தொட்டில்-சிறுகதை

1

பத்மா அக்கா விழித்துக் கொண்டதும் தன் குழந்தை எங்கே என்றுதான் முதலில் எண்ணினாள்.
திடுக்கிட்டு எழுந்து குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தவள்
மார்பில் ஈரம் சொட்டி ஆடை நனைந்திருப்பதை உணர்ந்தாள்.

ஆடையை விலக்கிக் கூர்ந்து பார்த்தபோது வெண்ணிற திரவம் கசிந்து சருமத்தில் ஒட்டிப் பரவியிருந்தது.
கைகள் நடுங்க இரு விரல்களால் தொட்டு
முகத்திற்கு நேராக உயர்த்தி கூர்ந்து பார்த்தாள்.அது பால்தான்.
சட்டென எழுந்த மனஎழுச்சியில் சிரிப்பு போல உதடு வளைந்து துடித்து
நெஞ்சு விம்ம கைகளில் முகம் புதைத்துக் கதறியழுதாள்.
அழுது அழுது அந்த அழுகையிலேயே அனைத்துக் கரைகளும் உடைந்து
துக்கம் பீறிட மேலும் கதறினாள்.
பின்,ஆசுவாசமடைந்து
புறங்கையால் மூக்கைத் துடைத்து
சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டபின்,
எழுந்து ஆடையை சரிசெய்து
இடுப்புவரை வளர்ந்து விரிந்து தொங்கிக் கிடந்த முடியை அள்ளி
இடப்பக்கம் சுற்றிக் கொண்டை போட்டுக் கொண்டாள்.

அவளுக்கு வலப்புறம் அந்த வீட்டின் கோடியில்
சிதைந்த கூரையின் ஓரிரு ஓடுகள் தரையில் சிதறிக் கிடக்க
அதற்கு சற்று தள்ளி
அடர்மஞ்சள் நிறத்தில் பொழிந்த சூரிய ஒளியில்
தூசிகள் எழுந்து மின்னிச் சுழன்றபடியிருந்தன.

அவள் எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்து வாராந்தாவில் படிகளை நோக்கி நடக்கையில்
பலவருட இலைச் சருகுகள் கொலுசொலி கேட்டு பதறி விலகின.
வாசலில் இருந்த குருவிகள் எழுந்து பறந்து முள்மரத்தின் மீதமர்ந்து துடித்து பூசலிட்டன.

வாசல் முழுக்க ஒட்டும் முள்செடிகள் வளர்ந்து புதர் போல மண்டியிருந்தன.
அவள் படியிறங்கி
அச்செடிகளினூடாக நடந்து
பாழடைந்த எதிர் கட்டிடத்தை அடைந்து
இருண்ட அறைக்குள் முந்தைய நாள் ஈன்ற குட்டிகளுடன் இருந்த வெண்ணிற பூனையை அணுகினாள்.

கண் விழிக்காத தன் இரு குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அந்த பூனை
ஆள்வருவதைக் கண்டு
எச்சரிக்கை விரிந்த கண்களுடன் கூர்ந்து பார்த்து படுத்திருந்தது.
அவள் அதை நெருங்கி
அதன் முன் மண்டியிட்டு அமர்ந்து
இடக்கையால் அதன் தலையை மெல்ல வருடிவிட்டாள்.
அது அதையேற்று கண்கள் மூடி கனத்த குரலில் இருமுறை கத்தியது.
பின்,அவள் தாயின் வயிற்றில் முட்டி பால் குடித்துக் கொண்டிருந்த
இரு குட்டிகளில் ஒன்றை
மென்மையாக அள்ளி எடுத்தாள்.

தாய் மடியை பிரிந்த ஏமாற்றத்தில்
அது வீரிட்டலற
முன்னங்காலை மடித்து நக்கிக்கொண்டிருந்த பூனை
நிறுத்தி அழுத்தம் மிக்க குரலில் ஒருமுறை கத்தியபடி அவளைப் பார்த்தது.

அவள் அதை தன் இடமார்போடு அணைத்து
அதன் சிறுவாயை முலைக்காம்பின்மீது வைத்து அழுத்தினாள்.
பால் மணம் அறிந்ததும் உயிர்விசையுடன் சட்டென கவ்வி உறிஞ்சத் தொடங்கியது.
அவள் கிழுதட்டை இறுகக்கடித்தபடி,
குறுகுறுப்பும்,வலியும் பரவ
நுனிவால் நெளிந்து
மேலெழுந்து மார்பில் விழ
குடித்துக் கொண்டிருந்த குட்டியின் தலையை
இருவிரல்களால்
நீவிவிட்டாள்.
கண்களில் நீர் ஊறி
தேங்கித் திரண்டு
இளவெம்மையுடன் வழிந்து மார்பில் சொட்டியது.

