தேவதை

என் வருகைக்காக விளம்பரமிட்டு அடம்பிடித்த பள்ளி
எகிறி குதிக்கவே இருந்த மதில்சுவர்
ஆற்றங்கரையில் தூங்கும் புத்தகமூட்டை
ஒளித்து வைக்க தூண்டிய ரேங்க் கார்ட்
என்னை குறை கூறவே போடப்பட்ட பேரன்ட்ஸ் மீட்டிங்
தான் தப்பிக்க நிறம்மாறும் உத்தம நண்பன்
ஆங்கிலமேறாத மரமண்டை
நூறு சதவீதம் காட்ட இயலாது என
என்னை நிறுத்திவிட்டு
கோடிட்ட இடத்தை நன்கு படிக்கும் ஒருவனை வைத்து
நிரப்பிக் கொண்ட தனியார் பள்ளி

கைவிரிக்கப் பட்டவர்களுக்காகவே
கட்டப்பட்டிருக்கும் அரசு பள்ளியில்
தஞ்சம் புகுந்த மற்றொரு அகதியாய் நான்
ஆங்கிலம் ஏறவில்லை
தமிழை இதுவரை பார்த்ததேயில்லை
திக்கித் திணறியது என்னிடம் படிப்பு

வால் பையன் என என்னை மட்டுமே
அடையாளம் காட்டிய
அந்த பள்ளியை போல் இது இல்லை
வேண்டுமானால் நல்லாய் படிப்பவனை எளிதில்
அடையாளம் காணலாம்
எனக்கேத்த கூட்டத்தோடு இருப்பதில் ஒரு திருப்தி

விசித்திரம் வியப்பு
எனக்கும் ஒரு வரலாற்று ஆசிரிய தேவதை
படிப்பின் வாசலை திறக்க தொடங்கினாள்
அறுந்த வாலு, குரங்கு சேட்டை என
விமர்சிக்கும் மற்றவர் மத்தியில்
நல்ல பையன் துடிப்பானவன் என
எதேதோ மைவைத்து வசீகரித்தாள்

புத்தகம் சுமையாகவே இருந்த எனக்கு
பாகற்காய் குழம்பில்
வெல்லம் இட்டு கொடுக்கும் தாயை போல்
எப்படி எப்படியோ ஊட்டி விட்டாள் படிப்பை

எனக்கு வரலாறு பிடித்த வேளையில்
எனது பழைய வரலாறு அழிந்து கொண்டிருந்தது
தமிழின் சுவை நாவில் ஒட்டியது
கவிதையென நான் கிறுக்கியதில் எல்லாம்
ஏதோ ஒரு அர்த்தத்தை அவள் புரிந்து கொண்டாள்

ஒன்பதாம் வகுப்பு அரையாண்டு தேர்வு
என் கணித விடைத்தாளில் முட்டை போட்டது
ஒரு ஆசிரிய கோழி
கணித ஆசிரியர் மகன் நான்
விரக்தியின் உச்சம்
வழக்கமாய் கலங்காத நான்
அதை எப்படி அவளிடம் காட்டுவேன்
என எனக்குள்ளும்
மானம் என்ற ஒன்றை உணர்ந்த நாள்

ஆனால் அவள் வேறுவிதமாய் சொன்னாள்
உனக்குள் நீ வருந்த தொடங்கியதே
உனது முதல் வெற்றி என்றாள்
கண்களில் ஏதோ புது பொலிவு
ரத்தத்தில் புதிய பாய்ச்சல்

எனக்கு எனது அன்றாடங்கள் மாறியது
அதுவே அன்றாடமாய் மாறியது
பத்தாம்வகுப்பு தேர்வு முடிவு
நிச்சயம் தோல்வி தான் என
சூழ்ந்திருப்பவர்கள் அறுதியிட்டே கூறினர்

எனக்கு தெரியும்
என்னை விட
என்னளவிலான
அந்த வரலாற்று மேதைக்கு தெரியும்
அதுவே வந்தது
நான் நானூற்றி முப்பத்தெட்டுக்கு சொந்தமானேன்
அதைவிட மகிழ்ச்சி
எனது கணிதத்தில்
ஒரு முட்டை கூடியும் அதற்கு முன்பு ஒரு ஒன்றும் (100)
என்னைப் போலவே கம்பீரமாய் நின்றிருந்தது
அந்த கணித ஆசிரியர் முன்பு

ஒரு மாணவனை உயர்த்த
என்ன செய்ய வேண்டும் என
அந்த வரலாற்று ஆசிரியை
என்னுள் ஒரு நீங்காத வரலாற்றை
எழுதி சென்றிருக்கிறார்

நானும் புது வரலாறுகளை
உருவாக்க தொடங்கியிருக்கிறேன்
அந்த தேவதை வழி

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (22-Feb-17, 9:17 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : thevathai
பார்வை : 124

மேலே