வெற்றியை நீ வசமாக்கு

சாதனைக்கு வயதுமில்லை சாதிக்கத் தடையுமில்லை
ஆதலினால் முயன்றிடுவாய் அச்சத்தை அகற்றிடுவாய்
சீதனமாய்த் துணிவிருக்க செங்கதிராய் விரிந்திடுவாய்
வேதனைக்கு முடிவுகட்ட வேங்கையெனப் பொங்கிடுவாய் !

முன்னேற்றப் பாதையிலே முள்தைத்தால் பிடுங்கியெறி
முன்வைத்த காலையென்றும் முடிக்காமல் எடுக்காதே
புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் பூநாகம் கண்டுபிடி
வன்கொடுமை தனைக்கண்டால் வாளுருவிச் சாய்த்துவிடு !

நடுக்கடலில் சிக்கிடினும் நம்பிக்கை இழக்காதே
துடுப்பாகத் துணிவொன்றே துணைநின்று கரைசேர்க்கும்
தொடுவானம் தூரமில்லை தொடுநாளும் தொலைவிலில்லை
மிடுக்குடனே நடைபோடு வெற்றியைநீ வசமாக்கு !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Feb-17, 3:14 pm)
பார்வை : 146

மேலே