மீண்டும் பிறப்போம் வா

போகிற போக்கைப் பார்த்தால்
புரியவே முடிய வில்லை!
புதுமைகள் பெருகி நம்மைப்
பதுமைகள் ஆக்கி வைத்து
புரட்சியில் உலகம் குலுங்கி
வறட்சியில் முடியும் போலும்!...
அடிப்படை தேவை இங்கே
அதிகமாய் இல்லை, ஆனால்
பிடிப்பதை எல்லாம் வாங்கிப்
பிரிந்திட மனமில் லாமல்
இருக்கிற வரைக்கு மன்றி
இறப்பிற்குப் பின்னும் வாழ
பெருகிய செல்வம் சேர்த்து
பெறுவது என்ன வென்று
சேர்ப்பவன் அறிவ தில்லை!
அறிந்தவன் சேர்ப்ப தில்லை!...
பசியினால் பலரும் சாக
பார்த்ததை நிற்கும் மனிதம்
பொசுக்கென ஒழிந்தால் என்ன?!
பூமிக்கு இழப்பும் என்ன?!
மக்களில் பேதம் காட்டும்
மடமைக்கு பேர்தான் மதமா?
பூக்களை பறித்து செய்யும்
பூசைகள் எதற்கோ?ஏனோ
பலவகை மலர்கள் உண்டு
பலவகை மனிதர் உண்டு
சிலவகை உயர்ந்த தில்லை
சிலவகை தாழ்ந்த தில்லை
கல்வியின் நோக்கம் மாறி
காசினைச் சேர்க்கும் வழியாய்
எண்ணியே படிக்கும் இளைஞர்
எதிர்காலம் எரித்தே நிற்பார்!
அறிவினைப் பெற்று அதன்பின்
அடுத்தவர் மடமை நீங்க
செறிவுடன் கற்பிப் போர்தாம்
செழுமையை விளைப்பார் இங்கே!
உறவுகள் என்னும் சொல்லில்
வரவுகள் கணக்குப் பார்த்து
ஐக்கியம் மங்கிப் போனால்
அழகிய வாழ்க்கை ஏது
எப்படி திசைமா றியது
எங்குதான் பயணிக் கிறது?
இப்படி நடப்ப தெல்லாம்
இறைவனின் நாட்டம் தானா?
அப்படி எண்ணிப் பார்த்தால்
அவனியைப் படைத்துப் பார்த்து
மனிதனை அதனில் ஆக்கும்
மறைபொருள் தானும் என்ன?
தொடங்கிய காலம் தொட்டே
தொடர்கிற வாழ்க்கைப் பாதை
பலவித மாற்றம் கண்டு
பலவித ஏற்றம் கண்டு
இறுதியில் சூன்ய மாகும்
ஏற்பாடு இதுவும் ஏனோ?
கேள்வியில் உள்ளம் ஒன்றி
கேடுகள் நீக்க எண்ணி
வேள்விகள் செய்து பார்த்தேன்
விடையென வந்த திதுதான்!
இருக்கிற எல்லாம் மாய்த்து
இறைவனைக் கேட்டு இன்னோர்
சறுக்கிற வழிகள் இல்லா
சமுதாயம் படைக்கச் சொல்வோம்..
இதற்குமேல் படைக்கும் உலகில்
நமக்கொரு வாய்ப்பைத் தந்து
முழுமனம் கொண்ட மனிதர்
முகங்களைப் பார்த்து மகிழ
மீண்டும்நாம் பிறக்க வேண்டும்
மீதத்தை அதிலே பார்ப்போம்!....

அ.மு.நௌபல்
22/02/2017

எழுதியவர் : அ.மு.நௌபல் எ அபி (22-Feb-17, 4:21 pm)
பார்வை : 184

மேலே