிலைமை புரியும்னு நம்பறேன் பெரியப்பா"
யார் மன்னிப்பு கேட்டிருப்பது கண்ணனா???

சில வருடங்களாக எல்லா இடங்களிலும் தன் பிடிவாதத்தையோ, தன் தரத்தையோ சிறிதும் நெகிழ்த்தி கொள்ளாத கம்பீரமான ஒருவன் இத்தனை பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்கிறான், ஒவ்வொரு விஷயத்திலும் ஆயிரம் முறை யோசித்து, விளைவுகளை ஆராய்ந்து, தீர்க்கமான முடிவெடுத்து, எடுத்த முடிவில் உடும்பை போல் ஒரேபிடியாக நின்று காரியம் சாதிக்கும் கண்ணன் தான் மன்னிப்பு கேட்டிருக்கிறான்....எந்த விஷயத்திலும் எதற்காகவும் எந்த காரியத்திற்க்காகவும் கண்ணனிடம் இருந்து இதுவரை விளக்கம் வந்ததில்லை, அவனிடம் யாரும் விளக்கமும் கேட்டு நிற்க முடியாது, அப்படிப்பட்ட கண்ணன் இந்த கல்யாண விஷயத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறான்....மொத்த குடும்பமும் கொஞ்சம் அதிர்ந்து தான் விட்டது...

எல்லாரும் சில நிமிடங்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைக்க, சில நிமிட மௌன குழப்பங்களுக்கு பின் அந்த குடும்பத்தின் மூத்தவரான பெரியப்பா ஒரு முடிவுக்கு வந்தார்...

"உன் மேல கோவம்லாம் இல்லப்பா, உன் கல்யாணத்த எப்டிலாம் நடத்தணும்னு நினைச்சோம், ஆனா யாருக்கும் தெரியாம இப்படி எங்கயோ நடந்துருச்சே, அதனால வருத்தம் தான், இருந்தாலும் உன் அம்மாக்கு ஏதாவது ஆச இருந்ததுன்னு சொன்ன அது உன் கல்யாணம் தான்..எங்க எல்லாரோட ஆசையும் கூட அதே தான், அப்படி இருக்கும்போது உன் கல்யாணம் எப்படி நடந்தாலும் எங்களுக்கு சந்தோசம் தான்....எல்லாத்திலயும் தெளிவா யோசிக்கற நீ இதுலயும் தெளிவா தான் யோசிச்சி முடிவு பண்ணிருப்ப, அதனால இத பத்தி இனி எந்த விவாதமோ, வருத்தமோ வேண்டாம்....இனி நடக்க வேண்டியதை பத்தி யோசிப்போம், என்ன சொல்றிங்க எல்லாரும்"

பெரியப்பாவின் முடிவை எல்லாரும் ஆமோதிக்க, எல்லாரின் சம்மதத்தின் பேரிலும் பத்து நாளில் கண்ணனுக்கும் ராதிக்கும் ஊர் கூடி கோலாகலமாக வரவேற்பு நிகழ்ச்சி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது....

