முகநிலவும் விழிமீன்களும் - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை

முகநிலவும் விழிமீன்களும் முழுதாகப் பெற்றவளே !
அகமலர்ந்தே உபசரிக்கும் அகமுடையாள் நீயன்றோ!
சகத்தினிலே எனக்குந்தான் சரிபாதி ஆகிவிட்டாய் !
மகரந்த மலர்வாசம் மனையாளின் கொண்டையிலே !


விழிமீன்கள் கொல்லுதடி விந்தையடி நீயெனக்கு.
மொழிபலவும் பேசுகின்றாய் மோகமுள்ளே என்செய்வேன் .
வழிநெடுக உன்நிலைவில் வழிமறந்தே போகின்றேன் .
அழிகின்ற யாக்கைதான் ஆனாலும் நீவேண்டும் !!!


மந்திரமாம் காதலிலே மயங்கிநானும் நின்றிடவே
அந்தநாளின் நினைவுகளில் அகலவில்லை அன்புமனம் .
இந்தநாளும் எண்ணியெண்ணி இனிமையினை உணர்கின்றேன் .
எந்தநாளும் நீவேண்டும் என்னவளே என்னருகில் !


பெண்மகளே பேசிடுவாய் பேதைமனம் தேடுகிறதே
கண்களினால் நீவருடக் காதலினால் நோயுறவும்
வண்ணமகள் வாய்திறந்து வாட்டத்தைப் போக்கிடுவாய் !
எண்ணமெலாம் உன்னிடமே எத்திக்கும் நீயடியோ !


கலைமகளே என்னருகில் காதலினால் வந்திடுவாய்
மலைமகளே மரகதமே ! மறக்காதே என்னையும்தான் !
சிலைபோன்றே இருக்கின்றாய் சிற்பிசெய்த கலையழகே !
மலைபோன்ற துன்பங்கள் மாணிக்கமே மாற்றவாராய் !!!!


என்னருகில் நீயிருந்தால் எல்லையிலா இன்பங்கள்
உன்கண்கள் பேசிடுமே உருவமிலா உரையாடல் .
பன்மொழியும் காட்டிடுவாய் பருவமகள் நீதானே .
என்மொழியும் மறந்திடுமே என்செய்வேன் சொல்வாயே !


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Feb-17, 10:38 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 57

மேலே