அந்நேரம்,யாரோ தெருவாசற் கதவைத்
திறந்து
செடிகள்மீது நடந்து உள்ளே வருவது தெரிந்தது.

2

பிரபஞ்சத்தின் சிறுதுண்டு
திரவமாகக் கிடப்பது போல
கனத்து குளிர்ந்து கிடந்தது அந்த நீர்.
கிணற்று நீரின் கரும்பரப்பெங்கும் காய்ந்த சிறு இலைகளும் பூக்களும் குச்சிகளும் கிடக்க
அவை இருளில் மிதக்கும் விண்மீன்கள் போல தோன்றின.
ஓரு காய்ந்த இலையின் அருகே கிடந்த மஞ்சள்நிற பூவை ஒட்டி நின்ற
சிறு இலையின் மீது
பல மடங்கு சிறியவனாய் என்னை உருவகித்துக் கொண்டேன்.
கைச்சுவரின் சிமெண்ட் துகள்கள்
கைபட்டு உதிர்ந்து விழ
இருள் பரப்பெங்கும் அசைவெழுந்து அடங்கியது.
ஒரு கணத்தில் படைத்தவனாகவும்,மண்டியிட்டு இரைஞ்சுபவனாகவும் என்னை உணர்ந்தேன்.
கணநேர சிந்தனைக்குப் பின்,மேலும் சிமெண்ட் துகள்களை எடுத்து நீரில் போட்டேன்.
அவை கருநீர் பரப்பில் விழுந்து
நீர் அலைகள் எழ துடித்தது.
மனிதன் தன்னை படைப்பவனாக அன்றி இறைஞ்சபவனாக எண்ணி ஒரு நாளும் உயிர்வாழ முடியாது என்று நினைத்து புன்னகை புரிந்து கொண்டேன்.

"டேய்....அங்க நின்னுட்டு என்ன பண்ற?
இந்தப்பக்கொ வா!"
அம்மா எதிரே,மரங்களினூடாக
ஓலைக் குளியலறையின் பின்னால்
வலது தொடையைச் சொறிந்தபடி நின்று
அதட்டிச் சொன்னாள்.

"தாரில்ல.வந்து தார் போட்டுக்குடு.வா!"என்றாள்.

நான் புன்னகையுடன்,"வரமாட்ட"என்றேன்.

"ஏ வரமாட்ட....வர்லேனா மத்தியானத்துக்குச் சோறு கெடையாது"

"பரவால்ல.நா ஆராச்சூட்ல போயி வாங்கித் தின்னுப்ப"

"ஆரு உனக்கு அங்க ஆக்கி வெச்சுட்டு உக்காந்துட்டிருக்காங்க"

நான்,"அதல்லா போடுவாங்க"என்றேன்.

அம்மா,அரைக்கணம் கண்களில் சிரிப்பு ஒளிர பார்த்து
மெல்ல உதடு விரியச் சிரித்து,"மொட்டத்தலயா...."என்றாள்.

நான் சிரித்தவாறு கிணற்றை ஒட்டி எதிரே நீண்ட தார்சாலையில் நடந்து
அம்மாவிற்கு பக்கவாட்டில் வந்து நின்றேன்.
கரியதார்சாலை மீது
கோனபுளியங்காய் மரத்தின் சிறு குச்சிகள்,இலைகள்,பிஞ்சுக் காய்கள்....

சாலைக்கு சற்று உள்தள்ளி வெண்சாம்பல்நிறத்தில் அடிமரம் கொண்ட மரத்தில் முட்களும் வரிகளும் இருக்க
நீண்டு வளர்ந்து
கிளைகள் விரித்துப் பரந்திருந்தது.
இரண்டு மூன்று கிளிகள் மரத்தில் அமர்ந்து
காயைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன.
சூரிய ஒளி இலைகளுக்கிடையே ஒளிரும் பொட்டுகளாகத் தெரிந்தது.

"இந்தா"

அம்மா,சிவந்த காயொன்றை எடுத்து என் தொடைமீது படும்படி வீசினாள்.

உருண்டு வளைந்த பச்சைத் தோலுக்குள் வெள்ளை பருப்பு பற்றிய கரும் விதைகள்.
ஒவ்வொரு காயும் ஒரு கருப்பை.அதில் ஒவ்வொன்றிலிம் ஐந்திற்கு மேற்பட்ட குழந்தைகள்;தலைமுறைகள்.

