நீ நீதான் நான் நான்தான்

நீ பணத்தைப்
படிப்பவள்
நானோ
மனதைப் படிப்பவன்

நீ புத்தகக்கல்வி
மட்டும் கற்றவள்
நான் புத்தியில்
கல்வி கற்றவன்

நீ நுனி நாக்கால்
ஆங்கிலம்
பேசுவோரை
அழகென்பவள்
நானோ நுனிநாக்கால்
தமிழ்பேசுவோரைக்
கடிந்துகொள்பவன்

நீ பீட்சா பர்க்கரையே
பாதி உயிராய்க்
கொண்டவள்
நானோ
கம்மங்கூழையும்
கேப்பைக்
கஞ்சியையும்
ஆதி உயிராய்க்
கொண்டவன்

நீ வலைதளங்களில்
ரசனையைத்
தேடுபவள்
நானோ
வயல்வெளிகளில்
ரசனையைத்
தேடுபவன்

நீ விமானத்தில்
செல்வதையே
தரக்குறைவு
என்பவள்
நானோ
மாட்டுவண்டியில்
பயணிப்பதையே
சொர்க்கமென்பவன்

நீ பெரிய
தொழிலதிபரின்
மகளென மற்றவரிடம்
அறிமுகமாவாய்
நானோ மிகச் சிறிய
விவசாயியின்
மகனென
அறியப்படுபவன்

நீ உதட்டுமையினால்
அழகைக் கூட்டுபவள்
நானோ
பேனாமையினால்
உலகை
விமர்சிப்பவன்

நீ உன் தந்தையிடம்
"ஐ" போன்
வாங்கித்தரச்சொல்லி
அடம்பிடிப்பவள்
நானோ
என் தந்தையிடம்
ஐந்துரூபாய்
கேட்டு
அடம்பிடிப்பவன்

நீ மாதமொருமுறை
வெளிநாடு சுற்றுலா
செல்பவள்
நானோ
மாதமொருமுறை
வெளியூர்ப் பயணம்
செல்பவன்

நீ அலைபேசியில்
அநேக நட்பை
ஆரவாரமாய்
வளர்ப்பவள்
நானோ
பக்கத்து
வீட்டு நண்பர்களுடன்
உயிருக்குயிராயிருப்பவன்

நீ அடைமழையில்
கப்பல்செய்து
விடுபவள்
நானோ
ஓலைக்குடிசை
உச்சியின் துவாரம்
அடைப்பவன்

நீ கோவிலுக்குள்
தெய்வத்தை
பார்க்கத்துடிப்பவள்
நானோ
கோவில்முன்பே
தெய்வங்களை
அனுசரிப்பவன்

நீ கிராமத்துமணம்
நுகராதவள்
நானோ நகரத்துமணம்
நுகராதவன்


நீ
சாப்பிடுவதை
வேலையாகக்
கொண்டவள்
நானோ சாப்பிடுவதை
வேளையாகக்
கொண்டவன்

நீ தள்ளுவண்டி
வியாபாரியிடம்
பேரம் பேசுபவள்
நானோ ஆடம்பர
வாசல்களுக்கு
அப்பால் தூரம்
நிற்பவன்

நீ பென்ஸ்கார்
வைத்திருக்கும்
அண்ணனின் தங்கை
நானோ பழைய
மிதிவண்டி
வைத்திருக்கும்
தங்கையின்
அண்ணன்....

நீ விரல்சொடுக்கில்
யாவையும்
அருகில் கொண்டுவரும்
வசதியானவள்
நானோ உடல்வருத்தி
ஆதாரம்பெறும்
அசதியானவன்

நீ உடலுக்கும்
உடைக்குமுள்ள
மதிப்பைக்
கணிப்பவள்
நானோ உள்ளத்துக்கும்
உடைக்குமுள்ள
தொடர்பைக் கணிப்பவன்

நீ
ஆடம்பரமாயுள்ள
ஆணழகனைத்
தேடுபவள்
நானோ
ஓலைக்குடிசை
தேவதையைத்
தேடுபவன்

என் தவறுதான்
உன்
எண்ணத்தையறியாமல்
வண்ணத்தில்
மயங்கியது
என் தவறுதான்
நீ என்னை
நிராகரித்ததும்
சரிதான்

நீ நீதான்
நான் நான்தான்

கடைசியாக
ஒன்றுமட்டும்
பெண்ணே....
நீ இறந்தால்
உன் இடத்தை
வேறொருவர்
நிரப்புவார்
நானோ
இறந்தால்
என்னிடத்தை
என் தலைமுறைதான்
நிரப்பும்

நீ இறந்தால்
உன் உறவினர்கள்
மட்டும்
கண்ணீர் விடுவார்கள்
நானோ இறந்தால்
உலகத்தின்
ஒவ்வொரு
மனிதனும்
கண்ணீர்விட
நேரிடும்....

ஏனென்றால்
நீ
கணினியை
நேசிக்கும்
அதிகாரி
நானோ
கலப்பையை
சுவாசிக்கும்
"விவசாயி"

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (26-Feb-17, 9:22 am)
பார்வை : 168

மேலே