விழிகள் மோதி பேசும் மொழிகள்

விழிகள் மோதி பேசும் மொழிகள் - தலைப்பு .

தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் பார்வைகள் பரிமாற விழிகள் மோதிக்கொள்ள பேசும் மொழிகளை உங்கள் முன் வைக்கின்றேன் . சிலப்பதிகாரக் கானல் வரி பாடல் போல் யாத்துள்ளேன் . நீண்ட கவிதை தான் . நீளும் காதல் நேசத்தின் சுவாசமே என் வரிகள் .

ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்


வஞ்சி யுனையும் வர்ணிக்க
வகையாய்ப் பாட முன்வந்தேன் .
கொஞ்சி பாடும் எந்தனுடை
கொள்கை இதுவே நீயறிவாய் . ( ஆண் )

பஞ்சு போன்ற மனமிங்கே
பழுது மில்லா பாவைநான்
தஞ்சம் புகுந்தேன் இதயத்தில்
தாவிப் பிடித்தாய் பண்ணதனில் (பெண் )

கலைகள் பலவும் கற்றவளே
காதல் மலரச் செய்திடுவாய் .
சிலைகள் கூட விஞ்சிவிடும் .
சித்தம் கலங்கி நிற்கின்றேன் . (ஆண் )

இதயக் கூட்டில் பூட்டிவைத்தாய் .
இன்ப மொழிகள் பேசிடுவாய் .
உதயம் தன்னில் தேடிடுவாய் .
உணர்வில் நீயும் கலந்திருப்பாய் . (பெண் )

உன்றன் பெயரை உள்ளமெழுதி
உருகும் நிலைமை தெரியாதா ?
என்ற னுள்ளே இருப்பவளே
எவரு மறியா தேனிசையே . (ஆண் )

இதய வலியில் துடித்தேனே .
இருந்தும் உன்னை நினைத்தேனே .
மறந்து விடாது துடித்தாயே .
மருந்தும் நானே என்றாயே . (பெண் )


மலரே உனையே மறக்காமல்
மங்கி வாடி வீழ்ந்தேனே .
பலரின் கண்ணும் பட்டதுவோ
பசுமை இதயம் துடித்ததுவோ ? (ஆண் )

துடித்த போதில் துயர்துடைக்க
துவண்டு விடாது துளிர்த்தெழவே
விடிய விடிய காத்திருந்தாய்
விடிந்த பின்னும் காத்திருந்தாய் . (பெண் )

கண்ணில் தெரியும் பொருள்களுமே
கண்ணே உன்பேர் சொல்லுதடி .
விண்ணில் நீயே வியனுலகம் .
விந்தை என்னுள் விரவிநின்றாய் .(ஆண் )

ஆறு தலுமே சொல்கின்றாய்
அன்பு தனையும் பொழிகின்றாய் .
வேறு மார்க்க மறியவில்லை.
வெள்ளை மனமும் சொல்லிடுதே . (பெண் )

ஆல யங்கள் சென்றிடுவேன் .
அன்ன தானம் வழங்கிடுவேன் .
காலம் முழுதும் காத்திருப்பேன் .
காளை நானும் நினைத்திருப்பேன் . (ஆண் )

பருவம் தவறி வந்திடினும்
பலரும் ஏற்க மறுத்தாலும்
உருவம் இல்லை காதலுக்கு .
உண்மை காதல் வென்றுவிடும் . (பெண் )


நேரில் உனையும் கண்டதில்லை .
நெருங்கி அருகே அமர்ந்ததில்லை .
பாரில் எவரும் பார்த்ததுண்டோ
பார திகண்ட புதுமையினை . (ஆண் )

உள்ளம் சேர்ந்த உறவினிலே
உவந்து மனமும் சம்மதிக்க
கள்ளம் இல்லை இனியில்லை .
காக்கப் பிறந்தாய் உலகினிலே . (பெண் )

நெஞ்சில் என்றும் நீங்காது
நிலையாய் இடத்தைப் பிடித்துவிட்டாய் .
வஞ்சி நீயும் இதழ்களினால்
வண்ணச் சிரிப்பும் உதிர்க்கின்றாய் . (ஆண் )

உதிர்த்தப் புன்ன கையினாலே
உயிரை மாய்த்தும் சென்றுவிட்டேன் .
சித்தம் கலங்கி நிற்கின்றாய் .
சிதறி வீழ்ந்தும் கலங்குகின்றாய் . (பெண் )