நான் நிமிர்ந்து மரத்தை அண்ணாந்து பார்த்தேன்.
உடல் முழுக்க விதைகளுடன் விரிந்து நிமிர்ந்து நின்றிருந்தது.
ஒரு முதுபெரும் அன்னை போல.
எறும்புகளும்,பூச்சிகளும்,புழுக்களும்,பறவைகளும்,மனிதர்களும் நாடும்-அடைந்து வாழும் ஒற்றைப்பெருங்காடு.


நான் இந்த விதையை
விதைக்கப் போடலாம்.அது வளர்ந்ததும் அடியில் நின்று அண்ணாந்து பார்கலாம்.என்னால் செய்ய முடிந்தது அதுதான்.

பூமி மாபெரும் சுற்றுலாதளம்.மனிதன் வெறும் பார்வையாளனாக மட்டுமே இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
உண்மையில் அவன் சிருஷ்டிப்பவன் அல்ல.சிருஷ்டிக்கப்பட்டவன்.
நான் புன்னகை செய்து கொண்டேன்.

மெல்லிய காற்று வந்து அணைத்துச் செல்ல
மரம் உடல் சிலிர்த்து சலசலத்தது.
குச்சிகளும்,இலைகளும் என்மீது பொழிந்தன.
ஒரு கிளி எழுந்து சடசடத்து பறந்து சென்றது.பின்,மற்றொன்று.

"இன்னைக்கு எங்கேமு போகலயா?"
அம்மா கேட்டாள்.

"கெளதம் வீட்ல இல்ல.அவுங்க எங்கயோ ஊருக்குப் போயிட்டாங்க"என்றேன்.

அம்மா,"வெய்யல்ல சுத்தாத...."என்றவாறு காயை
மென்றபடி வைக்கோல் போரிற்கு அப்பால்
வீட்டை நோக்கிச் சென்றாள்.

நான் காயை தின்றபடி சாலையில் நடந்தேன்.
பக்கவாட்டில்,கிளுவை வேலியினூடாக
'பூம்பழத்துக்காரர்' வீட்டு வாசலில்
மணத்துடன்
தொட்டி நீக்கப்பட்ட தேங்காய்கள்
வெயிலில் உலர்வது தெரிந்தது.
வீட்டுத் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்து அவரின் மனைவி-பாட்டி எதையோ முறத்தில் போட்டு புடைத்துக் கொண்டிருந்தார்.
வாசலில் ஓலைச்சாலைக்குள் வண்டியில்லை.கதிர் அண்ணன் எங்கேனும் வெளியில் சென்றிருப்பார்.

சாலை வளைந்து கிழக்கு நோக்கிச் சென்றது.
காலை வெயில் நெற்றி மீது சுளீரென்று விழுந்தது.
வலப்பக்கம் விளைநிலங்களுக்கு அப்பால்
சீனாபுரம் செல்லும் காட்டுப்பாதை.
அதனைச் சுற்றியும் தென்னை,வாழைத் தோப்புகள்.
தோப்புப் பக்கம் செல்லலாம் என எண்ணி சாலையைக் கடந்தபோது
இடப்புறம்,கெளதமின் பாட்டி வீட்டிற்கு நான்கைந்து வீடுகள் தள்ளியிருந்த பத்மா அக்காவின் பாழடைந்த வீடு கண்ணில்பட்டது.
ஒரு கணம் நின்று சிந்தித்தபோது
அங்கு சென்றால் என்ன என்று தோன்றியது.

3

பத்மா அக்காவை நான் நேரில் பார்த்தது கிடையாது.
நான் பிறப்பதற்கு முன்பே அவள் இறந்துபோய்விட்டாள்.
நான் அறிந்தவையெல்லாம் பிறர் சொல்லி கேட்டதுதான்.