இதையெல்லாம் பார்க்கும்போது ராதிக்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது, எத்தனை சாதுரியமாய், அத்தனை கோபத்தையும், வலியையும் மறைத்துக்கொண்டு இத்தனை பேர் முன்னிலையில் கண்ணனை பழிவாங்க எப்பேர்ப்பட்ட அம்பை எய்த நினைத்து அதை வெற்றிகரமாய் செய்துமுடித்து, செவ்விதழில் ஏளன புன்னகையோடு அவன் முகவாட்டத்தையும், தடுமாற்றத்தையும் காண எவ்வளவு ஆசையோடு காத்திருந்தாள்.......அவள் நினைத்ததை போல ஆரம்பத்தில் சூழ்நிலை அமைந்தது தான்....ஆனால், ஆனால் நடுவில் இந்த கண்ணன் ரெண்டே வாக்கியத்தில் அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்து பத்து நாளில் ரிஷப்ஷன் வைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டான்....கண்ணன் ஆண்மையை நினைத்து சற்று திகைப்பாக இருந்தாலும் எவ்வளவு ஆணவம், திமிர், இப்பொழுது கூட உண்மையை சொல்லாமல் என் குடும்பத்தை என்னிடமிருந்து பிரித்துவிட்டு எவ்வளவு சாதுர்யமாய் பேசி இவன் பக்கத்தை நியாயப்படுத்தி கொண்டான் என்று நினைக்கும்போது ராதியின் மென்மையான மனம் இரும்பை போல் இறுகி கடினமடைய ஆரம்பித்துவிட்டது...
இந்த பத்து நாளில் இவன் வாயாலேயே இவன் கேவலமான செய்கையும், இவன் சொன்ன பொய்யையும் எல்லார் முன்னாலும் நிரூபித்து, என் அம்மாவிற்கு புரிய வைத்து என் வாழ்க்கையை நேர் செய்து கொள்ள தான் போகிறேன், அப்பொழுது இந்த கண்ணன் எனும் திமிர்பிடித்தவனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று தனக்குள்ளே சபதம் எடுத்துக்கொண்டாள்.....ஆனால் யார் யாருக்கு பாடம் எடுக்க போகிறார்கள் என்று ராதிக்குமே தெரியாது.....
"என்னமா கண்ணு, எங்க வீட்டு குலவிளக்கு, என்ன யோசிச்சிட்டு இருக்க....எங்க எல்லாருக்குமே உங்க கல்யாணத்துல சந்தோசம் தான், நீ மனசுல ஏதும் குழப்பிக்காதம்மா, கண்ணன் மேல எங்க எல்லாருக்குமே அன்பு, பாசம், அக்கறை எவ்ளோ இருக்கோ அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு...கண்ணன் எடுத்த முடிவு என்னைக்குமே தப்பாகாது....நீ கவலைப்படாம நல்ல ரெஸ்ட் எடு, இன்னும் பத்து நாள்ல ஊரே மெச்சிக்கிற அளவுக்கு உங்க ரிஷப்ஷனை கொண்டாட்டமா நடத்திட மாட்டோம், அது மட்டும் இல்லாம உங்க வீட்ல போய் பேசி உங்க அம்மா அப்பாவை சமாதானப்படுத்தி அவங்களே முன்ன நின்னு உங்க கல்யாணத்த கொண்டாடற அளவுக்கு நாங்க செய்வோம்மா, எங்களை நம்பி நீ நிம்மதியா இரும்மா"

கண்ணனின் மாமா பேச பேச ராதிக்கு பற்றி கொண்டு வந்தது, நல்லா இருந்த என் வாழ்க்கையில உங்க வீட்டு பையன் விளையாடிருக்கான், அத யாராலும் புரிஞ்சிக்க முடில, அவனை கண்டிக்க கூட இந்த வீட்ல ஒருத்தரும் இல்ல, இதுல எனக்கு வந்து ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க...என்ன குடும்பமோ, அங்க என் வீட்ல அப்பாவும், அம்மாவும் எப்டிலாம் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்களோ.... கண்ணா என் அம்மா, அப்பா படற கஷ்டத்துக்கெல்லாம் உன்ன சும்மா விட போறதில்ல....உன் குடும்பத்துக்கு முன்னாடி நல்லவன் வேஷமா போடற, உன்னக்கு இனி நான் தான் முதல் எதிரி, இன்னும் கொஞ்ச நாள்ல உன் வேஷத்தை கலைச்சி உன் சுயரூபத்தை இவங்க முன்னாடி வெட்டவெளியாக்கறேன், அப்போ தெரியும் இந்த ராதி யாருனு...

உள்ளுக்குள்ளே ஆக்ரோஷம் பொங்க தன் இயல்புநிலையே மறந்துவிட்டு ஒரு வில்லி ரேஞ்சுக்கு மாறி விட்ட ராதி தன் இந்த மாற்றத்தை சிறிதளவுகூட உணரவில்லை, உணர்ந்திருந்தால் அவள் பிரச்சனைகள் இந்த நிமிடமே காணாமல் போயிருக்கும், ஆனால் ராதியின் இந்த மாற்றம் தான் அவள் வாழ்க்கையில் பல திருப்பங்களை கொண்டு வந்து நிறுத்த போகிறது......

எழுதியவர் : இந்திராணி (21-Feb-17, 12:02 pm)
பார்வை : 554

மேலே