நித்தம் உனையே நினைக்கின்றேன் .
நிதமும் அன்பை வேண்டுகின்றேன் .
பித்தன் என்றால் பிசகிடுமோ
பிடியுள் மனமும் அடங்கவில்லை . (ஆண் )

சிகிச்சை தனிலே சிக்குண்டு
சிதறி யதுவே என்மனமும் .
தூக்க மின்றித் துடித்ததுவே .
தூங்கா இதயம் யாரறிவார் ?(பெண் )


இன்பம் சுரக்கும் இதயத்திலே
இதயக் கனியாய் நீயிருப்பாய் .
உன்னைத் தேடும் வண்டாகி
உலகம் முழுதும் சுற்றிடுவேன் . (ஆண் )

சுற்றி சுற்றி நீவந்தே
சுண்டி சுண்டி இழுக்கின்றாய் .
பற்றிப் பற்றிக் கவிதைகளால்
படிக்கப் படிக்க ரசிக்கின்றாய் . (பெண் )

ஒற்றை வரியில் சொல்லிடவே
ஒன்றும் தெரியா பெண்மானே
மற்றை யசெய்தி விடுத்துவிட்டு
மலரே என்னை நினைக்கின்றாய் . (ஆண் )

இயற்கை தந்த வரம்தானோ
இனிதாய் இசைக்கும் பாடல்கள் .
செயற்கை என்பது என்னிடமும்
செல்லாக் காசாய் மாறிவிடும் . (பெண் )

மயக்கும் இமைகள் சொல்லுகின்ற
மாறாக் காதல் காட்சியினை
தயக்கம் வேண்டாம் என்னுயிரே .
தத்தை நீயும் மொழிந்திடுவாய் . (ஆண் )

நேரில் நோக்க வேண்டாமே .
நினைவு ஒன்றே போதுமிங்கே .
தேட வேண்டாம் என்குமெனை
தேடி வந்தால் மறைந்திடுவேன் . (பெண் )


தேடித் தேடிப் பார்த்திருந்தேன் .
தேவி உன்முகம் கண்டிருந்தேன் .
ஓடி வந்து பார்ப்பதற்கு
உயிரே நீஅனு மதிப்பாயா ? (ஆண் )

உந்தன் கவிதை உறவுகொள்ளும்
உந்தன் இதயம் உறவுகொள்ளும் .
பந்தம் இதுவே பக்குவமாய்
பதித்து நீயும் செயல்படுவாய் . (பெண் )

கண்கள் பேசும் கவிதைமொழி
கலங்கி நானும் தவிக்கையிலே
பண்ணில் நீயும் வனைந்திட்டாய் .
பத்தினி பெண்ணே உரைத்திட்டாய் . (ஆண் )

நன்றாம் நீயும் புரிந்துகொண்டாய் .
நலமே மண்டும் உறவாலே .
பொன்றா ஞானம் புகுத்திட்டாய் .
பொறுமை யுடனே எனைவென்றாய் . (பெண் )

புத்தம் புதிதாய்ப் பூத்தவளே .
புரட்டிப் பார்க்கும் புத்தகமே .
மொத்தம் நீதான் தெளிவாயே .
மோக முள்ளும் நீதானே . (ஆண் )

முள்ளாய் குத்த விரும்பவில்லை .
முழுதாய் துன்பம் தரவில்லை .
உள்ளம் தன்னை விரும்பியதால்
உயிராய் உன்னைப் பூஜிப்பேன். (பெண் )


அறிந்தேன் அன்பே காதலினை
அகமே மலர்ந்தேன் சொல்லதனில்
சிறந்தாய் உலகில் கண்ணியமாய்
சிறப்பை சொல்லும் வெண்முகிலே . (ஆண் )


நன்றி பலவும் சொல்லிடுவேன் .
நன்றாய் எனையும் புரிந்ததனால்
என்று மென்று மெனதுள்ளம்
எல்லாப் பொழுதும் நேசிக்கும் . (பெண் )

உனையே வாழ்த்திப் பாடிடவே
உயிரே வார்த்தை தேடுகின்றேன்
எந்தன் இதய வாசலுமே
எந்த நாளும் திறந்திருக்கும் . (ஆண் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Feb-17, 4:24 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 353

மேலே