போராடி ஜெயித்திடு தமிழினமே -கங்கைமணி

தரணியில் சிறந்த தமிழினமே !
தன்னிலை அறியாதிருப்பது ஏன் ?!
"கார்ப்பரேட்"உன்னை அழிக்கிறது,
காகித அடிமையாய் மாய்க்கிறது.

கருவக்காட்டை அழிக்கணுமாம்
"கவர்மெண்ட்" சட்டம் இயற்றிடுமாம்.
உன்னை ஒருபுறம் திருப்பிவிட்டு
உன் நிலத்தைக் கெடுக்க முயல்கிறது!

மீத்தேன் திட்டம் தொடங்கியது
மீண்டும் துயரம் தொடர்கிறது…,

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை-நீ
முயன்றே தடுத்திட வேண்டாமோ ?!
மண்ணும் பெண்ணும் ஒன்றண்டோ -அதை
மலடாய் மாத்திட விடலாமோ?

அங்கம் எல்லாம் சிலிர்க்கிறது
அதைக்கேட்டால் மனதே வலிக்கிறது,
மண்ணில் ..,
பெரும்பெரும் துளைகளை இடுவாராம்,
பெரும் குழாயையும் அதனுடன் இணைப்பாராம்
வேதிப்பொருட்களை விடுவாராம்,அதை
வெடிவைத்து வெடிக்கச்செய்வாராம்
மண்ணுக்கடியில் பூகம்பமாய்
மின்னலின் வடிவில் அதிசயமாய்
பாறைகள் பிளந்து போயிடுமாம்,அதில்
நிறைந்தே மீத்தேன் வழிந்திடுமாம்.,

இதிலென்ன தவறென்று கேட்போரே
இரும்பினில் இருதயம் உடையோரே.
இதுதரும் பாதிப்பை அறிவீரோ
இருளுக்குள் இருந்திட துணிவீரோ.

கழிவுகள் கசிந்து வெளியேறும்,அது
நிலத்தடி நீரினில் கலந்துவிடும்,நம்
நிலத்தையும் அதுவே கெடுத்துவிடும்.
பெரும் மரங்களும் கூட அழிந்துவிடும்
சிறு புற்பூண்டுகள் கருகிவிடும் !

காற்றில் கார்பன் கலந்துவிடும்
கருமுகில் கூட மறைந்துவிடும் !
மண்ணில் உயிர்கள் வாழாது
மழையும் சரியாய் பொழியாது!

விவசாயம் மெதுவாய் அழிந்துவிடும்
வேர்விட்டு வறட்சி விருட்சமுறும்.
தர்ச்சார்பு வாழ்வு மறைந்துவிடும்
தன்மானம் இழக்கும் நிலையும் வரும்.

மண்ணின் வளங்கள் அழிந்தாலே
மனிதர் வாழ்வும் அழிந்திடுமே !
மாணத்தமிழா மறவாதே-நீ
மண்ணை கெடுத்து வாழாதே !

அரசே நம்மை அழிக்கிறது ,இதில்
அரசியல் செய்து பிழைக்கிறது !
தமிழா இனியும் தூங்காதே,நம்
தலைவிதி இதுவென்று ஒதுங்காதே !

பெரும் துயரம் இருக்குதுன் அருகினிலே-நீ
பொறுமைகாப்பதில் அர்த்தமில்லை!
பொங்கிஎழுந்திடு என் தமிழா !
பெரும் புரட்சியை முன்னெடு என் தமிழா !

போர்க்குணம் நமக்கு புதிதல்ல,அது
பூமியை காப்பதில் தவறல்ல.
புலிகளின் வழித்தடம் நமக்கிருக்கு
பண முதலையை எதிர்த்திட பயமெதற்கு!

மண்ணுக்காகப் போரிடுவோம்
மற்ற உயிர்களுக்காக வாதிடுவோம்
உலகில் உன்னத விவசாயி,அவர்
உயிர்விடும் முன்னே காத்திடுவோம் !

மீத்தேன் மண்ணை அழித்துவிடும்
மீண்டும் பஞ்சம் தழைத்துவிடும்
போராடி ஜெயித்திடு எண்ணினமே !
புவியை காத்திடு தமிழினமே !
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (26-Feb-17, 3:11 pm)
பார்வை : 106

மேலே