அவள் தற்கொலை செய்துகொண்ட பின்,எரியூட்டுவதற்குச்
சிறிது நேரம் முன்பு அவள் கணவன் சங்கர்,பித்துபிடித்தவனாக
ஊர்நீங்கிச் சென்றுவிட்டான்.அதன் பின்னர்,அவனை யாரும் எங்கும் கண்டதில்லை என்று சொன்னார்கள்.
அவனின் அம்மா சிவகாமி,அந்த வீட்டில் இரண்டு நாள்கள் மட்டுமே தங்கியிருந்து அந்த வீட்டை விட்டுச் சென்ற மூன்றாம் நாள்
மருத்துவமனையிலேயே மூச்சுத் திணறி உயிர்துறந்துவிட்டார்.
அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததே அன்னிச்சையான நிகழ்வில்லையென்றும்
அது பத்மா அக்காவின் திட்டமிட்ட சதியென்றும் சொன்னார்கள்.
பத்மா அக்கா இறந்த இரவிலிருந்து அவர் இறக்கும் கணம் வரை
ஒரு நொடியும் விழிமூடவில்லை என்றார்கள்.
பகல் முழுக்க வெளிச்சத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் என்றும்
சிறுநிழலுக்குக்கூட அஞ்சினார் என்றும் சொன்னார்கள்.
இரவெல்லாம் தீக்குச்சியை உரசி அதன் தழலையே பார்த்துக் கொண்டிருந்தார் என்றும்
நிலவொளி வேண்டி அவரே வீட்டுக் கூரையை சிதைத்தார் என்றும் சொன்னார்கள்.

குளியலறையில் வழுக்கி விழுந்து கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு
அவரது உடமைகளை எடுக்க வந்த அவரின் மூத்த மகன்,பத்மா அக்காவைப் பார்த்ததாகவும் அவள் அவனை விரட்டிவிட்டதாகவும்
அவள் இன்னமும் அங்கேயே இருப்பதாகவும் சொன்னார்கள்.

அவள் பெரும்பாலும் குழந்தைகள் உள்ள வீட்டிற்கு மட்டுமே வருவாள் என்றார்கள்.
என் அம்மாகூட ஒருநாள் இரவில்
அவளை எங்கள் வீட்டு மல்லிகைப் பூச்செடியினருகில் பார்த்திருப்பதாக சொன்னாள்.

நான் இன்னும் பார்த்ததில்லை.
இப்போது நான் அங்கு செல்வதற்கு விசேஷ காரணமொன்றுமில்லை.
சிறுவயதிலிருந்தே
இரவு என்னை துணுக்குறச் செய்யும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதை என் பயத்திற்கெதிரான சோதனை முயற்சி என்று சொல்லலாம்.
ஆம்.இந்த வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று எண்ணிய கணம் எனக்குள் உவகை எழுந்தது அதனால்தான்.

கெளதமுடன் ஓரிரு முறை சுவர் ஏறிக் குதித்து
உள்ளே நுழைந்திருக்கிறேன்.
தனியாக செல்வது இதுதான் முதல்முறை.


நான் அந்த வீட்டை நெருங்கி
அதன் முன் நின்றேன்.
படிகளற்ற தெருவாசற் கதவையொட்டி
ஒட்டும் முள் கொண்ட செடிகள் வளர்ந்து அடர்ந்திருந்தன.
அதைத் தாண்டியதும்
மூன்று பலகைகளை இணைத்துச் செய்த பழைய மரக்கதவு.வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.
தள்ளித் திறந்ததும்
உள்ளேயும் அதே செடிகள் முழங்கால் அளவு உயரத்திற்கு வளர்ந்து நிரம்பியிருந்தன.
இரு இலைகளுக்கிடையில் நீண்ட குச்சியின் இருபுறமும்
கோதுமை அளவில்
சற்று பருத்த ஆச்சர்ய குறி போன்ற ஒட்டும் முட்கள் வளர்ந்திருந்தன.
அவற்றை மிதித்து நடக்கும்போதே
கண்களால் ஒரு வேறுபாட்டை உணர்ந்தேன்.
எனக்கு முன் யாரோ வந்து சென்றிருப்பது போலத் தோன்றியது.

மற்றவர்கள் இங்கு வந்து பார்ப்பதற்கு சுவாரசியமாக ஏதும் இருக்காது.
குடிகாரர்களும் கூட இங்கே இரவில் வருவது கிடையாது.
ஒருவேளை நாயாக இருக்கலாம்.
பெருச்சாளி இப்படி செல்லாது.அது ஊடுருவி பொந்துபோல பாதையை உண்டாக்கியிருக்கும்.

நான் செடிகளை மிதித்து நடந்து வாசலுக்கு வந்து சேர்ந்தேன்.
எதிர்கட்டிடத்திலிருந்த பூனைக்குட்டிகளின் மெல்லிய குரல் கேட்டுக் கொண்டிருந்தது.
முள் மரத்தில் காற்று புகுந்து சலசலக்கச் செய்தது.

நான் நிமிர்ந்து வீட்டை நோக்கினேன்.
கையோட்டுக் கூரை வேய்ந்த
செம்மண் சுவர் கொண்ட வீடு.
நான்கு தூண்கள் கொண்ட
வராந்தாவின் மையவிளிம்பில் இரு படிகள்.
தூண்களுக்கருகே
உதிர்ந்து கிடந்த
இலைச் சருகுகள் காற்றில் அலைபட்டன.
காலையொளி பக்கவாட்டில் விழுந்து
மரத்தூண் நிழல்கள் மேற்கு நோக்கிச் சரிந்து கிடந்தன.

