நண்பனை போல் யாருமில்லை

என் நண்பனின் பெயர் ரகு. அவனும் நானும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்துதே நெருங்கிய நண்பர்கள். இப்பொழுது நாங்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறோம்.

எனக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும் தான். உடன்பிறந்தவர்களும் யாரும் இல்லை. என் அப்பா ஆட்டோ ஓட்டுநர் என்பதால் கஷ்ட பட்டு தான் என்னை படிக்க வைத்தார்.
என் அப்பாவிற்கோ அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். மருத்துவமனைக்கு செல்ல அடிக்கடி பணம் தேவை பட்டது கையில் பணம் இல்லாததால் அண்ணாச்சியிடம் வட்டிக்கு பணம் வாங்கி மருத்துவமனைக்கு செலவழிதோம்.

பணத்தை திருப்பி தராததால், பணத்தை கேட்டு அடிக்கடி வீட்டின் முன் வந்து சண்டை போட ஆரம்பித்தார் அண்ணாச்சி. இதனால் என் அப்பா மிகவும் அவமானப்பட்டார். ஆதலால் வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி தர உறவினர்களிடம் கடனாக 10 ஆயிரம் கேட்டோம். அவர்கள் எங்களை அசிங்க படுத்தியும் பணத்தை தரமுடியாது என்றும் இனிமேல் இங்கே வராதே என்றும் கூறிவிட்டார்கள்.

கடைசியாக நண்பனிடம் உதவி கேட்கலாம், அவன் கண்டிப்பாக எனக்கு உதவி செய்வான் என்று அவனிடம் சென்று நடந்ததை கூறி உதவி கேட்டேன். அதற்கு அவன் "அவ்வளவு பணம் என்கிட்ட எங்க டா இருக்கு" என்றான். அவன் கூறியதும் சரி தான் அவன் குடும்பமும் கஷ்டத்தில் தான் இருக்கிறது.

இருந்தாலும் அவனிடம் வேறு யாரிடமாவது கேட்டு வாங்கி தருமாறு கூறினேன். அதற்கு அவன் "நான் யாரிடமாவது கேட்டு உனக்கு நாளை சொல்கிறேன்" என்றான். ஆனால் மறுநாளிலிருந்து அவன் என்னை பார்க்கவே இல்லை. அவன் வீட்டிற்கு சென்றாலும் அவன் வீட்டில் இல்லை.

அவன் இப்படி செய்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவனிடம் பணம் கேட்க்காமல் இருந்திருந்தால் எங்கள் நட்பாவது நீடித்து இருக்கும். என்னை இப்படி ஒதுக்கி விட்டானே என்று வருத்தப்பட்டேன்.

ஒன்றரை மாதம் ஆகி விட்டது. இன்னும் அவருக்கு பணம் கொடுக்க வில்லை. ஆதலால் நானே ஏதாவது ஒரு வேளைக்கு சென்று கொஞ்ச கொஞ்சமாக கடனை அடைக்கலம் என்று வீட்டில் இருந்து யோசித்து கொண்டு இருந்தேன். அப்பொழுது என் நண்பன் என் வீட்டிற்கு வந்தான்.

என் கையில் 8 ஆயிரம் பணத்தை கொடுத்தான். நான் அதை வாங்க மறுத்து விட்டேன். அவனிடம் கோபமாய் "இவ்வளவு நாள் எங்கே சென்றாய்" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "நீ கேட்ட உடன் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை, யாரை கேட்டாலும் இல்லை என்று கூறிவிட்டார்கள். பணம் இல்லை என்று உன்னிடம் எப்படி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை அதனால் நான் ஒரு முடிவு செய்தேன், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு சென்றேன் அதில் சம்பாதித்த பணம் தான் இது. இதை வைத்துக்கொள்" என்று பணத்தை கொடுத்தான்.

இவ்வளவு நாட்கள் இவனோடு பழகியும் இவனை பற்றி தவறாக நினைத்து விட்டேனே, நட்பின் மீதே சந்தேகம் பட்டு விட்டேனே என்று நினைத்து வருத்தப்பட்டேன்.

நண்பன் பணம் கேட்டான் என்பதற்காக வேலை செய்து பணத்தை கொடுத்திருக்கிறானே. உண்மையிலையே என் நண்பனை போல் இவ்வுலகில் யாருமில்லை என்று பெருமிதம் கொண்டேன்.

எழுதியவர் : சரவணன் (25-Feb-17, 9:07 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 616

மேலே