சட்டென மனம் மெல்லிய பதைப்புக்குள்ளானதை உணர்ந்தேன்.
மீண்டும் ஒருமுறை வீட்டைக் கூர்ந்து பார்த்தபோது அது ஏன் என உணர்ந்தேன்.
கதவு ஒருக்களித்துக் கிடந்தது.அது திறந்து கிடந்து நான் இதுவரை பார்த்தது கிடையாது.


நான் மெல்ல நடந்து வராந்தாவில் ஏறினேன்.மரச்சட்டத்தின் தூள் தரையில் படிந்து கிடந்தது.
அதில் யாரோ நடந்து சென்ற காலடித் தடம்.
நான் அதைப்பார்த்தவாறே கதவின் முன் வந்து நின்றேன்.
சற்று விலகியிருந்த கதவின் வழி
எதிரே,தரையில் கிடந்த மரநாற்காலி பாதி தெரிய
அதன் அருகே நீண்ட தோலுரிந்த குச்சியும் காவி நிறத் துணிப்பையும் கிடந்தது.
நாற்காலிக்கு மேலே உத்தரத்திலிருந்து
காவி வேட்டி அணிந்த ஓர் ஆண் உடல் தொங்கிக் கொண்டிருந்தது.

நான் திகைத்து அதிர்ச்சியில் அன்னிச்சையாக பின்வாங்கினேன்.
சிக்குபிடித்த தலைமுடியும் தாடியும் கொண்ட அந்த ஆள்
நாற்பது வயதிற்கு மேலிருக்கலாம்.
உயிர் பிரிந்து உடல் விரைத்துத் தொங்கிக் கொண்டிருந்தது.
நான் பாய்ந்து வராந்தாவிலிருந்து குதித்து செடிகளில் இறங்கி ஓடினேன்.
பிடரியில் சித்தம் கூர்மை கொண்டு
முதுகை ஏதோ பின்னிருந்து அழுத்த விரைந்து வந்து கதவைத் திறந்து சாலையில் இறங்கினேன்.

வெயில் கண்கூசும்படி பொழிந்து கொண்டிருந்தது.
மூச்சிரைத்து உடலின் இணைப்புகள் நடுங்கி அதிர்வதை உணர்ந்தேன்.
தொண்டை ஏற்கனவே
உலர்ந்துபோயிருந்தது.
இதயம் கைக்குள் அடைபட்ட ஈ போல முட்டி முட்டி துடித்துக் கொண்டிருக்க
நான் எங்கு செல்வதென்று முடிவெடுத்து
சாலையில் விரைந்து தர்மகர்த்தாவின் வீட்டை நோக்கி ஓடினேன்.

திரும்பி வரும்போது நாங்கள் பத்து பேர் வரை இருந்தோம்.
நான் வராந்தாவில் தூணின் அருகேயே நின்று கொண்டேன்.
உடல் வியர்த்து தொடைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
கால் சட்டையில் முட்கள் வரிவரியாக குவிந்திருந்தன.அவை குத்திய இடங்களில் எரிச்சல் பரவியிருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன்.
அவர்கள் பிணத்தைக் கீழிறக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் அது பத்மா அக்காவின் கணவர் என்று அடையாளம் கண்டு சொன்னார்.

காற்று மெல்ல சலசலத்துக் கொண்டிருக்க
ஒரு காகம் கரைந்தபடி மேற்கு நோக்கிச் சென்றது.
அவர்கள் பிணத்தை இறக்கிவிட்டு கூடிநின்று பேசிக் கொண்டார்கள்.
ஒருவர் யாருக்கோ போன் செய்தார்.

நான் அந்த நாற்காலியையே பார்த்தேன்.
பத்மா அக்காவும் அதில் ஏறி நின்றுதான் உயிர்விட்டாள்.
ஒரு கணம் என் உடல் சிலிர்த்துக் கொண்டது.
ஒருவேளை இப்போது அந்த நாற்காலியில் பத்மா அக்கா
அமர்ந்திருக்கலாம்
மடியில் அவள் கணவன்.ஒரு குழந்தை போல.
-சக்திவேல் லோகநாதன்

எழுதியவர் : சக்திவேல் லோகநாதன் (25-Feb-17, 5:39 am)
Tanglish : THOTTIL
பார்வை : 423

மேலே